தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!

சனி, 3 மே 2008 (10:45 IST)
ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை தாக்கியதும், செளரவ் கங்கூலி பற்றி தேவையற்ற கருத்துக் கூறி ஒரு சர்ச்சையை ஷேன் வார்ன் உருவாக்கியதும் அழிந்து வரும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுகளுக்கு மேலும் ஏற்பட்டுள்ள சவால்களாகும்.

கடந்த உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மேட்டராஸி என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் ஃபிரான்ஸ் வீரர் ஜிடேன் அவரை தாக்கி அது பின்பு பெரிய பிரச்சனையாக எழுந்து ஓய்ந்தது.

webdunia photoWD
பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் சக வீரர் மொகமது ஆசிஃபை மட்டையால் சரமரியாக அடித்த போது அஃப்ரீடி தடுத்திருக்கிறார். தனது நடத்தைக்காக மேலும் தடைகளைப் பெற்று சர்வதேச கிரிக்கெட்டில் தனிமைபட்டு நிற்கிறார் அக்தர். தற்போது ஐ.பி.எல். பண விழாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் சர்ச்சைத் திலகம் ஹர்பஜன் சிங் இன்னொரு சர்ச்சைத் திலகமான ஸ்ரீசாந்தை கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

முன்னவர் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டார். நம்மவர் 11 ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடசெய்யப்பட்டுள்ளார்.

இஷாந்த் ஷர்மாவை மேத்யூ ஹெய்டன் குத்துச் சண்டை வளையத்திற்கு அழைக்கிறார். ஆனால் தண்டனையிலிருந்து தப்பவிடப்பட்டார்.

இந்திய கிரிக்கெடில் இதற்கு முன்னுதாரணம் உண்டு. முன்பொரு முறை மும்பையைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஷித் படேல் உள் நாட்டு போட்டி ஒன்றில் மறைந்த ராமன் லாம்பாவை துரத்தி துரத்தி அடிக்க முயன்றார். இதனால் ரஷித் படேல் வாழ் நாள் முழுதும் தடை செய்யப்பட்டார்.

ஜாவேத் மியாண்டட் டெனிஸ் லில்லியை மட்டையை ஓங்கிக் கொண்டு அடிக்கத் துரத்தியதும், கிளென் மெக்ரா,

மேற்கிந்திய வீரர் சர்வாணைப் பார்த்து காறி உமிழ்ந்ததும் கிரிக்கெட் ஆட்ட உணர்வுகளுக்கான "முத்தான" வரலாறுகள்!

ஊடகங்களின் மூலம் நம் பார்வைக்கு வந்த சீரழிவுகளே இவ்வளவு உள்ளது. நம் பார்வைக்கு வராமல் நடைபெறும் இது போன்ற சம்பவங்களோ?

ஐ.பி.எல். துவங்கிய போது, ஆஸ்ட்ரேலியாவில் சீரழிந்த ஆட்ட உணர்வுகள், வீரர்களிடையேயான நட்புறவுகள் ஆகியன மேம்படும் என்று வீரர்கள், வருணனையாளர்கள், கருத்தாளர்கள் அனைவரும் கூறிவந்தனர்.

இரு வேறு நாட்டு வீரர்களிடையே சண்டை ஏற்படுவது போக, உள் நாட்டு வீரர்களிடையே உடல் ரீதியான சண்டையை உருவாக்கி கிரிக்கெட் ஆட்ட உணர்வை(!) ஐ.பி.எல். அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எடுத்துச் சென்றுள்ளது.

ஒவ்வொரு முறை ஒழுக்கத்திற்காக வீரர்கள் குற்றம்சாட்டப்படும் போதும் கிரிக்கெட் வாரிய நிர்வாக அமைப்புகள், ஐ.சி.சி. ஒழுங்குக் குழுவினர் அந்த குறிப்பிட்ட வீரர்களுக்கு கடும் அபராதம் விதித்து அதனை ஒரு பணம் பிடுங்கும் உபாயமாக செய்து வந்துள்ளனர். ஆட்ட உணர்வு விதி முறைகளின் கீழ் அவர்கள் கிரிக்கெட் வாழ்விற்கு நெருக்கடி கொடுக்கவில்லை.

நவீன வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியும் பொறாமையும், வெறுப்புணர்வும் வளர்ந்து வரும் இன்றைய உலகில் இளம் வீரர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த ஐ.சி.சி. எந்த வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

நமது சுய முன்னேற்ற கொம்பு மனோவியலாளர்கள் போல் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்டுகளை வாரியங்கள் தற்போது நியமித்து வருகின்றன. இவர்கள் மேலும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது எப்படி என்றும், வெற்றி மட்டுமே ஆட்டத்தின் குறிக்கோள், தனி மனிதனின் குறிக்கோள் என்று கற்றுக் கொடுக்கின்றனர். இதனால் வாழ்விலும் சரி, வாழ்வின் ஒரு பகுதியான விளையாட்டிலும் சரி தோல்வியை தாங்க முடியாத ஒரு ஆக்ரோஷ மனோ நிலை ஏற்படுகிறது.

முன்பெல்லாம் கிரிக்கெட் ஆட்டம் ஜென்டில் மேன்களின் ஆட்டமாக இருந்தபோது, பார்வையாளர்களும் ஜென்டில்மேன்களாக இருந்தனர். டான் பிராட் மேனுக்கு எதிராக பாடி லைன் பந்து வீச்சு முறை வந்து கிரிக்கெட் விளையாட்டில் முதன் முறையாக ஆட்ட உணர்விற்கு பங்கம் வந்திருந்தாலும் மைதானத்திலோ அதற்கு வெளியேயோ வீரர்கள், ஒருவரிடம் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக வரலாறு கூறிவில்லை.

webdunia photoWD
ஆனால் இயான் சாப்பலை போத்தம் அடித்ததாக கூறப்படும் சம்பவம் கூட கிரிக்கெட் களத்திற்கு வெளியே ஒரு மதுபான விடுதியில் மதுபானத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுதான். ஒரு டெஸ்ட் போட்டியோ அல்லது எந்த ஒரு போட்டியோ நடந்து முடிந்தவுடன் எதிரணி வீரர் ஒருவரை தாக்குவது என்பது தெரு கிரிக்கெட்டில் மட்டுமே சாத்தியம். ஒழுக்கத்தில் ஆஸ்ட்ரேலிய வீரர்களே மோசம் என்ற நிலை போக இந்திய கிரிக்கெட் வீரர்களும் இதில் பெயர் வாங்குவதற்கு ஹர்பஜன்களும் அக்தர்களும் கற்று கொடுத்துள்ளனர்.

உடல் வலுவை வெளிப்படுத்தும் குத்துச் சண்டை, கராத்தே, ஜூடோ, மல்யுத்தம் போன்ற விளையாட்டுக்களிலும் கூட ஒருவர் இன்னொருவரை தாக்குவதற்கு,

அதாவது முறையற்ற விதத்தில் தாக்கி அவரை செயலிழக்கச் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழில் பூர்வ குத்துச் சண்டைப் போட்டிகளில் வெற்றி பெறு பவருக்கு ஏகப்பட்ட பணம் கிடைக்கும். எனவே ஒருவரை முறையற்ற விதத்தில் தாக்குவதற்கு அந்த விளையாட்டினுள்ளேயே சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

ஆனால் அதிலும் கூட தொழில் பூர்வ ஆட்டங்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வீரர்களை முறைப்படுத்தியுள்ளனர். இன்று அந்த ஆட்டங்களில் இது போன்ற வன்முறைகள், தாக்குதல்கள் நடைபெறுவதில்லை. உடல் ரீதியான பலத்தைவிட போட்டி நுணுக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைக் காண்கின்றோம்.

ஆனால் உலகின் ஜென்டில்மேன்'ஸ் கேம் என்று அழைக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டத்தில் தனி நபர் உடல் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இரண்டு பணக்காரர்கள் எடுத்து நடத்தும் ஒரு சர்வதேச முக்கியத்துவமற்ற பொழுது போக்கு குப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில் இன்னொரு வீரரை தாக்குவதற்கான முகாந்திரம்தான் என்ன?

இந்த விஷயத்தில் ஏதோ தடை செய்து அவரிடமிருந்து 3 கோடி ரூபாயை பிடுங்கியதுதான் மிச்சம். ஆனால் இளம் வீரர்கள் சாதாரண தோல்வி ஒன்றுக்கு இப்படி ஆத்திரம் அடைகிறார்கள் என்றால் அது அந்த தனி நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. கிரிக்கெட் ஆட்டம் பணங்காய்ச்சி மரமாக மாறியதும் ஒரு காரணமாகும்.

பார்வையாளர்கள் அராஜகமாக மாறி வருகின்றனர்

webdunia photoWD
ஆஸ்ட்ரேலியாவானாலும், இங்கிலாந்தானாலும், இந்தியாவானாலும் ரசிகர்கள் உணர்வு பூர்வமாக மாறி வருகின்றனர். ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு புது மாதிரியான பிராந்திய வெறியை வேறு உருவாக்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியின் பெயரில் மட்டும்தான் சென்னை உள்ளது. அது தமிழ் நாடு மொத்ததிற்குமான பிரதிநிதித்துவம் கிடையாது. அந்த அணியில் பேருக்கு தமிழக வீரர் பத்ரி நாத் உள்ளார். ஆனால் சென்னை என்று பெயர் சூட்டப்பட்டதும் ஒரு பிராந்திய வெறி ரசிகர்களிடையே நிலவுகிறது. இதே போக்குதான் ஐ.பி.எல்.இன் மற்ற அணிகளை ஆதரிக்கும் அந்தந்த பிராந்திய ரசிகர்களிடையேயும் நிலவுகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

ஹைதராபாதில் சேவாக் ஒரு அதிரடி இன்னிங்சை ரசிகர்களின் எந்த ஒரு கைதட்டலும் இன்றி ஆடும் நிலைமை உருவாகியுள்ளது. தேசங்களுக்கிடையே ஆடப்படும் கிரிக்கெட் ஆட்டங்களால்தான் கிரிக்கெட் உணர்வு சீரழிந்து வருகிறது என்பது போக, தற்போது அதனிலும் மோசமாக குறுகிய பிராந்திய வெறியை கட்டமைப்பதிலும். தனிப்பட்ட வீரர்களிடையே விரோதப்போக்கை வளர்த்துவிடுவதிலும் ஐ.பி.எல். வெற்றி பெற்றுள்ளது.

விளையாட்டுக்கள் மனிதனை பண்பட்டவனாகவும், வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கான ஒரு முறை சார்ந்த வழியாகவும், விளையாடும் போது எதிரணி ஆட்டக்காரர்களையும் தன்னைப் போல பாவிக்கும் ஒரு மன நிலையை வளர்த்துக் கொள்ளவுமே பயிற்றுவிக்கப்பட்டது.

ஆனால் இன்று சராசரி பொருளாதார வாழ்விலும், வணிகத்திலும் காட்டப்படும் எதிரித்தனமான போட்டி மனப்பான்மை விளையாட்டு உணர்வுகளை சாகடித்து, ஆட்டக்காரர்களையும், ஆட்டத்தைப் பார்‌ப்பவர்களையும் காட்டுமிராண்டித்தனத்திற்கு கொண்டு செல்கிறது. மானுடத்தின் நலனைக் காக்க விளையாட்டு மீட்கப்பட வேண்டும்.

யார் செய்வது?