கிரிக்கெட் ஆட்டத்தில் சமீபமாக அறிமுகம் செய்யப்பட்ட களநடுவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் புதுமைக்கு இந்தியா தொடர்ந்து காரண காரியமில்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அடுத்ததாக நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இந்த மேல்முறையீடு முறையை இந்தியா வேண்டாம் என்று கூறியுள்ளது.
கிரிக்கெட் உலகில் இந்தியா மட்டுமே இதற்கு எதிர்ப்பு காட்டி வருகிறது. இது விசித்திரமாகவும் சில சந்தேகங்களை எழுப்புவதுமாகவும் உள்ளது.
2008ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போது இந்த இந்திய அணி இந்த மேல்முறையீடு செய்யும் முறைக்கு ஒப்புதல் தெரிவித்தது.
ஆனால் அந்தத் தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக அந்த மேல்முறையீடு ஒருமுறைதான் அமைந்தது. மாறாக இலங்கை சுமார் 11 களநடுவர் தீர்ப்புகளை மேல்முறையீடு செய்து தங்களுக்கு சாதகமாக வெற்றி கண்டது.
இந்தத் தொடரில் கண்ட பின்னடைவால் இந்தியா அதன் பிறகு யு.டி.ஆர்.எஸ் என்று அழைக்கப்படும் இந்த முறையைக் கண்டு தேவையில்லாத அச்ச்ம் கொண்டு மறுத்து வருகிறது.
ஒவ்வொரு தொடரிலும் எதிரணியினர் அது வேண்டும் என்று கூறுகையில் இந்திய அணித்தலைவர் தோனியும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அதனை வேண்டாம் என்று மறுத்து வருகின்றனர்.
இதில் இந்தியாவுக்கு என்ன சிறப்புரிமை இருக்கிறது. ஐ.சி.சி. ஒரு விதி செய்தால் அதனை கடைபிடிக்கவேண்டியதுதானே? இப்போதைக்கு அது கேப்டன்களின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளதால் இந்தியா மறுத்து வருவது எளிதாகிறது. அதனை கட்டாயமாக்கினால்தான் இந்தியா காட்டும் பிடிவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கமுடியும்.
2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடரில் சச்சின் டெண்டுல்கருக்கு நடுவர் அவுட் கொடுக்க மறுக்க இலங்கை மறு முறையீடு செய்து அதில் வெற்றி கண்டது.
இதனால் சச்சின் டெண்டுல்கர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கால்காப்பைக் காட்டுவதைச் செய்ய முடியாமல் போனது. இது அவரது ஆட்டத்தை பாதித்தது.
அது முதல் இந்த யு.டி.ஆர்.எஸ். முறை மீது சச்சின் டெண்டுல்கர் கடுமையான விமர்சனம் வைத்து வருகிறார். அதாவது அது 100% துல்லியமில்லை. 100% துல்லியம் இருந்தால்தான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றேல்லாம் கூறி அதனை ஏற்காதவாறு திறமையாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் கேப்டன் எம்.எஸ். தோனியையும் கட்டுப்படுத்தி வருகிறார் சச்சின்.
இப்போது ரன் - அவுட் என்பது 3ஆம் நடுவர் கொடுக்கும் தீர்ப்பாகவே மாறிப்போயுள்ளது. அதுபோல்தான் அனைத்துத் தீர்ப்புகளும் மாறவேண்டும். இதுதான் கிரிக்கெட்டிற்கு நல்லது.
சமீபத்தில் மைக்கேல் கிளார்க், இந்தியாவுக்கு எதிராக, வந்தவுடன் கேட்ச் கொடுத்தார். ஆனால் அது நோ-பாலாக இருக்கலாம் என்று நடுவர் ஐயம் கொண்டு 3-வது நடுவரை துணைக்கு அழைத்தார் அது கடைசியில் நோ-பாலாகவே அமைந்தது.
அந்த இடத்தில் அது ஒரு பேட்ஸ்மெனைக் காப்பாற்றியுள்ளது. இது போல்தான் பல எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் நடுவர்களால் தப்பும்தவறுமாக கொடுக்கப்படுகிறது.
மிகவும் தவறான தீர்ப்பு என்னவெனில் பந்து மட்டையில் பட்டு பேடில் படுவதைக்கூட நடுவர்களால் கவனிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் முதலில் நோ-பாலைப் பார்வையிடவேண்டும் அதற்குள் ஒரு வினாடியில் பந்து பேட்ஸ்மெனைச் சேர்கிறது இதனால் நடுவர்களால் சரியான எல்.பி.டபிள்யூ.தீர்ப்பை வழங்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல வீரர்களுக்கும் இது போன்ற தவறான தீர்ப்புகள் நிறைய வழங்கப்பட்டுள்ளன.
அதே போல் தவறான தீர்ப்புகளுக்கு அதிகம் பாதிக்கப்பட்டவர்தான் மேற்கிந்திய நட்சத்திரம் பிரையன் லாரா, அடுத்ததாக நம் கங்கூலி இலங்கை நடுவட் அசோக டி சில்வாவினால் நிறைய முறை ஆட்டமிழந்துள்ளார்.
இது போன்ற தவறுகளை 3-வது கண் திருத்தி சரியான தீர்ப்பை வழங்குகிறது என்றால் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே?
நம்மவர்களுக்கு எது அவுட்டாக இருக்கும் என்பதிலேயே சந்தேகம் உள்ளது. இதனால்தான் இலங்கையில் ஒரு முறைதான் இவர்கள் மேல்முறையீடு வெற்றிகரமாக அமைந்தது. மற்றபடி இந்தியாவின் மேல்முறையீடு தவறானதற்குக் காரணம் இவர்களின் கணிப்பில் ஏற்படும் தவறே.
மறக்கப்படவேண்டிய சிட்னி டெஸ்ட் போட்டியை நாம் எடுத்துக் கொள்வோம். குறைந்தது 14,15 தீர்ப்புகள் இந்தியாவுக்கு எதிராகச் சென்றது. இதில் சைமண்ட்ஸ் குளிர் காய்ந்தார். அப்போது இந்த யு.டி.ஆர்.எஸ் முறை இருந்திருந்தால் ஆஸ்ட்ரேலியாதான் தோற்றிருக்கும். ஆனால் அப்போது அந்த முறை இல்லை.
அந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகுதான் பேட்ஸ்மென்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் களநடுவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முறை தேவை என்று அதிகமாக உணரப்பட்டு அந்த முறை தற்போது அணிகளின் விருப்பத்தேர்வாக அமலில் உள்ளது.
இந்தியா இதனை எதிர்ப்பது சச்சின் டெண்டுல்கர் என்ற தனிநபர் அதன் மீது கொண்டுள்ள தேவையற்ற வெறுப்பினாலும் தன்னை அதனைக் கொண்டு அவுட் செய்து விடுவார்கள் என்று சச்சின் அஞ்சுவதினாலும் மட்டுமே.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1992ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர்தான் முதன் முதலில் 3-வது நடுவர் தீர்ப்பிற்கு ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற வினோத பெருமையைப் பெற்றார். ஜாண்ட்டி ரோட்ஸிடம் அடித்து விட்டு ஒரு எட்டு கிரீசை விட்டு நகர்ந்திருப்பார் அவ்வளவுதான் திரும்பிப்பார்க்கும்போது பைல்களைக் காணவில்லை.
ரோட்ஸ் பந்தை மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்களை நோக்கி அடித்து வெற்றி கண்டார். சச்சின் அதிர்ச்சியடைந்தார். அந்த அவுட் சாதாரண கள நடுவர்களால் கொடுக்க முடியாத அவுட்டாகும். ஏனெனில் அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.
அன்று ஜாண்ட்டி ரோட்ஸின் பெருமை உலகிற்குத் தெரியவந்தது தொழில் நுட்பத்தினால்தான். ஆனால் சச்சின் டெண்டுல்கருக்கோ அது தான் அடிக்க முடியாமல் போன ஒரு சதம் அவ்வளவே. அன்று முதலே சச்சின் இந்த கேமரா தீர்ப்புகள் மீது வெறுப்பு கொண்டுள்ளார் என்றே நம்மை யோசிக்கத் தூண்டுகிறது.
பொதுவாக சரியான, துல்லியமான தீர்ப்புகள் தேவை என்றுதான் எல்லா அணியும் யோசிக்கும், ஆனால் இந்தியாவுக்கு அதெல்லாம் தேவையில்லை. மேலும் தற்போது நடுவர்கள் தவறான தீர்ப்பளித்தால் அதுகுறித்து இந்திய கேப்டன் எந்த வித அறிக்கையையும் தொடர் முடிந்தவுடன் செய்ய முடியாது.
அப்படிச் செய்தால் அது அபத்தமானதாகவே பார்க்கப்படும் ஏனெனில் நாங்கள் யு.டி.ஆர்.எஸ். வேண்டுமா என்று கேட்டதற்கு நீங்கள்தானே மறுத்தீர்கள் என்று ஐ.சி.சி. பதிலளிக்கும்.
எனவே கிரிக்கெட்டில் தீர்ப்புகளை துல்லியமாக்கி டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒருநாள் கிரிக்கெட்டையும் மேலும் விறுவிறுப்பாக்கி வெற்றி/தோல்வி முடிவுகளை நோக்கி நகர்த்த சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் இந்த யு.டி.ஆர்.எஸ்.முறைக்கு முழு ஆதரவு தரவேண்டும். தனது சுயநலத்தை அவர் சற்றே தள்ளி வைத்து முடிவு காணவேண்டும். அவர் மட்டுமல்ல அவருக்காக சிந்திக்கும் நம் கட்டுப்பாட்டு வாரியமும் நம் கேப்டன் எம்.எஸ்.தோனியும்தான்.