மும்பை ரசிகர்களின் பிராந்திய வெறி- பாராட்டும் சுனில் கவாஸ்கர்!

திங்கள், 29 ஏப்ரல் 2013 (14:31 IST)
FILE
ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பரிசளிப்பு விழாவில் பெங்களூரு கேப்டன் கோலியை ஏமாற்றுக்காரர் என்று மும்பை ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதனால் கோலி மனமுடைந்து நானும் இந்திய அணிக்காக விளையாடுகிறேன் என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்று வருந்தியுள்ளார்.

இந்தியாவின் 'கடவுள் கிரிக்கெட் வீரர்' சச்சின் டெண்டுல்கரையே ஒருமுறை 7 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக சரியாக ஆடவில்லை என்று கேலி செய்து சப்தம் எழுப்பியவர்கள்தான் இந்த மும்பை ரசிகர்கள்.

நவம்பர் மாதம் ஹர்பஜன் சிங்கை கடுமையான வசை வார்த்தைகளைக் கொண்டு ஏசிய ரசிகர் மைதானத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இரானி கோப்பை போட்டியின் போதும் ஹர்பஜனை மீண்டும் ரசிகர்களின் ஒரு பகுதியினர் கடுமையாக கேலி பேசினர், கெட்டவார்த்தைகளைப் பேசியுள்ளனர்.

சனிக்கிழமையன்று கெய்லை கண்டு அஞ்சிய மும்பை ரசிகர்கள் கோலியை கடுமையாக ஏசினார். மும்பை பேட்ஸ்மேன் அம்பட்டி ராயுடு, கோலியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அப்போது பந்துவீசிய வினய் குமாரும், அம்பட்டி ராயுடுவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதும், இந்த ரன் அவுட்டுக்கு ஒரு காரணம்.

மேலும் 3-வது நடுவரை அணுகியே கோலி இந்த ரன் அவுட்டை பெற்றார். இதனால் அதிருப்தியடைந்த மும்பை ரசிகர்கள் கோலிக்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பியதோடு, அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினர். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியின்போதும் மும்பை ரசிகர்கள், கோலிக்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினர்.

ஆனால் சுனில் கவாஸ்கரோ தனது டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்தியில் மும்பை ரசிகர்களுக்கு "பெரிய இதயம்" "பெருந்தன்மையானவர்கள்" எதிரணியினரையும் பாராட்டும் பெரிய மனது படைத்தவர்கள் என்றெல்லாம் கவாஸ்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். கோலியைப் போய் ஏதோ அன்னிய மனிதர் போல் கேலி பேசுவதுதான் மும்பையின் பெரிய மனசுத் தனமா?

FILE
"ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்கள் ஏன் இந்தளவுக்கு கிளர்ச்சியடைகிறார்கள் என்று தெரியவில்லை. தங்களால் கிண்டல் செய்யப்படும் வீரர்கள் தங்கள் நாட்டுக்காகவும் விளையாடுகிறார்கள் என்பதை ரசிகர்கள் மறந்துவிட்டனர். ரசிகர்களின் இதுபோன்ற செயல்கள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். நான் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும்போது அவர்கள் என்னை உற்சாகப்படுத்தப் போகிறார்கள். ஆனால் அது சரியானதாக இருக்காது.

வீரர்கள் எப்படி அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்பதை பெங்களூருக்கு வந்து பாருங்கள். அங்கு யார் வென்றாலும், தோற்றாலும் எல்லா அணிகளின் கேப்டன்களும், இந்திய வீரர்களும் ரசிகர்களால் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

நல்ல கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் அங்கீகரிக்க வேண்டும். இங்கு மட்டும் ரசிகர்கள் ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறார்கள், மற்ற அணிகளை ஏன் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்ற கோலியின் விமர்சனத்தில் நியாயம் இருப்பதாகவே படுகிறது.

மும்பை மட்டும் என்றல்ல ஐ.பி.எல். கிரிக்கெட் பொதுவாகவே ஒரு பிராந்திய வெறியைக் கிளப்பிவிடுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் அந்தப் பெயரில் சென்னை உள்ளது மற்றபடி சென்னை வீரர்களா அதில் முழுக்கவும் இடம்பெறுகின்றனர்? சென்னையை விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது பலருக்கு.

கொல்கட்டா கேட்கவே வேண்டாம்! கேரளா மற்றுமொரு இடம் பிராந்திய வெறி தலை தூக்குமிடம்.

ஆனால் சென்னை ரசிகர்கள்தான் இந்தியாவிலேயே சிறந்த ரசிகர்கள் மைதானத்தில் கல்லை விட்டெறிவது, பாட்டிலை விட்டெறிவது, வீரர்களை கன்னாபின்னாவென்று ஏசுவது என்று எந்த வித அத்துமீறலையும் சென்னை ரசிகர்கள் இதுவரை செய்ததில்லை.

எனவே கவாஸ்கர் மும்பை ரசிகர்களை முன் வைத்து கூறிய கருத்து சென்னை ரசிகர்களுக்குத்தான் சாலப்பொருந்தும்.

வெப்துனியாவைப் படிக்கவும்