2ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 230 ரன்கள் பின் தங்கியிருக்கிறது. இன்னும் 3 நாட்கள் உள்ளன, 8 தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகள் மீதமுள்ளன. ஆனால் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்த டெஸ்ட் போட்டியை எப்பாடுபட்டாவது டிரா செய்வோம் என்று கூறியுள்ளார்.
ராகுல் திராவிட் எப்போதும் தவறான கணிப்புகளை வெளியிடுபவர் இல்லை என்றாலும், அவர் நடக்க முடியாததை வீராவசேமாகப் பேசக்கூடியவர் இல்லை என்றாலும், இது தன்னம்பிக்கையைக் குறிக்கிறதா இல்லை தோல்வியின் வலி சூழுவதிலிருந்து தப்பிக்க இவ்வாறு கூறுவதன் மூலம் ஆறுதல் அடைந்துள்ளாரா திராவிட் என்றும் தெரியவில்லை.
முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வீழ்ச்சிக்கு ஆட்டக்களம் மட்டுமே காரணம் என்று கூறுவது முதல் தவறு.
பிட்ச் பற்றிய முன்முடிவில் கால்களை சரியாக நகர்த்தாமல் கிரீஸில் நின்றபடியே ஆடியதால் வந்த வினைதான் அவுட்டுகளுக்குக் காரணம், மோர்கெல், கர்ட்லி ஆம்புரோஸ் போல் வீசினார், ஸ்டெய்ன் மைக்கேல் ஹோல்டிங் போல் வீசினார் என்றால் மிகையாகாது. ஆனாலும் இந்திய பேட்ஸ்மென்கள் தங்கள் வழக்கமான ஃபுட்வொர்க் மறந்து போனது ஏன் என்று தெரியவில்லை.
ஆட்டக்களம் அவ்வளவு ஒன்றும் விளையாடமுடியாத நிலையிலோ, பேட்சஸ்மென்களுக்கு துர்கனcவை வழங்குவதாகவோ இல்லை. நல்ல பவுன்ஸ், குறிப்பாக மோர்னி மோர்கெல், ஸ்டெய்ன் கொண்ட ஒரு பந்து வீச்சு வரிசைக்கு இந்த ஆட்டக்களம் ஏற்றதாக இருந்தது என்பது வரை உண்மை.
ஆனால் அதுவே எப்படி இந்திய பேட்ஸ்மென்கள் பேட்டிங் அடிப்படைகளை மறக்கச் செய்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
அவுட்டான அனைத்து பேட்ஸ்மென்களும் சாதாரண வெளியே செல்லும் ஸ்விங் பந்துகளுக்கும், குட் லெந்தில் வீசப்பட்டு சற்றே வெளியே இழுக்கப்பட்ட பந்துகளுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். காரணம் பந்து ஷாட் பிட்ச் ஆக வருமோ , எழும்புமோ என்ற முன் முடிவில் கால்களை நகர்த்தத் தயங்கி கிரீஸிற்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்ததுதான் இந்திய பேட்ஸ்மென்களின் தவறாக முடிந்தது.
சச்சின் டெண்டுல்கர் தனது முந்தைய ஆட்டத்தின் ஓரிரு சுவ்டுகளைக் காண்பித்தார். குறிப்பாக பக்கவாட்டு ஸ்விங்கின் அளவை எதிர்கொள்ள அவர் புல்ஷாட்டை ஆயுதமாக ஓரிருமுறை பயன்படுத்தினார். ஆனால் அவரும் ஓவர் பிட்ச் பந்தில் கால்களை முன்னால் கொண்டு வந்து நேராக டிரைவ் ஆடக்கூடியவர் அன்று ஆட்டமிழந்தார். காரணம் பந்து ஷாட் பிட்ச் பவுன்சராக அமையுமோ என்ற முன் முடிவு. திராவிடை நோக்கி நிறைய பவுன்சர்கள் வீசப்பட்டன. அதனை அவர் முழுத்திறமையுடன் எதிர்கொண்டார் ஆனால் அது மட்டும் போதாது. இங்கெல்லாம் ஹுக், புல் ஷாட்களை அவுட்டானாலும் பரவாயில்லை என்று பயன்படுத்துவதுதான் உசிதமான அணுகுமுறை.
கம்பீருக்கு அவர்கள் உண்மையில் முதல் நாள் பாடம் நடத்தினர் என்றல் மிகையாகாது. அவரால் பேட்டை பந்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்பது கன்கூடாகத் தெரிந்தது. ஒருமுறை கொண்டு சென்றார் அது அவுட்டாகப் போய் முடிந்தது.
லஷ்மணும் ஓவர் பிட்ச் பந்தில்தான் பவுல்டு ஆனார். காரணம் ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்பார்த்து கால்களை நகர்த்தாமல் போனதுதான்.
இந்திய பேட்ஸ்மென்கள் துணைக்கண்டங்க்ளின் ஆட்டக்களங்களில் விளையாடி விளையாடி அந்த லெந்த்களுக்கு கால்களை நகர்த்தி உடல் எடையை சரியாக மாற்றி விளையாடியே பழக்கப்பட்டு விட்டனர். இதனால் திடீரேன பழைய ஜமைக்கா, பெர்த் ஆட்டக்களங்கள் போல் ஒரு ஆட்டக்களத்தை எதிர்கொள்ளும் போது பிரச்சனை எழுகிறது.
இதற்கு என்ன செய்வது? முதலில் இது போன்ற பெரிய தொடர்களுக்குச் செல்லும் போது நல்ல தயாரிப்பு அனுபவத்தைப் பெறுவது அவசியம். அதன் பிறகு அங்கு சென்று 2 அல்லது 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும். அந்த பிட்ச்களுக்குத் தகுந்தவாறு உடலெடையை சமநிலைப்படுத்துவதும், கால்களை நகர்த்துவதும் பழக்கத்திற்கு வந்து விடும்.
ஆனால் நம் பி.சி.சி.ஐ. ஆதிக்கம் செலுத்தும் ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டங்களில் வணிக நலன்கள்தான் அதிகம் தெரிகிறதே தவிர கிரிக்கெட் நலன்கள் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
நியூசீலாந்து அணியுடன் இப்போது விளையாடிய 3 டெஸ்ட் போட்டி ஒரு டெஸ்ட் போட்டிக்கும், 5 ஒருநாள் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளாகவும் குறைக்கப்பட்டு, முன்னதாகவே தென் ஆப்பிரிக்கா சென்று பயிற்சி ஆட்டங்களிலும், நல்ல எழும்பும் ஆட்டக்களங்களில் வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தால் முதல்நாளில் நிகழ்ந்த அபத்தம் நிகழ்ந்திருக்காது.
இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்ட்ரேலியாவில் விளையாடி வரும் ஆஷஸ் தொடருக்கு முன் 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது..
அது போன்ற தயாரிப்புகள் இன்றி பெரிய தொடர்களை விளையாடுவது கடினம். இதையெல்லாம் பி.சி.சி.ஐ. பரிசீலிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நேரடியாக டெஸ்ட் போட்டிகளை விளையாடும் அயல்நாட்டு தொடர்களில், குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா செல்லும்போது, நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றால் இந்திய அணியை பந்தாடி விடுவார்கள் என்பதுதான் உண்மை. இதை நாம் மறுக்கலாகாது.
அணியின் மூத்த வீரர்களும், கேப்டனும் பயிற்சி ஆட்டம் இல்லாத தொடரில் பங்கேற்கமாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்துவது அவசியம். ஆனால் அதெல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் தன்மையுடன் விளையாடுவது மட்டுமல்லாமல் அதன் தன்மையுடன் யோசிக்கும் கிரிக்கெட் விளையாட்டிற்கேன்றே பிரத்யேக மனம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
உலகின் நம்பர் 1 அணி என்ற ஹோதாவில் அங்கு சென்று கடைசியில் இவ்வாறு ஆடுவது வீரர்களின் மனோபலத்தைக் குறைப்பதாகும். மீண்டும் இங்கு வந்து சதங்களாக விளாசித் தள்ளினால் எல்லோரும் என்ன நினைப்பார்கள் : "சரிதான் உலக வீரர்கள் கூறுவது உண்மைதான் இந்திய வீரர்களுக்கு நல்ல பவுன்ஸ் ஆட்டக்களங்களில் விளையாட வராது." என்ற கூற்று உண்மையாகிவிடும்.
சரி பேட்டிங்கை விடுவோம். பந்து வீச்சுக்கு சாதகமான ஆட்டக்களங்களில் கூட இஷாந்த் ஷர்மாவும், ஸ்ரீசாந்தும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பது மேலும் கவலைக்குரிய விஷயம்.
நேற்று பிட்ச் சற்றே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியிருந்தாலும், புதிய பந்தில் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டி வீசியிருந்தால் துவக்க விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தியிருந்தால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகத்தையைவாது கட்டுப்படுத்தியிருக்கலாம்.
காலிஸையும், அம்லாவையும் வீழ்த்த உண்மையில் இந்திய பந்து வீச்சில் எந்த வித தீவிரமும் இல்லை. ஹர்பஜன் சிங் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் அவரது பந்து வீச்சை நேற்று தென் ஆப்பிரிக்கா நேற்று மைதானம் முழுதும் விரட்டியது என்றே கூற வேண்டும்.
ஸ்டெய்ன், மோர்கெல், காலிஸ் வீசும் போது பவுச்சர் அதிக வேகமில்லாத பதுகளையும் தன் தலைக்கு மேல்தான் பிடிக்க முடிந்தது. மாறாக இஷாந்த், ஸ்ரீசாந்த் வீசிய பந்துகளை தோனி அதிகபட்சமாக தன் வயிறு உயரத்தில் தான் பிடித்தார். வேகமும் இல்லை, பவுன்சும் இல்லை, ஸ்விங்கும் இல்லை. ஒன்றுமேயில்லை. எப்படி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்? பவுன்ஸ் விக்கெட்டுகளில் கூட விக்கெட் வீழ்த்துவது கடினமாக இருக்கும் ஒரு பந்து வீச்சை வைத்துக் கொண்டிரூக்கிறோம் என்பதை நாம் உணரவேன்டும். ஜாகீர் கான் இருந்திருந்தால் ஸ்மித், பீட்டர்சன் அடித்திருக்க முடியாது. ஆனால் அவர் காயமடைகிறார். காரணம் அதிக கிரிக்கெட்.
2ஆம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் மீதமிருக்க 230 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ளன.
நேற்று போல் இன்றும் மைதானம் என்ற இலுப்புச் சட்டியில் இந்தியப் பந்து வீச்சை நன்றாக வறுத்தெடுத்து பேட்ஸ்மென்களையும் களைப்படையச் செய்து கடைசியில் 450 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்வர். களைப்படைந்த இந்திய வீரர்கள் திறமையான வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு டிரா செய்வது என்பது ஒரு கனவுதான்.
ஆனால் திராவிட் கனவு நிறைவேறும் என்று கூறியுள்ளார். இது அவரது தன்னம்பிக்கையா, அல்லது தோல்வியின் வலி நெருக்க ஏமாற்றத்தினால் எழும் ஒரு உணர்ச்சி வார்த்தைகளா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கிரிக்கெட் ஆட்டம் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் என்ற கூற்று உண்மைதான் ஆனால் இங்கு நிச்சயமான ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நிச்சயத்தை இந்தியா இன்று தென் ஆப்பிரிக்காவை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதன் மூலமும் அதன் பிறகு டிராவை நோக்கி போட்டியை நகர்த்துவதின் மூலமும் நிச்சயமின்மையாக மாற்ற வேண்டும்.
இவை நடைபெறுவது இப்போதைக்கு (அ)சாத்தியம் என்றே தோன்றுகிறது.