நடுவர்களுடன் வாதம்: தண்டிக்கப்படுவாரா பாண்டிங்?

திங்கள், 27 டிசம்பர் 2010 (17:07 IST)
webdunia photo
FILE
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து அணி ரன்குவிப்பில் ஈடுபட ஆட்டம் கைவிட்டுப்போனது என்பதால் ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங் பீட்டர்சனுக்கு ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று நடுவர்களிடம் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கெவின் பீட்டர்சன் 49 ரன்கள் இருந்தபோது ஹேரிஸ் வீசிய பந்து ஒன்று பீட்டர்சனின் பேடில் பட்டுச் சென்றது. ஆனால் அது முதல் பார்வைக்கு அவுட் போல தெரிந்தாலும் நடுவர் அலீம் தார் அதனை நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார்.

ஆனால் விக்கெட் கீப்பர் ஹேடின் அவுட் போலவே செய்கைகளைச் செய்தார். ஆனால் ஸ்லிப்பில் இருந்த ஷேன் வாட்சன் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. பந்து வீச்சாளர் ஹேரிசும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் பாண்டிங், சிடிலுடன் சேர்ந்து கோண்டு அது அவுட்தான் என்று நம்பி 3-வது நடுவர் தீர்ப்பு கோரினார்.

பீட்டர் சிடில்தான் இந்த வாக்குவாதத்தைத் துவக்கி வைத்தார். பாண்டிங்கை அது அவுட் என்பது போலவே நம்பச் செய்து வாக்குவாதம் செய்யத் தூண்டினார் சிடில்.

பல ரீ-பிளேக்கள், ஹாட்ஸ்பாட்கள் பார்க்கப்பட்ட பின்பு நடுவட் கூறியதுதான் சரி பீட்டர்சன் நாட் அவுட் என்று மேல் நடுவரும் தீர்ப்பளித்தார்.

ஆத்திரமடைந்த ரிக்கி பாண்டிங் முதலில் அல்லிம் தார் பிறகு டோனி ஹில் என்று மாறி மாறி வாக்குவாதம் செய்தார்.

கால்பந்து போட்டிகளில் பார்ப்பதுபோல் பாண்டிங், சிடில், ஆகியோர் நடுவர் அலீம்தாரைச் சூழ்ந்து வாக்குவாதம் புரிந்தனர்.

பாண்டிங் வாக்குவாதம் புரிந்ததற்குக் காரணம் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட ஸ்னிக்கோ மீட்டர் பிமத்தில் பந்து மட்டையில் பட்டது போன்ற சிறு புள்ளி தெரிந்தது. ஆனால் அது பேடில் பட்டுச் சென்றது என்பதை பாண்டிங் தலைமை ஆஸ்ட்ரேலியா அணியினர் பார்க்கவில்லை.

இதனால் நடுவர்கள் ஏதோ சதி செய்கின்றனர் என்ற சந்தேகத்தில் தவறான அணுகுமுறையைக் கையாண்டார் பாண்டிங். வாக்குவாதம் காரசாரமாக இருந்தது போன்றுதான் தெரிந்தது. அவர் கையை நன்றாக ஆட்டி கோபமாக ஏதோ கூறினார்.

முதல் நாள் 98 ரன்களுக்க்கு ஆல் அவுட் ஆன போது ஆஸ்ட்ரேலிய பேட்டிங்கில் ஒழுக்கம் இல்லை என்று பத்திரிக்கைகள் சாடின. ஆனால் மறுநாள் கேப்டனும் நடத்தையில் சறுக்கி விழுந்தார்.

மற்ற அணி வீரர்களோ, கேப்டன்களோ இது போன்று நடந்து கொண்டால் பாண்டிங் என்ன செய்திருப்பார். நேராக நடுவரிடம் சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருப்பார்.

ஆனால் ஸ்ட்ராஸ் இது வரை புகார் எதையும் அளிக்கவில்லை. நடுவர் தீர்ப்புக்கு அதுவும் டிவி. ரீப்ளேயில் பார்த்து அவுட் இல்லாததை அவுட் இல்லை என்று தீர்ப்பளித்த பிறகு பாண்டிங் நடுவர்களுக்கு நெருக்கடி தருகிறார் என்றால் கிரிக்கெட்டில் இது போன்று முன் எப்போதும் நடைபெறாத ஒன்றுக்கு இன்று பாண்டிங் வித்திட்டுள்ளார் என்றே பொருள்.

அலீம் தார், டோனி ஹில் உடனடியாக இதனை ஒரு பிரச்சனையாகக் கருதி ஐ.சி.சி. ஆட்ட நடுவரிடம் புகார் தெரிவித்து பாண்டிங்கிற்கு ஓரிரு போட்டிகள் தடை பெற்றுத்தரவேண்டும்.

கங்கூலி, இன்சமாம், அல்லது அஃப்ரீடி, சங்கக்காரா அல்லது ஹர்பஜன்சிங் இவ்வாறு நடந்து கொண்டால் உடனே பத்திக்கு பத்தி அதனை கண்டித்து எழுதும் ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகள் இது ஏதோ பாண்டிங் தோல்வியின் வெறுப்பில் செய்வததாகக் கூறிவருகின்றன.

அவர் எப்போதும் நடுவர்களின் தீர்ப்பை மதிக்காதவர்தான் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் தங்கள் அணிக்கு ஆஅதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு திட்டமே தவறு என்று கூறத் தொடங்கினார்.

அவருக்கு எந்மோசடியாவது செய்து வெற்றி பெற்று விடவேண்டும் என்ற மனப்போக்கு உண்டு என்பதை நாம் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது பார்த்திருக்கிறோம். தாறுமாறாக அப்பீல் செய்து நடுவரின் தீர்ப்பில் தாக்கம் செலுத்துவது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் ஒரு சகஜமான நிலையாக மாறிவிட்டாலும் இதனைத் திறமையாகச் செய்து வருபவர் பாண்டிங், இதனை மேலும் திறமையாகச் செய்தவர் ஷேன் வார்ன். ஆனால் ஷேன் வார்ன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டார்.

தொடர்ந்து மைதானத்தில் இது போன்று நடத்தை கேட்டில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுவோருக்கு துணை போகும் வேலையை பாண்டிங் செய்து வருகிறார். ஐ.சி.சி.யும் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியமும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றன.

இன்று நடந்த விவகாரம் வெளிப்படையாக பாண்டிங்கின் நடத்தையை படம் பிடித்துக் காட்டியது. நடவடிக்கை எடுக்குமா ஐ.சி.சி.?

வெப்துனியாவைப் படிக்கவும்