புக்கானனின் பித்தக் கோட்பாடும், மோர்டசாவின் பரிதாப நிலையும்

வியாழன், 7 மே 2009 (17:30 IST)
ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் துவங்கியது முதலே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர அந்தஸ்து பற்றி பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அந்த அணி நிர்வாகமும் அதன் அதிசய பயிற்சியாளர் ஜான் புக்கானன் ஆகியோரின் விசித்திர கோட்பாடுகளினால் இந்தியாவின் சிறந்த கேப்டனாக இருந்த கங்கூலி ஓரம் கட்டப்பட்டார்.

மட்டையை எடுத்து சுழற்ற மட்டுமே தெரிந்த நல்ல விக்கெட் கீப்பரான மெக்கல்லம் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். நியூஸீலாந்து கிரிக்கெட் வாரியமே செய்ய துணியாத ஒரு விஷயத்தை அன்னார் ஜான் புக்கானன் செய்து காட்டினார் அதன் விளைவுதான் இன்று அந்த அணி தோல்வி மேல் தோல்விகளை சந்திக்க காரணமானது.

ஆனால் இவ்வளவு தோல்விகளுக்குப் பிறகும் அணித் தேர்வுகளில் குளறுபடிகள் தொடர்கின்றன. வங்கதேச கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், பின்னால் களமிறங்கி நல்ல மட்டை விளாசலும் செய்யத் தெரிந்த மஷ்ரஃபே மோர்டசா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் இன்னமும் பயன்படுத்தப்படாமலே இருக்கிறார்.

மெக்கல்லமிற்கு கேப்டன் பதவி கொடுத்ததால் அவரை அணியிலிருந்து நீக்க முடியாது. இல்லாவிட்டால் அவரை தூக்கி விட்டு மோர்டசாவிற்கு வாய்ப்பு அளிக்கலாம். ஷுக்லா போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. ஆனால் இந்திய வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதுதான் புக்கானன் கண்ணை உறுத்துகிறது.

தோல்வியடைந்த வெளி நாட்டு வீரர்கள், ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு வர மாட்டேன் என்று கூறி ஒதுங்கியிருக்கும் அயல் நாட்டு வீரர்கள் ஆகியோர் மீது புக்கானனுக்கு அளவு கடந்த காதல். அதனால்தான் அவர் வெறும் 4 அயல் நாட்டு வீரர்கள் மட்டுமே இறுதி 11 வீரர்களில் இருப்பது மிகக் குறைவு என்று ஆதங்கப்படுகிறார்.

ஆனால் அவர் அயல் நாட்டு வீரர்கள் என்று கருதுவது ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள வீரர்களையே. அதனால்தான் ஆசிய வீரரும், நல்ல ஆல்ரவுண்டருமான மஷ்ரஃபே மோர்டசா புக்கானனுக்கு அயல் நாட்டு வீரராகத் தெரியவில்லை.

ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றபோது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவிற்கும், கொல்கத்தா அணியின் பாலிவுட் நாயக உரிமையாளரான ஷாரூக் கானுக்கும் இடையே மோர்டசாவை ஒப்பந்தம் செய்ய நடந்த பேரம் பலராலும் மிகவும் அருவருப்பான விஷயமாக பார்க்கப்பட்டது.

யார் பணம் அதிகம் வைத்திருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் அந்த மெத்தனமான போட்டியில் மோர்டசாவை 6,50,000 அமெரிக்க டாலர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் வாங்கினார்.

அப்போது முதல் அணியுடனேயே பயிற்சியில் இருந்து கொண்டு அவர்களுடனேயே வெட்டியாக பயணித்துக் கொண்டு இருப்பதைத் தவிர மோர்டசா எதையும் செய்ய முடியவில்லை. இவ்வளவு பணத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டு உலக கிரிக்கெட்டில் மதிக்கப்படக் கூடிய ஆல்-ரவுண்டரை இந்த அளவிற்கு அவமதிப்பது புக்கானன் போன்ற வெள்ளை ஆதிக்க பயிற்சியாளரால் மட்டுமே முடியும்.

ஆஸ்ட்ரேலிய அணியின் பயிற்சிப் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் முன் திருவாளர் ஜான் புக்கானன் இங்கிலாந்து உள் நாட்டு கிரிக்கெட் அணியான மிடில்செக்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஆனால் அந்த ஆண்டில்தான் மிடில்செக்ஸ் அணி வரலாறு காணாத பல தோல்விகளை சந்தித்து லீக் அட்டவணையில் மிகவும் கீழான இடத்திற்கு சென்றது. நல்ல அணியை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும் உயரிய கோட்பாடு புக்கானனது.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த போர்த் தந்திர ஞானி என்று கருதப்படும் சுன் ஸீ என்பவரின் குருதிக் கோட்பாட்டை தனது கிரிக்கெட் கோட்பாடாக மாற்றிக் கொண்டவர் புக்கானன். இதனை அவரே கூறியுள்ளார்.


இரு அணிகளுக்கு இடையில் பகைமையை ஊட்டி வளர்க்கும் புக்கானனின் கோட்பாடுகள் ஒரு அணிக்குள்ளேயே பகமையை ஏற்படுத்தும் கோட்பாடாகவும் இருந்து வந்துள்ளது. இது அவர் மிடில்செக்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த போது உலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீழ்ச்சி மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். என்ற அமைப்பு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத மற்ற உள் நாட்டு வீரர்கள் சிறந்த அயல் நாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடி திறமையை வளர்த்துக் கொண்டு இந்திய அணியில் நுழைய ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு.

இதில் ஒரு பயிற்சியாளராக ஏகப்பட்ட பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு, தனது மகன், சுற்றத்தார், நண்பர்கள் என்று பயனற்ற நபர்களை காசிற்காக உதவிப் பணியாளர்களாக சேர்த்துக் கொண்டு கூத்தடிக்கும் ஜான் புக்கானன் கூறுகிறார், "மெலும் சில அயல் நாட்டு வீரர்கள் இறுதி 11 அணியில் இடம்பெறவேண்டும்" என்று.

ஆனால் இவ்வளவு போட்டிகள் முடிந்த பிறகும் மோர்டசாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புக்கானன் கண்ணிற்கு இவர் வங்காள ஆட்டக்காராகவே தெரிகிறார் போலும்.

தனது ஓராண்டு கால மிகப்பெரிய கிரிக்கெட் வாழ்வில் புக்கானன் ஒரு வீரராக அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 7 போட்டிகளில் 160 ரன்கள்! அதிகபட்ச ரன்கள் 41. சராசரி 12.

இயன் சாப்பல் கூறுவது போல் ஆஸ்ட்ரேலிய அணியின் வெற்றிகளுக்கு புக்கானந்தான் காரணம் என்றால் அந்த அணியை தனது மகள் கூட பயிற்றுவிக்க முடியும் என்ற கூற்று மிக்க பொருத்தமானதே.

கங்கூலி ஒரு இயல்பான கேப்டன். அந்த தருணத்தில் அவர் இயல்பாக என்ன முடிவு செய்கிறாரோ அதற்கு பலன் கிட்டியுள்ளது. ஆனால் புக்கானன் போன்றவர்கள் கோட்பாட்டு பித்தர்கள். அனைத்தையும் முன் கூட்டியே திட்டமிடுதலில் பலன் சிறிது கூட ஏற்படாத ஒரு துறை இருக்கிறது என்றால் அது விளையாட்டுத் துறைதான்.

விளையாட்டு நம் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது என்ற ஆதிக்க மனோ நிலையும், வீரர்கள் அனைவரும் தனது கோட்ப்பாட்டை செயல் படுத்தும் ரோபோக்கள் என்ற திமிருமே புக்கானனின் தோல்விகளுக்கு காரணம்.

இங்கு ஒரு கேள்வி கேட்பது நியாயம்தான். அதாவது ஒரு சாதாரண இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கு கூட அயல் நாட்டு பயிற்சியாளர்களை தேடி ஓடும் நம்மூர் முதலாளிகளை என்னவென்று கூறுவது?

ஆனால் நம் தேசியத் தலைவர்களும், மகா கவிகளும் அன்று எதிர்த்த அயல் நாட்டு மோகம் நம் இந்திய மனங்களை எள்ளளவும் அசைக்கவில்லை என்பதுதான் வருத்ததிற்குறிய விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்