வரலாற்றைத் துரத்தும் ஆஸ்ட்ரேலியா!

சனி, 19 ஜனவரி 2008 (17:59 IST)
பெர்த் டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு இந்தியா கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிபெற இலக்கு 413 ரன்கள். ஆனால் நே‌ற்று 2 விக்கெட்டுகள் விழுந்து விட்டன. இந்த டெஸ்டில் ஆஸ்ட்ரேலியா வெற்றிபெற்றால் தொடர்ச்சியான 17வது வெற்றியைபெற்று வரலாறு படைக்கும்.

ஆஸ்ட்ரேலிய மண்ணில், ஏன் ஆஸ்ட்ரேலிய அணியே எங்கும் இவ்வளவு பெரிய இலக்கை துரத்தி வெற்றி கண்டதில்லை என்பதும், டான் பிராட்மேன் தலைமையில் 1948ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக லீட்ஸில் 404 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய அணி இம்மாதிரியான இலக்கை எடுத்து வெற்றி பெற்றதில்லை. எனவே ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால் அது தொடர் வெற்றி என்பது மட்டுமின்றி மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக துரத்தியது என்று இரட்டை வரலாறு படைக்கும்.

ஆனால் இந்த இரட்டை வரலாற்றுக் கனவு இன்றைய ஆட்டத்தின் இறுதியில் சற்றே குலைந்திருக்கும். ஏனெனில் எந்த ஒரு வெற்றிகரமான துரத்தலுக்கும் துவக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கவேண்டும். ஆஸ்ட்ரேலியா அணியின் துவக்க வீரர்கள் அனுபவமற்றவர்கள் என்பதை இர்ஃபான் பத்தான் நிருபித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய அணியினரால் ஸ்விங் பந்து வீச்சை நிதானமாக, பொறுமையாக ஆட முடியாது. ஆதிக்கம் செலுத்துவதுதான் சிறந்த வழி என்பது அவர்களின் (பிடி) வாதம். எனவே விக்கெட்டுகள் விழும் வாய்ப்புகள் அதிகம். அனைவருமே ஓரளவிற்கு தாக்குதல் ஆட்டம் ஆடக்கூடியவர்களே என்ற விதத்தில் அபாயமான வீரர்களே. இதுதான் ஆஸ்ட்ரேலிய அணியின் பலம் பலவீனம் ஆகிய இரண்டுமே.

ஆனால் வெற்றியை நாம் சுலபமாக பெற அனுமதிக்க மாட்டார்கள் என்பது உறுதி. இந்தியர்களும் சுலபமாக இந்த வெற்றி வாய்ப்பை நழுவிச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

கும்ளே கொடுக்கும் நெருக்கடியை ஆஸ்ட்ரேலியா சமாளித்து அதன் பிறகு வெற்றிக்கான ஆட்டத்தை ஆடவேண்டும். இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிவருகிறது ஆஸ்ட்ரேலியா. பெர்த் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்திய பெருமை இந்தியாவிற்கு மட்டுமெ சொந்தமாகலாம். சிட்னி டெஸ்ட் போட்டி இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்ட விதத்திற்கு ஒரு நீதி கிடைக்கவேண்டுமென்றால், அது இந்திய வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்