ஆஸ்ட்ரேலிய மண்ணில் பெற்ற அபார வெற்றிகளினால் தங்கள் திறனின் மீதான தன்னம்பிக்கை பலத்துடன் உள்ள இந்திய அணி, வங்கதேசப் பயணத்தில் வாகை சூடி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
புதிய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் தன் சொந்த அணிக்கு எதிராக உத்திகளை வகுத்துக் கொடுக்கவேண்டிய முக்கிய பொறுப்பினை ஏற்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.
இட ஒதுக்கீடு அடிப்படையில் கறுப்பரினத்தை சேர்ந்த 6 வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறவேண்டும் என்ற புதிய உத்தரவினால் தென் ஆப்பிரிக்க குழாமில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இது அவர்கள் ஆட்டத்தை பாதிக்காவிட்டாலும் வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அணித் தலைவர் ஸ்மித்திற்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளது. இது அவரது ஆட்டத்தை பாதிக்கலாம்.
புதிய உத்வேகமும், ஆக்ரோஷமும் கொண்ட இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா இந்த முறை சந்திக்கிறது. ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் தொடர் எந்த அளவிற்கு போட்டித் திறனுடன் விளையாடப்பட்டது என்பதை தென் ஆப்பிரிக்க அணியினர் அறிவர்.
இந்திய டெஸ்ட் அணி தென் ஆப்பிரிக்காவை ஒப்பு நோக்குகையில் பலமாகவே உள்ளது. சேவாக், ஜாஃபர், திராவிட், சச்சின், கங்கூலி, லக்ஷ்மண், தோனி ஆகியோர்கள் அடங்கிய பலமான பேட்டிங் வரிசையை தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சாளர்கள் முறியடிக்க கடுமையாக பாடுபடவேண்டும்.
webdunia photo
WD
குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த புதிய உத்திகளை தென் ஆப்பிரிக்கா கண்டு பிடித்துக் கொள்வது நல்லது.
இந்திய அணிக்கு அதன் சொந்த மண்ணில் அதிர்ச்சி அளிக்க முடியாது. பல்வேறு விதமான உத்திகளை கடைபிடித்து, திறமையான ஆட்டத்தின் மூலமே தென் ஆப்பிரிக்கா வெற்றியை ஈட்ட முடியும்.
webdunia photo
WD
மாறாக தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையை எடுத்துக் கொண்டால், ஸ்மித், ஜாக் காலிஸ் தவிர அனுபவமிக்க வீரர்கள் இல்லை. துவக்க வீரராக களமிறங்கும் நீல் மெக்கன்சி அணியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக டென்னிஸ் பந்து ஆட்டக்களத்தில் இரட்டை சதம் போட்டார். திறமையான சவாலான பந்து வீச்சிற்கு எதிரே அவரது திறமை இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
அதே போல் ஆஷ்வெல் பிரின்ஸ், ஹாஷிம் அம்லா ஆகியோர் திறமையான வீரர்கள் என்றாலும், சுழற்பந்து வீச்சிற்கு எதிராக நிற்பது கடினமே. ஸ்மித் நல்ல துவக்கத்தை கொடுத்தால் அடுத்தடுத்து களமிறங்குபவர்கள் காலீஸின் நிதானத்தை பயன்படுத்திக் கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டால் தோல்வியிலிருந்து தப்பும் ரன் இலக்கை எட்டலாம்.
தென் ஆப்பிரிக்காவின் பலம் அதன் பந்து வீச்சுதான். 20 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளை சாய்த்துள்ள வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தலைமை தாங்க, மக்காயா நிட்டினி, மோர்னி மோர்கெல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் இந்திய பேட்ஸ்மென்களை மிரட்டலாம். பால் ஹேரிஸ், ஜாக் காலிஸ் ரன்களை மட்டுப்படுத்தும் வேலையை திறம்படச் செய்யவேண்டும்.
ஆனால் இந்திய அணியின் பலம் என்னவெனில் 100 முதல் 150 ஓவர்கள் வரை விளையாடும் பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது என்பதே. இந்த இலக்கில் வெற்றி பெர்றால் அதன் பிறகு ஆர்.பி.சிங், சிறிசாந்த், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராட வேண்டும்.
இந்திய சுழற்பந்து வீச்சிற்கு பதில் உள்ளதா?
தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலவீனம் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது. சவாலான அல்ல சாதாரண சுழற்பந்து வீச்சைக் கூட அவர்களால் சரியாக விளையாட முடியாது என்பதையே இதுவரை நிரூபித்து வந்துள்ளனர்.
webdunia photo
WD
சென்னையில் தென் ஆப்பிரிக்காவிற்கு இருக்கும் ஒரே சாதகம் மழை. மற்றபடி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்னையில் வெற்றிபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவுதான். இந்தியா அளவுக்கு மீறி மோசமாக விளையாடினால்தான் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்னையில் வெற்றி வாய்ப்பு. அது நடப்பது அரிதே.
அடுத்ததாக நடைபெறும் அகமதாபாத், கான்பூர் ஆகிய மைதானங்களில் வாய்ப்புகள் ஓரளவிற்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு உள்ளது. ஆனால் முதல் வெற்றியை இந்திய அணி பெற்றுவிட்டால் அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா மீண்டு வருவது மிகக் கடினம்.
இந்திய அணி எவ்வாறு ஆஸ்ட்ரேலியாவில் அந்த அணிக்கு எதிராக சவால்களை திறம்பட சந்தித்து, ஆஸ்ட்ரேலிய அணியினரின் முன் அனுமானங்களை தகர்த்து பெரிய சவாலாக திகழ்ந்ததோ, அதேபோன்ற ஒரு மனோ நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை எதிர்கொள்ளவேண்டும்.
வெட்டிப் பேச்சு வேலைக்கு உதவாது!
webdunia photo
WD
இதற்கான உத்திகளை கடுமையாக பயிற்சி செய்வதை விடுத்து சச்சினுக்கு வயதாகிவிட்டது, சேவாக் உத்தி பலவீனமானது, லக்ஷ்மண் பெரிய அளவில் ரன்களை எடுக்க மாட்டார், திராவிட் சமீபமாக சரியாக விளையாடவில்லை என்றெல்லாம் அசட்டுத் தனமாக கருத்துக்களை உதிர்த்து தோல்விகளை வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருந்தால் சரி. இது நாள் வரை தென் ஆப்பிரிக்கா பார்த்த இந்திய அணி அல்ல இது. புதிய ஆக்ரோஷமும், சமீபத்திய வெற்றிகள் கொடுத்த மனோ பலமும் களத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்தியா ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால் புள்ளி விவரங்கள் படி பார்த்தால் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதன்மை அணிகளில் தென் ஆப்பிரிக்க அணி இந்த மண்ணில் நன்றாகவே விளையாடியுள்ளது என்றே கூறவேண்டும். அவமானகரமான தோல்விகளை அந்த அணி சந்தித்ததில்லை என்றே கூறலாம்.
இந்த முறை தென் ஆப்பிரிக்கா திறமையாக விளையாடினால் தொடரை டிரா செய்ய வாய்ப்புள்ளது. வெற்றி பெறத் தகுந்த பேட்டிங் வரிசை தென் ஆப்பிரிக்காவிடம் இல்லை. அதுவும் அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் கொடுக்கும் நெருக்கடிகளை முறியடிக்கும் திறமை ஜாக் காலீசிடம் மட்டுமே உள்ளது. இவரும் நெருக்கடியில் வீழ்ந்து விட்டால் தென் ஆப்பிரிக்க அணியை தோல்வியிலிருந்து காப்பாற்ற ஆளில்லை.
இதுவரை இரு அணிகளும் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 9 டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. 4 டெஸ்ட்களில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இந்தியாவில் விளையாடிய 6 டெஸ்ட்களில் 3 டெஸ்ட் போட்டிகளை தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. 1999/00 ஆண்டில் நடபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
எப்படியிருப்பினும் மற்றுமொரு கடுமையான மோதலை இரு அணிகளிடையேயும் எதிர்பார்க்கலாம். மழை கைகொடுத்தால் சென்னையில் விழாதான்.