பென்சன் தீர்ப்பு கிரிக்கெட் விதிகளுக்கு முரண்பட்டதே!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (17:39 IST)
சிட்னி டெஸ்டில் படு கேவலமான தீர்ப்புகளை கொடுத்து ஆஸ்ட்ரேலிய அணியின் வெற்றிக்கு வித்திட்ட நடுவர்களில் ஒருவரான ஸ்டீவ் பக்னரை நீக்கவேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று அவரை பெர்த் டெஸ்ட் பணிவிடைகளிலிருந்து ஐ.சி.சி. நீக்கியுள்ளது.

webdunia photoFILE
இதே போல் சிட்னியில் பணியாற்றிய இங்கிலாந்து நாட்டு நடுவர் மார்க் பென்சனையும் ஒரு சில தொடர்களுக்கு எந்த அணியும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. நெருக்கமான முடிவுகளை 3ம் நடுவரிடம் விசாரிக்காமல் தன்னிச்சையாக பக்னர் செயல்பட்டார் என்றால், மார்க் பென்சன் செய்தது கிரிக்கெட் விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது என்பது உறுதி.

2வது இன்னிங்சில் கங்கூலியின் மட்டையில் பட்டு வந்த பந்தை மைக்கேல் கிளார்க் சரியாக பிடித்தாரா இல்லையா என்பதை அவர் தன்னிச்சையாக அவுட் கொடுத்திருக்கலாம். சந்தேகமிருந்தால் (முதலில் சந்தேகம் இருந்தால் அதன் பலனை பேட்ஸ்மெனுக்கு சாதகமாக வழங்கவேண்டும் என்ற நடைமுறை எங்கே போயிற்று? மோசடி செய்வதற்காக பாரம்பரிய நடைமுறைக்கும் சாவு மணி அடிக்கப்பட்டு விட்டதோ?) ஸ்கொயர் லெக் திசையில் இருக்கும் மற்றொரு நடுவரிடம் விசாரித்திருக்க வேண்டும். அதை விடுத்து ரிக்கி பாண்டிங்கிடம் அது முறையான அவுட்தானா என்று கேட்டு தன் முடிவை அறிவித்தது விதிகளுக்குப் புறம்பானது. நடுவர்களின் தீர்ப்பு என்ற சட்ட எல்லைக்குள் எந்த அணியின் தலைவருக்கும் எந்த உரிமையும் இல்லை.

பக்னரை நீக்கியது சரியென்றால், பென்சனை ஏற்றுக் கொள்வது மிகப்பெரிய தவறு. பென்சன் செய்ததுதான் மிகப்பெரிய தவறு. வெள்ளையர் என்பதற்காக பென்சனை விட்டுவிட்டார்களோ?

பிறகு இவ்வளவு தகராறுகள் நடந்தும் ரிக்கி பாண்டிங் கூறுகிறார், சர்ச்சைக்குரிய கேட்ச்கள் விஷயத்தில் ஃபீல்டர் என்ன கூறுகிறாரோ அதனை ஏற்கவேண்டும் என்று அனில் கும்ப்ளேயிடம் ஒப்பந்தம் செய்து கொண்டாராம். பேட்ஸ்மெனின் அவுட் சார்ந்த முடிவு கிரிக்கெட் விதிகளின் எல்லைக்குள் நடுவர்களால் தீர்ப்பளிக்கப் படவேண்டியது. எந்த அடிப்படையில் ரிக்கி பாண்டிங் இது போன்ற மடத்தனமான (ஏமாற்று வேலை?) உடன்படிக்கையை செய்துகொண்டார். அதே போல் எல்.பி.டபிள்யூ. விற்கு பந்து வீச்சாளர் கூறுவதையும் விக்கெட் கீப்பர் கேட்ச்சிற்கு அவர் கூறுவதையும் முடிந்த முடிவாக எடுத்துக் கொள்வதாக் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கலாமே?

பாண்டிங் இது போன்று கூறுவதே விதிகளுக்கு புறம்பானது. 3வது நடுவர் இருக்கிறார், தொழில் நுட்பம் இருக்கிறது, அனைத்திற்கும் மேலாக நடுவர் நன்றாக கவனித்து தரையில் பட்ட கேட்சிற்கு அவுட் கொடுக்க மறுத்தால், எந்த பேட்ஸ்மெனாவது தானாகவே வெளியேறுவார்களா. ரிக்கிபாண்டிங் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார், எனவே தரையில் பட்டாலும் ஃபீல்டர் அவுட் என்று கூறினால் நாம் வெளியேறிவிட வேண்டியதுதான் என்று ஆஸ்ட்ரேலிய வீரர்கள் வெளியேறுவார்களா? என்ன தமாஷ் இது! தெளிவாக திராவிடிடம் கேட்ச் கொடுத்த மைக்கேல் கிளார்க், தனக்கு நடுவர் நாட் அவுட் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் அங்கு நின்று கொண்டிருந்தார் என்பது நடுவர்களுக்கு ஏற்படும் இழுக்கு என்பதோடு பாண்டிங்கின் “ஒப்பந்தத்த” கேலி செய்வதைப் போலல்லவா இருந்தது?

கிரிக்கெட் ஆட்டத்தை நியாயமாக ஆடுவது குறித்த விதிமுறைகளில் நடுவர்களின் பொறுப்பு பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. பேட்ஸ்மென் ஒருவர் பந்தை எதிர்கொள்ளத் தயாராகும்போது எந்த ஃபீல்டரும் பேட்ஸ்மெனின் கவனத்தை திசை திருப்பும் செயலில் ஈடுபடுவது கூடாது. அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது நடுவரின் பொறுப்பு. உடனே அந்த பந்தை செத்த பந்து என்று அவர் அறிவிக்கவேண்டும் இதுதான் விதி.

தொடர்ந்து பல முறை எச்சரிக்கை செய்தும் ஃபீல்டிங் அணி வீரர் பேட்ஸ்மெனை குறித்து ஏதாவது கூறுவாரேயானால் முதலில் 5 அபராத ரன்களை அளிக்கவேண்டும். இந்த விவகாரம் குறித்து கள நடுவர்கள் ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

ஆஸ்ட்ரேலிய அணியினர் வாய் மூடாமல் தொடர்ந்து மைதானத்தில் பேசிக் கொண்டிருப்பவர்கள் என்பது உலகம் முழுதும் தெரிந்த ஒன்று. ஹர்பஜன் சிங் மீது பலவகையான அவதூறு வார்த்தைகளை பல்வேறு ஆஸ்ட்ரேலிய வீரர்கள் அன்று பிரயோகித்ததாக பீட்டர் ரீபாக் என்ற கிரிக்கெட் விமர்சகர் குறிப்பிட்டுள்ளார். அப்போது நடுவர் எங்கு போயிருந்தார். ஹர்பஜன் எதிர்வினையாற்றும் போது மட்டும் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் வேட்டை நாய்கள் போல் குவிகின்றனர், நடுவர்களும் தலையிடுகின்றனர்.

களத்தில் இது நடக்கும்போதே செத்த பந்து என்றும், 5 அபராத ரன்களையும் அறிவித்தால் ஆஸ்ட்ரேலியர்கள் ஏன் எதிர் அணி வீரர்களை வசைச் சொல் பேசப்போகின்றனர்?

எம்.சி.சி. வகுத்து இன்று பல்வேறு உறுப்பு நாடுகளின் மூத்த வீரர்கள் மற்றும் நடுவர்கள் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ள கிரிக்கெட் விதிகளை நடுவர்கள் விடாப்பிடியாக அமல் செய்தாலே போதுமானது, ஆஸ்ட்ரேலியா மட்டுமல்ல எந்த அணியும் மைதானத்தில் அசிங்கமாக நடந்து கொள்வதை தடுத்து கிரிக்கெட் ஆட்டத்தை துப்புரவு செய்திருக்க முடியும். அனைத்து விதமான தகராறுகளும் இன்று வளர்ந்ததற்கு காரணம் டிக்கி பேர்ட் போன்ற நேர்மையான, விதிகளை கடுமையாக பின்பற்றும் விடாப்பிடியான நடுவர்கள் ஐ.சி.சி. உயர் மட்டக் குழுவில் இல்லாததே.

எதிரணித் தலைவரிடம் அவுட்டா என்று மார்க் பென்சன் கேட்கிறார் என்றால் அவரை ஏன் தடை செய்யக்கூடாது? எதிரணி ஃபீல்டரையோ, கேப்டனையோ கேட்டு அவுட் கொடுக்கலாம் என்று எந்த விதிமுறையில் உள்ளது?

இவையெல்லாம் நடுவர்களுக்கோ போட்டியை நடத்திய ஐ.சி.சி. அதிகாரிகளுக்கோ தெரியாதா என்ன? இந்திய பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டது போல் சிட்னி டெஸ்ட் முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டதோ? நடந்தவை அந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்கிறது.