ரெய்னாவை நீக்கிவிட்டு சேவாகை பின்னால் களமிறக்கவேண்டும்!

செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (17:07 IST)
நியூசீலாந்துக்கு எதிராக இந்தியா 2- 0 என்று டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. வெற்றியடைந்துவிட்டால் இந்திய மனங்கள் தனிப்பட்ட தோல்விகளை, சொதப்பல்களை எப்போதும் மறக்கத் துணிவது வழக்கம்தான்.

கோலி, தோனி, அஷ்வின், ஓஜா, புஜாரா தவிர இந்தத் தொடரில் பாசிடிவாக எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.
FILE

கவுதம் கம்பீர், விரேந்திர சேவாகும் (கடைசி இன்னிங்ஸ் நீங்கலாக) 50ரன்களை சேர்ந்து 2011-ற்குப் பிறகு எடுத்ததாகத் தெரியவில்லை. ஏறத்தாழ வெங்கடேச பிரசாத்தும், ஸ்ரீநாத்தும் விளையாடுவது போல் இருக்கிறது!

ரெய்னா ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தில் மட்டுமல்ல மேற்கிந்திய தீவுகளிலும் எழும்பி வரும் பந்துகளுக்கு எதிராக பூஜ்ஜியமாக உள்ளார். முதல் டெஸ்டில் 3 ரன்கள் இரண்டாவது டெஸ்டில் இப்போது 55 மற்றும் 0. கடந்த 10 இன்னிங்ஸ்களில் ரெய்னாவின் ஸ்கோர் 78, 12, 1, 4, 10, 0, 0, 3, 55 மற்றும் 0, மொத்தம் 163 ரன்கள் இதில் 3 பூஜ்ஜியம் இரண்டு அரைசதம்.
டெஸ்ட் நிலைக்கு இவர் இன்னும் தயாராகவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை பாதுகாப்பதில் தோனிக்கு ஒரு முக்கிய கடமை இருப்பது போல் தெரிகிறது. இதனால் இவ்வளவு மோசமான ஆட்டங்களுக்குப் பிறகு ரெய்னா இங்கிலாந்து இங்கு வரும்போது வெள்ளை உடை தரிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஆர்.பி.சிங், வினய் குமார், ரவீந்திர ஜடேஜா என்று தோனி ஆதரவு அளிக்கும் எந்த வீரரும் இது வரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. சாதாரணமாகக் கூட ஜொலிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

கம்பீர் கடந்த 40 இன்னிங்ஸ்களில் அதாவது 22 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. கேரி கர்ஸ்டன் கோச்சாக இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் அவர் சீராக 80, 93, 64 என்று ரன்கள் எடுத்தார். 8- 0 தொடரில் ஆஸ்ட்ரேலியாவில் ஒரேயொரு அரை சதம் அது சதத்திற்கு மிக அருகில் வந்து கோட்டை விட்டார். 8 தொடர்களுக்கு முன்பு வங்கதேசத்திற்கு எதிராக 2010ஆம் ஆண்டு கம்பீர் 116 ரன்கள் எடுத்ததே கடைசி டெஸ்ட் சதமாகும்.

விரேந்திர சேவாக் 30 இன்னிங்ஸ்களாக சதம் எடுக்கவில்லை. அதாவது 14 டெஸ்ட் போட்டிகள் 5 தொடர்கள் அவர் சதம் எடுக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கர் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அவர் 'கிரிக்கெட் கடவுள்' - நாம் எதுவும் கூறிவிட முடியாது! கால்கள் நகரவில்லை என்று சுனில் கவாஸ்கரே கூறிவிட்டார் வேறு யார் சொன்னால்தான் அவர் கேட்பார் என்று தெரியவில்லை.

இப்போதைக்கு அஜின்கியா ரஹானேயை கம்பீருடன் துவக்கத்தில் களமிறக்கிப் பார்க்கலாம். ரெய்னாவை டெஸ்ட் அணியிலிருந்து தூக்கி விட்டு அந்த டவுனில் சேவாகைக் களமிறக்கவேண்டும். சேவாக் இன்னும் சிறிது காலம் இந்தியாவுக்கு ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டும் என்று நினைத்தால் அவரே இந்த முடிவுக்கு வரவேண்டும்.

அன்டர் 19 உலகக் கோப்பையை வென்ற அணியிலிருந்து உன்முக்த்த் சந்தை விரைவில் இந்த டெஸ்ட் அணியில் நுழைக்கவேண்டும். மனோஜ் திவாரி உள்ளே அழைக்கப்படவேண்டும். இப்போதைக்கு புஜாரா, கோலி நன்றாக செட்டில் ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மற்ற இடங்கள் இந்திய அணி அம்போவாக இருக்கிறது.

அஜின்கியா ரஹானே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால் சிறிது காலத்திற்கு ஆகாஷ் சோப்ராவையாவது துவக்கத்தில் களமிறக்கிப் பார்க்கலாம். கம்பீருக்கு இன்னும் 10 டெஸ்ட் போட்டிகள் வழங்கலாம் சொதப்பினால் தூக்கப்படவேன்டியதுதான். ஆனால் ரெய்னாவுக்கு இந்த டெஸ்ட் சூழல் சரிப்பட்டு வரவில்லை. லெக் திசையில் அவுட் ஆகிறார். டெஸ்ட் வீரர் எங்கெல்லாம் அவுட் ஆக மாட்டார்களோ அங்கெல்லாம் அவுட் ஆகிறார் ரெய்னா.

பலமான அணிகளுக்கு எதிராக தோனி ஒரு சிறந்த கேப்டன் இல்லை என்று 8- 0 உதையில் தெரியவந்தது. எனவே மீன்டும் அவரை விக்கெட் கீப்பராகவே வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிக்காவது ரெய்னா இடத்தில் கயீபை கொண்டு வந்து டெஸ்ட் கேப்டன்சியை கொடுத்துப் பார்க்கலாம்.

பத்ரிநாத் வேலைக்கு ஆக மாட்டார். அவரும் இந்த அளவுக்கான சிறந்த வீரர் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்