தொடரை வென்றால் முதலிடம் பெற இந்தியாவுக்கு வாய்ப்பு

புதன், 12 ஜனவரி 2011 (12:33 IST)
டர்பனில் இன்று இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முதலிடம் செல்ல வாய்ப்பு உள்ளது.
webdunia photo
FILE


டர்பனில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டி மாலை இந்திய நேரம் 6 மணியளவில் தொடங்குகிறது.

இது வரை தென் ஆப்பிரிக்க மண்ணில் 20 ஒருநாள் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.

இது இந்தியாவின் அயல்நாட்டு மண்ணின் ஒருநாள் சாதனைகளுக்கு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்க மண்ணில் 1422 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதில் 522 ரன்களை 26.10 என்ற குறைந்த சராசரியில் எடுத்துள்ளார்.
webdunia photo
FILE


இந்த கடந்த கால புள்ளிவிவரங்களை வைத்துப் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்றும் செய்யவியலாது என்ற முடிவுக்கு நாம் வர முடியாது.

ஏனெனில் இந்த அணி வித்தியாசமான அணி. உலகக் கோப்பைக்கு முன் வெற்றியுடன் நாடு திரும்பவே அனைத்து வீரர்களும் போராட்ட குணம் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் சேவாக், கம்பீர், பிரவீண் குமார் ஆகியோரது காயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன் அல்லது அஷ்வின் கூட்டணி அந்த களத்தில் சிறப்பாக செயல் பட முடியும்.

பேட்டிங்கில் ஒரு நாள் போட்டிகளில் முரளி விஜய் சொதப்பி வருவது கவலைக்குரிய விஷயம்தான். இதனால் ரோஹித் ஷர்மாவையும், டெண்டுல்கரையும் களமிறக்க முடிவெடுத்தால் சிறப்பாக அமையும்.

விராட் கோலி அபாரமான ஃபார்மில் உள்ளார். ரெய்னா, யுவ்ராஜசிங், தோனி ஆகியோர் இந்த வடிவ கிரிக்கெட்டில் எப்போதும் அபாய வீரர்கள். ஆல்-ரவுண்டர் இடத்தில் யூசுப் பத்தான் இந்தத் தொடரில் தன் திறமையை நிலைநாட்டிவிட்டால் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவரது இடம் உறுதி. மேலும் இது இந்திய அணிக்கு மிகுந்த பலத்தைச் சேர்க்கும்.

மேலும் யூசுப், ஹர்பஜன் சிங், அஷ்வின் ஆகியோரும் ஆல்-ரவுண்ட் திறமை படைத்தவர்கள் என்பதால் இந்திய அணிக்கு இந்தத் தொடரில் வெற்றி வாய்ப்பு அதிகம்.

ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து கூட்டணியான டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் மீண்டும் ஷாட் பிட்ச் பந்துகளை வீசி இந்திய அணியை சிக்கல்களை ஏற்படுத்தலாம். துவக்கத்தில் சச்சின் உள்ளார். ஆனால் நடுவில் ஷாட் பிட்ச் பந்துகளுக்கு வீழ்ந்து விடும் கோலி, ரோஹித், ரெய்னா ஆகியோர் உள்ளனர். இதிலிருந்து மீளுவது மிகவும் முக்கியம்.

தென் ஆப்பிரிக்க அணியில் ஜாக் காலிஸ் இல்லாதது இந்திய அணிக்கு பலம். கிரேம் ஸ்மித் இந்த வகை கிரிக்கெட்டில் அபாயமானவர்தான். ஆனால் ஜாகீர் கானிடம் வீழாமல் அவர் தப்பினால்தான் அதுவும் சாத்தியம்.

இந்தியாவுக்கு அபாய வீரர் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஹஷிம் அம்லா.

ஜாக் காலிஸுக்குப் பதிலாக வந்துள்ள இங்ரம் முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே சதம் கண்டவர். டீவிலியர்ஸ், டுமினி ஆகியோர் நடுக்களத்தில் பலம் சேர்க்க. ஆல்ரவுண்டர் பிளெஸ்ஸிஸ் உள்ளார். சுழற்பந்து வீச்சில் பிளெஸ்ஸிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் என்ற லெக் ஸ்பின்னர் தவிர அனுபவம் மிக்க ஜோஹன் போத்தா உள்ளார்.

தென் ஆப்பிரிக்க ஆட்டக்களங்கள் பந்து வீச்சிற்கும், ஸ்விங் பந்துகளுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு அந்த அணிக்கே அதிகம். ஆனால் இக்கட்டான தருணங்களில் அந்த அணி மீண்டு வந்து வெற்றிபெற முடியாமல் போவது வழக்கம்.

தோல்வி நிலையிலிருந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் அந்த 'எக்ஸ்' காரணை என்று கூறுவார்களே அது அந்த அணியிடம் இல்லை. மாறாக இந்தியாவில் யூசுப் பத்தான், தோனி போன்றவர்கள் அந்த 'எக்ஸ்' ஃபாக்டர் என்பதில் இருவேறு கருத்து இல்லை.

உத்தேச இந்திய அணி வருமாறு:

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா, விரட் கோலி, யுவ்ராஜ் சிங், ரெய்னா, யூசுப் பத்தான், தோனி, ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், முனாஃப் படேல்.