நடுவர்களுக்கு ஏன் இந்த மயக்கம்?

செவ்வாய், 5 அக்டோபர் 2010 (17:24 IST)
மொகாலியில் நாம் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்தோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் நடுவர்களின் செயல்பாடுகள் ஏன் இந்த டெஸ்ட் போட்டியில் தடுமாற்றமாகவே இருந்தது என்பது பற்றி நாம் யோசிக்கவேண்டியுள்ளது.

மொகாலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நாளான இன்று கடைசியில் இஷாந்த் ஷர்மாவுக்கு கொடுத்த அவுட்டும், முதலில் கவுதம் கம்பீருக்குக் கொடுத்த அவுட்டும் நடுவர்களின் தடுமாற்றத்தை நிரூபிப்பதாய் உள்ளது.

கௌதம் கம்பீருக்கு முதலில் பந்து பேட்டில் பட்டது என்பது உலகறிந்த உண்மை. இரண்டாவது பந்து மட்டையில் பட்டிருக்காவிட்டாலும் பந்து ஆஃப் ஸ்டம்பைத் தவிர்த்து வெளியே செல்கிறது. இஷாந்த்திற்கு நடுவர் தயக்கமில்லாமல் கொடுத்த அவுட் நேரலையில் பார்க்கும்போதே லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து செல்கிறது என்பது பட்டவர்த்தனம். ஆனாலும் தயக்கமின்றி அவுட் கொடுக்கிறார் நடுவர்.

நடுவர் தீர்ப்பே இறுதியானது என்ற கிரிக்கெட்டின் முதுமொழியை நாம் ஏற்கவேண்டும் என்றால் பிறகு ஏன் 3-வது நடுவர் தீர்ப்பிற்கு முறையிடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது?

எல்.பி.டபிள்யூ.வைப் பொறுத்தவரை நடுவர்களின் தடுமாற்றம் சமீபகாலங்களில்தான் அதிகரித்துள்ளது. முன்பு டிக்கி பேர்ட், இந்தியாவின் ஸ்வரூப் கிஷன், இங்கிலாந்தின் பீட்டர் வில்லே, இந்தியாவின் வெங்கட் ராகவன், டேவிட் ஷெப்பர்ட் (இவர் கடைசியில் தவறுகள் நிறையச் செய்யத் துவங்கியதாலேயெ ஓய்வு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) ஆகியோருக்கு இந்தத் தடுமாற்றங்கள் இருந்ததில்லை. அவர்கள் கொடுத்த அவுட் வேண்டுமென்றால் ஒன்றிரண்டு தவறாகப் போயிருக்கலாம். அதுவும் அவர்கள் பின்னால் அதனை உணர்ந்த போது சம்பந்தப்பட்ட வீரரிடமும், அணிக் கேப்டனிடமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இன்று எல்.பி.டபிள்யூ.-வை இவர்கள் விளக்கும் விதமே அலாதியாக உள்ளது. இன்றைய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் இஷாந்த்திற்கு நாட்-அவுட்டை அவுட் கொடுத்தார் இங்கிலாந்து நடுவர் இயன் கோல்டு, அதே சமயம் மிட்செல் ஜான்சன் பந்தில் பிராக்யன் ஓஜா கால்காப்பில் வாங்கியது அவுட் என்று தெரிந்தது ஆனால் அதனை பேட்டில் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகத்தினால் அவர் கொடுக்கவில்லை. கம்பீருக்கு கொடுத்த அவுட்டில் பந்து மட்டையில் பட்டது தெரியவில்லை. இஷாந்த்திற்கு கொடுத்த அவுட்டில் பந்தின் போக்கைத் தீர்மானிக்க முடியவில்லை. கடைசியில் பிராக்யன் ஓஜாவுக்கு நடுவர் யூகத்தின் அடிப்படையில் நாட் அவுட் கொடுக்கிறார்.

இப்போது பில்லி பௌடன் தான் அவுட் கொடுக்காமல் இருந்தது தவறு என்று நினைத்தால் என்ன செய்திருக்கக் கூடும் அடுத்ததாக கால்காப்பில் வாங்கும்போது உரத்த முறையீடு எழுப்பினால் நாட்-அவுட்டையும் அவுட் கொடுப்பதில் போய் முடியும். செய்த தவற்றுக்கு இழப்பீடு இன்னொரு தவறு என்ற ரீதியில் நடுவர்கள் செயலாற்றி வருகின்றனர்.


இந்தியா எப்போதுமே 3-வது நடுவர் மேல்முறையீடு முறையை ஏற்று கொள்வதில்லை, வேண்டாம் என்று கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இன்றைய நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இத்தகைய பிடிவாதம் ஏற்புடையதல்ல. அந்த முறை இருந்தால் அது இந்தியாவுக்கு எதிராகப் போய்விடும் என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் மறுத்து வருகின்றனர் என்று தெரிகிறது. இந்த எண்ணத்தை இந்தியா மாற்றிக் கொள்வது நல்லது.

இன்று உலக கிரிக்கெட் அணிகளில் அனைத்து அணிகளும் 3-வது நடுவர் மேல்முறையீட்டு திட்டத்திற்கு வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்பதே தற்போதைய நடுவர்கள் களத்தில் தடுமாறுகின்றனர் என்பதை நிரூபிப்பதாய் உள்ளது.

மேலும் நடுவர்கள் நன்றாக அவுட் என்று அவர்களுக்கே தெரிந்த ரன் அவுட்டைக் கூட தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்வதுதான் கேப்டன்கள் நடுவர்கள் மீது நம்பிக்கை இழக்கக் காரணமாகிறது.

முதலில் நடுநிலை நடுவர்கள் என்ற நடைமுறையை ஒழித்து நல்ல, திறமையான நடுவர்களை உருவாக்க ஐ.சி.சி. திட்டங்களை பரிசீலிக்கவேண்டும். இந்தியாவிலிருந்து சர்வதேச நடுவர்கள் யாரும் இல்லை. இந்த நிலை ஏன்? ஒரு காலத்தில் இம்ரான் கான் தன் சொந்தநிலைப்பாட்டின் படி பாகிஸ்தானில் நடைபெற்ற தொடருக்கு நடுநிலைநடுவர்களை நியமித்த்தார். அப்போது அவர் இந்தியாவின் ராமசாமி மற்றும் ரிப்போர்ட்டர் என்ற நடுவரக்ளை அழைத்தார்.

அப்போது உருவான இந்த நடுநிலை நடுவர்கள் என்ற கருத்து இன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. தொழில்நுட்பத்தை முழுதும், அனைத்துப் போட்டிகளுக்கும் நடைமுறை செய்துவிட்டால் எந்த நாட்டு நடுவர் எந்த நாட்டிற்கு எதிராக பணியாற்றினால் என்ன?

மேலும் இன்றைய நடுவர்கள் ஒரு சில அணிக் கேப்டன்களிடம் தாங்கள் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இதனால்தான் தவறுகள் மலிந்து விடுகின்றன.

அனைத்து தீர்ப்புகளையும் இரு அணிகளும் மேல்முறையீடு செய்யலாம் என்ற முறை நடைமுறைப்படுத்தும் காலம் வந்து விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்