மீண்டும் கேட்போம் டெஸ்ட் கேப்டன்சிக்கு தோனி தகுதியானவர்தானா?

புதன், 13 பிப்ரவரி 2013 (17:56 IST)
FILE
நிறைய வென்றிருக்கிறார், இந்தியாவை முதலிடம் அழைத்து சென்றார் என்பதெல்லாம் தோனியின் கேப்டன்சி திறமையை பற்றி கேள்வி எழுப்பபடும்போதெல்லாம் எழும் ஒரு பலவீனமான வாதம்! அயல்நாட்டில் 8- 0 போதாது என்று உள்நாட்டிலும் இங்கிலாந்திடம் 1- 2 என்று தோல்வி அடைந்தது இந்திய அணி. ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் சிறந்த தலைவர் என்பதில் ஐயமில்லை. T20 வடிவம் கூட இப்போதெல்லாம் தோனியின் கையை விட்டு நழுவிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம் கவலை ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு தோல்வியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதே!

சரி, அதற்கு தோனி மட்டுமே பொறுப்பாக முடியுமா? என்று கேட்கலாம்! ஆனால் பிரச்சனை வெற்றி தோல்வி அல்ல. டெஸ்ட் கிரிக்கெட் குறித்த அவரது அணுகுமுறை டெஸ்ட் போட்டி பற்றி தெரியாதவர் போலவே உள்ளது. அணித் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்ரீகாந்த் விலகிய பிறகு கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருந்தும்: ஆட்டம் கையை விட்டுப் போகும்போது தோனி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்!

இதற்கு உதாரணங்களைக் கூறமுடியும்:

இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது லார்ட்ஸ் டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் இஷாந்த் இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்து 62/5 என்று இருந்தபோது உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரை சுரேஷ் ரெய்னாவிடம் கொடுத்த கேப்டன்சியின் மகத்துவத்தை எந்த நிபுணர்களாலும் புரிந்து கொள்ளமுடியவில்லை.இங்கிலாந்து கொல்லு கொல்லுவென்று கொன்றது. ஜெயிக்கவேண்டிய டெஸ்ட் போட்டி தோல்வியில் முடிந்து அதுவே 4- 0 வாகவும் பரிணமித்தது.

நாட்டிங்காமிலும் 124/8 என்று இங்கிலாந்து திணறிக் கொண்டிருந்தது ஆனால் பிராட், ஸ்வான் என்று பவுலர்களையெல்லாம் பேட்ஸ்மெனாக்கிய பெருமை தோனியின் கேப்டன்சி மகத்துவத்தைச் சார்ந்தது. எதிரணி வீரர்கள் இரண்டு பவுண்டரிகளை சேர்ந்தாற்போல் அடித்தால் போதும் உடனே டீப் பாயிண்ட், டீப் ஸ்கொயர் லெக் என்று வீரர்களை விரட்டியடிப்பார் தோனி. அஷ்வின் பந்து வீச்சிற்கு டீப் பாயிண்ட் வைத்து வீசிய மகத்துவம் தோனியின் கேப்டன்சி மகத்துவம்!

இங்கிலாந்து என்ன சென்னை சூப்பர் கிங்ஸா? அல்லது 20 ஓவர் முடிந்தவுடன் பார்ட்டி உண்டா என்ன? இங்கிலாந்துக்கு எதிராக துவக்கத்திலேயே ஸ்பின்னரை கொண்டு வருகிறார். அலிஸ்டர் குக் போன்ற வீரர்கள் என்ன மாதிரி விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரது பலம் என்ன என்பதையெல்லாம் தோனி பார்ப்பதேயில்லை. உலகில் மற்ற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் எப்படி விளையாடுக்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல.

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் ஒரு பயந்தாங்கொள்ளி கேப்டன். சேஃப்டி பர்ஸ்ட் என்று முதலிலிருந்தே சேப்டியாக விளையாடி கடைசியில் தோற்பார். 2010 கொழும்புவில் இதே மனோ நிலைதான் வெளிப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து டர்பனிலும் இதே பயந்தாங்கொள்ளி தனம் வெளியானது. மேர்கிந்திய அணிக்கு எதிராக 15 ஓவர்களில் 86 எடுத்தால் வெற்றி ஆனால் ஆட்டத்தை முடித்துக் கொண்டார் தோனி.

சமீபத்திய உதாரணம் இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் இந்தியா 33 ரன்கள் பிந்தங்கியிருந்தது. அந்த சமயத்தில் அடித்து ஆடவேண்டிய ஸ்லோ பிட்ச்தான் ஆனால் 62 நிமிடங்களில் 29 ரன்களை எடுத்தது இந்தியா.

ஆனால் அவர் திராவிடை வம்புக்கு இழுத்தார் அனாவசியமாக. இந்தத் தோல்வியெல்லாம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, "2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெளியேற்றத்திற்கு நெருக்கமான தோல்விகள் இல்லை" என்றார். இது திராவிட் கேப்டன்சையைப் பற்றி குறிவைத்துப் பேசிய பேச்சாகும். நீ ஏம்ப்பா தோத்தன்னு கேட்டா? மணி ரத்னம் பட ஸ்டைலில் அவன் தோத்தானே அவன ஜெயிக்கச்சொல்லு இவன் தோத்தானே இவன ஜெயிக்கச்சொல்லு என்றால் வேலைக்கு ஆகுமா?

FILE
கங்கூலி, ஜான் ரைட், திராவிட், சேவாக், சச்சின், லஷ்மண் உள்ளிட்ட பேட்ஸ்மென்கள், ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா, கும்லே, ஹர்பஜன், ஸ்ரீசாந்த், முனாஃப் படேல், ஆர்.பி.சிங், ஏன் இர்பான் பத்தான் ஆகியோரின் பங்களிப்பில் 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா 2011 வரை 37 அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. பாண்டிங் தன் கேப்டன்சியில் மட்டும் அயல்நாடுகளில் வென்றதாகும் இது.

1968 முதல் 1993 வரை இந்தியா 25 ஆண்டுகளில் 13 அயல்நாட்டு டெஸ்ட்களையே வென்றிருந்தது. ஆனால் 2000 முதல் 2009 வரையே இந்தியா 19 வெளிநாடு டெஸ்ட்களை வென்றுள்ளது. தோனி நம்பர் 1 நிலைக்கு இட்டு சென்றார் என்று தோனிக்கு இன்று விசிறி விடுபவர்கள் அதிகம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் 2000ஆம் ஆண்டு முதல் கங்கூலி துவங்கி வைத்த இந்த டிரெண்ட் பற்றி யாரும் பேசுவதில்லை. தற்போது தோனியின் தலமையில் மீண்டும் இந்தியா தோல்வி முகம் காட்டி அழுகின்றது.

இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் "களைப்பு" கார்ணமாக அவர் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அவர் அதற்கு முன்பு விளையாடியது 25 போட்டிகளில் மட்டுமே. ஆனால் ஏப்ரல் 18 முதல் ஜூன் 1 வ்ரை அவர் ஐ.பி.எல். கிரிக்கெடில் ஏகப்பட்ட போட்டிகளை விளைஅயாடினார். இது முதல் ஐ.பி.எல். தருணமாகும். ஆனால் ஜூன் 8 முதல் 14ஆம் தேதிவரை நடைபெற்ற கிட்பிளை கோப்பைப் போட்டிகளை துறந்தார். ஆனால் அப்போதும் அவர் டெஸ்ட் போட்டிகளைத் துறந்தார்.

அப்போது அவருக்கு அணி நிர்வாகம் சார்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. அதாவது இது காயத்தினாலா அல்லது அவரது சாய்சா என்று கேட்கப்பட்டதாக செய்திகள் அடிபட்டன. ஆனால் தோனி அதற்கு பதில் எதையும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பகல் கிரிக்கெட் அவருக்கு பிடிக்கவில்லை என்று அவரது பல கூற்றுகளில் தொனித்துள்ளது. ஆனால் 12 டெஸ்ட் போட்டிகளில் 10 போட்டிகளில் தோற்று விட்டு 2007 உலகக் கோப்பை தோல்வியை விட இது ஒன்றும் பெரிதல்ல என்ற தொனியில் பேசுவது எதன் அடிப்படையில்?

அணியில் உள்ள இளம் வீரர்கள் என்ன கருதுவார்கள்? உள்நாட்டில் கொண்டுள்ள வெற்றிச் சாதனைகளை இழந்து தோல்வியுறுவது ஒரு பொருட்டல்ல என்றா?

எனக்கு சரியான ரீப்ளேஸ்மென்ட் இருந்தால் அதற்கு நான் திறந்த மனௌதுடன் இருக்கிறேன் என்று தோனியே கூறியுள்ளார். கோலி இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது. புஜாராவிடம் கொடுத்தால் கேப்டன் பதவி பவரது பேட்டிங்கை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கிரேம் ஸ்மித்தை தென் ஆப்பிரிக்கா கேப்டனாக்கும்போது அவர் 8 டெஸ்ட் பொட்டிகளையே விளையாடியிருந்தார். ஆனால் கோலி 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டார்.

இல்லையென்றால் சேவாக் அடுத்த தேரிவு. அவர் மிடில் ஆர்டரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். லஷ்மண், திராவிட் இல்லாதபோது லஷ்மண் டவுனில் சேவாக் ஒரு பெரிய அச்சுறுத்தலாக திகழ்வார் அவரிடம் கேப்டன்சியைக் கொடுத்து ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முயறிருக்கவேண்டும். ஆனால் எந்த ஒரு பரிசோதனையையும் செய்ய மாட்டோம், பிசிசிஐ தலைவருக்கு வேண்டப்பட்டவரை மாற்ற மாட்டோம் என்கிற ரீதியில் செயல்படுவது எங்கு கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை.

எது எப்படியிருந்தாலும் தோனி தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் கடினமான சவால்களுக்கு திறந்த மனதுடன் போராடி ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தப் பாடுபடவேண்டும். அதனை விடுத்து இது ஒரு பெரிய தோல்வியல்ல, 2007 உலகக் கோப்பை தோல்விதான் பெரிது என்றும் 2015-ற்கு அணியைத் தயார் செய்கிறோம் என்றும் கூறிக் கொண்டு ஓட்டுவதினால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மற்றொரு உதையைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

நல்ல கேப்டனுக்கு அடையாளம் அடுத்தவர் அறிவுரையைக் கேட்பது. திராவிட் கூட சமீபத்தில் தோனி பற்றி குறிப்பிடுகையில் அவர் தன்னைப் பற்றிய விமர்சனஙகளுக்கு காது கொடுக்கவேண்டும் என்றார். வாசிம் அக்ரம், இயன் சாப்பல், போன்றோர் தோனியின் நன்மைக்காக கூறிய விமர்சனங்களையும் அறிவுரைகளியும் திறந்த மனதுடன் ஏற்று செயல்படவேண்டும் கேப்டன் கூல்! செய்வாரா மிஸ்டர் கூல்?

வெப்துனியாவைப் படிக்கவும்