மதுபான விளம்பரத்தை ஏற்க மறுத்தார் சச்சின் டெண்டுல்கர்
சனி, 11 டிசம்பர் 2010 (14:41 IST)
ஆண்டொன்றுக்கு ரூ.20 கோடி வருவாய் பெற்றுத்தரும் மதுபான நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தங்களை ஏற்கமுடியாது என்று இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உடலுக்குத் தீங்கு விளைவுக்கும் இது போன்ற பொருட்களின் விளம்பரத்தில் தான் நடிக்கப்போவதில்லை என்ற அவரது கொள்கைக்கு ஏற்ப அவர் இந்த முடிவுகளை எட்டியுள்ளதாய் பத்திரிக்கை செய்திகள் தெரிவித்துள்ளன.
யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விஸ்கி பிராண்ட் ஒன்றின் மறைமுக விளம்பரத்தில் தோன்றியதற்கு சீக்கிய மதத்தலைவர்கள் அவர்களிருவரையும் கண்டித்துள்ளது.
ஆனால் இந்த விஷயத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முன்னோடிகள் உள்ளனர். பேட்மிண்டன் நட்சத்திரம் புல்லேலா கோபிசந்த்தின் முடிவு சச்சின் டெண்டுல்கரின் முடிவைக் காட்டிலும் இன்னும் மேலானது. அவர் குளிர்பான நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தத்தையே உதறினார்.
நிறைய தடகள வீரர்கள் புகையிலை மற்றும் மதுபான விளம்பர ஒப்பந்தங்கள் பலவற்றை உதறியுள்ளனர்.
நடிகர் அட்சய் குமார் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
அபய் தியோல் சில சிகரெட் விற்பனை நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மறுத்ததோடு அதிசயத்தக்க வகையில் அழகு கிரீம்கள் விளம்பர ஒப்பந்தங்களையும் துறந்துள்ளார்.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஒன்றைச் செய்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய விஷயமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கி பார்க்கின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள் அடங்கிய குளிர்பான விளம்பரங்களில் சச்சின் டெண்டுல்கர் தோன்றியுள்ளார். குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்தடங்கிய அந்த குளிர்பானத்தை அவர் பரிந்துரை செய்வது போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அதே பூச்சிக்கொல்லி மருந்துகள் அடங்கிய குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நீராதாரங்களை அழித்து வருகின்றன. இந்த விளம்பரங்களில் நடித்து ஏகப்பட்ட பணம் ஈட்டிய சச்சின் டெண்டுல்கருக்கு சமூக அக்கறை இல்லை என்று ஒருவரும் கண்டித்ததாகத் தெரியவில்லை.
ஆனால் இப்போது மதுபான விளம்பர ஒப்பந்தங்களை நிராகரித்துவிட்டார் என்று பெரிய அளவில் அதுவே அவருக்கு ஒரு பெரிய விளம்பரத்தைத் தேடித் தருகிறது ஊடகங்கள்.
ஆனால் சச்சின் ஒரு எளிமையானவர்தான். அவர் விளம்பரங்களில் நடித்தாலும் தனக்கு விளம்பரம் தேடாதவர். தோனி போன்றவர்கள் யுனைடெட் பிரவெரீஸ் என்ற மிகப்பெரிய மதுபான நிறுவனத்துடன் ரூ.29 கோடி ஒப்பந்தத்தில் கையெழுதிட்டுள்ளார். இதனை ஒப்பிடும் போது சச்சினின் இந்த நிராகரிப்பு பாராட்டுக்குரியதுதான்.
அவர்களுக்கெல்லாம் பேரிய சமூக அக்கறை என்பதெல்லாம் இருக்க நியாயமில்லை. கிரிக்கெட்டை வளர்க்க அகாடமி, உதவிகள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவது என்பதை நாம் சமூக அக்கறை என்று கூறமுடியாது. அதெல்லாம் சமூக உதவிகள், மிகவும் அவசியமானதும் கூட.
பெரிய நட்சத்திரங்கள் பின்னால் சதா அலைந்து கொண்டிருக்கும் ஊடகங்கள் இதனை ஒரு பெரிய விஷயமாகச் சித்தரித்து பிம்பக் கட்டமைப்பு வேலையைச் செய்து வருகின்றன.
ஊடகங்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நட்சத்திரங்கள் எது செய்தாலும் அது செய்திதான்! அவர்கள் சிகரெட் பிடித்தாலும் செய்தி பிடிக்காவிட்டாலும் செய்தி; மது அருந்தினாலும் செய்தி மது அருந்தாவிட்டாலும் செய்தி, ஒழுக்கமாக இருந்தாலும் செய்தி ஒழுக்கமாக இல்லாவிட்டாலும் செய்தி என்று இரட்டைத் தர்க்கத்தை (double logic) கடைபிடித்து வருகின்றன.
குளிர்பான நிறுவனங்களின் அடாவடிகளெல்லாம் சச்சின் டெண்டுல்கருக்கு தெரிந்திருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவர் இதையும் யோசிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
உதாரணத்திற்கு பெப்சி, கோககோலா விளம்பரங்களில் நடிக்கமாட்டேன் என்று அவர் தெரிவித்திருந்தாலே போதும். ஏனெனில் பல இளைஞர்களும், சிறுவர்களும் பின்பற்றும் ஒரு முன்னோடியாகத் திகழும் சச்சின் டெண்டுல்கர் விரும்பாத ஒரு பானத்தை அவர்களும் குடிப்பதை விட்டுவிட நேரிடலாம். இது அந்தச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நன்மை பயக்கும்.