திராவிட் முடிவெடுக்க வேண்டும்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (13:36 IST)
webdunia photoFILE
இந்திய கிரிக்கெட் அணியின் "சுவர்" என்று பெயர் பெற்ற ராகுல் திராவிட் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் தனது திறமைக்கேற்ப ஆட முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இது போன்று ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் அப்போது அந்த குறிப்பிட்ட வீரர் என்ன செய்யவேண்டும் என்றால் சிறிய இடைவெளி விடுத்து உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று மனதை சற்றே இலகுவாக்கிக் கொண்டு மீண்டும் வருவது நல்லது.

அல்லது தாதா சௌரவ் கங்கூலி முடிவெடுத்தது போல் டெஸ்ட் கிரிக்கெட் போதுமானது, காத்திருக்கும் மற்ற இளம் வீரர்கள் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு நாம் வழி விட வேண்டும் என்ற கடினமான ஆனால் பெருந்தன்மையான முடிவை எடுக்க மன உறுதி பெறவேண்டும்.

அல்லது குறைந்தபட்சம் தான் தற்போது களமிறங்கிவரும் 3-ம் நிலையையாவது லக்ஷ்மணுக்கு விட்டுக் கொடுத்து இவர் 5அல்லது 6-ஆம் இடத்தில் களமிறங்க முடிவெடுக்க வேண்டும்.

மேற்கூறிய 3 முடிவுகளில் எதையுமே எடுக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் வீரர்களை ஸ்ரீகாந்த் தலைமை அணித் தேர்வுக் குழுதான் கலந்தாலோசித்து, அவரையும் அழைத்துப் பேசி ஒரு முடிவு காண வேண்டும். இல்லையெனில் ஊடகங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்பது உறுதி.

2008ஆம் ஆண்டு திராவிட் விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்துள்ள ரன்கள் வெறும் 669. இதில் ஒரேயொரு சதம் எடுத்துள்ளார். சராசரி 27.87.

கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் 14.11 என்ற சராசரியில் வெறும் 127 ரன்களை எடுத்துள்ளார் இதில் ஒரேயொரு அரைசதம் எடுத்துள்ளார்.

கும்ளே தலைமையில் இந்திய அணி ஆஸ்ட்ரேலிய சென்ற போது சேவாக் அணியில் இடம்பெறாததால் யுவ்ராஜ் சிங்கை அணியில் சேர்ப்பதற்காக ஜாஃபருடன் துவக்க வீரராக களமிறங்க திராவிட் ஒத்துழைப்பு நல்கினார். ஆனால் அப்போது முதலே அவரது பேட்டிங்கில் வீழ்ச்சி ஏற்பட‌த் துவங்கியது.

ஆனால் அணித் தலைமை பொறுப்பை உதறுவதற்கு முன்பு இருந்த திராவிட் அல்ல இப்போதைய திராவிட் என்று பல ஊடகங்களும் கூறி வருகின்றன.

webdunia photoFILE
கடைசியாக அவர் விளையாடிய நல்ல இன்னிங்ஸ் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக பெங்களூரில் எடுத்த 51 ரன்கள். அதன் பிறகு 5, 39, 11,11, 0,3,3,4. அதாவது 8 இன்னிங்ஸ்களில் 76 ரன்கள். 130 டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்களுடன் 52.12 என்ற அபாரமான சராசரியில் 10,373 ரன்களை எடுத்த ஒரு வீரருக்கு, என்னதான் வீழ்ச்சிக் காலக்கட்டமாக இருந்தாலும், 8 இன்னிங்ஸ்களில் 76 ரன்கள் என்ற அளவுக்கு மோசமாக போக அனுமதித்திருக்கக் கூடாது.

மேலும் இவ்வளவு நீண்ட நாட்களாக, 2 அல்லது 3 தொடர்களுக்கும் மேல், வீழ்ச்சி தொடர்ந்தால் அவரது திறமை ஒரு முடிவுக்கு வருகிறது என்றே பொருள். இன்னும் இரண்டு கேட்ச்களை பிடித்தால் அவர் மார்க் வாஹின் அதிக கேட்ச்கள் என்ற உலக சாதனையை முறியடிப்பார். ஆனால் அதிலும் அவர் பங்களிப்பதில்லை. கேட்ச்களை கோட்டை விடுகிறார். அதனால்தான் சென்னை டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் சதம் எடுக்க முடிந்தது.

பேட்டிங்கில் வீழ்ச்சி, ஸ்லிப் ஃபீலிடிங்கில் வீழ்ச்சி, உற்சாகத்தில் வீழ்ச்சி என்று ஒரே வீழ்ச்சி மயமாக உள்ளது அவரது தற்போதைய கிரிக்கெட் வாழ்வு. தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் தனது பழைய திறமைகளை மீட்டெடுக்கக் கூடிய சரிவுகளாக இது தெரியவில்லை. பேட்டிங்கில் களமிறங்கும்போதே அவருக்கு உள்ள மனத்தடை வெளிப்படையாக தெரிந்தது.

இந்தியா வரலாற்று வெற்றிபெற்ற சென்னை டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் சேவாக் விரைவில் ஆட்டமிழந்தபோது, திராவிட் பெவிலியனில் காண்பித்த உடல் மொழி "என்ன இந்த நேரத்தில் ஆட்டமிழந்து நம்மை பிரச்சனைக்குள்ளாக்கி விட்டாரே இந்த சேவாக்" என்பது போல்தான் இருந்தது.

களமிறங்குதல், பந்துகளை எதிர்கொள்ளுதல், மட்டையை கொண்டு வருதல் என்று அனைத்திலும் அவரது மனத்தடைகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஒரு முறை செய்த தவறை மறு முறை செய்யாத அளவிற்கு கவனமான திராவிட் போன்ற ஒரு வீரர், சைமன்ட்ஸ், கிரேஜா, மிட்செல் ஜான்சன் ஆகியோரிடம் செய்த தவறுகளை அப்படியே பிசகாமல் எல்லா பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் செய்கிறார் என்றால், அந்த தவறுகள் திருத்தி சீரமைக்கப் படக்கூடியதல்ல.

பந்துகள், அளவுக்கு அதிகமாக அல்ல, சாதாரணமாக திரும்பும் ஆட்டக் களத்திலும் கூட பேட்ஸ்மென்கள் பந்துகளை பின்னால் சென்று ஆடுவது பாதுகாப்பானது. அல்லது சேவாக் போன்று மேலேறி வந்து அடித்து ஆடுவது சிறந்தது. இந்த இரண்டையும் செய்யாமல் கால்காப்பை முன்னால் நீட்டும் தவறை தொடர்ந்து அவர் செய்து வருகிறார். அதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் அவரை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு பந்தை வீசி மட்டை விளிம்பை துல்லியமாக பிடித்து விடுகின்றனர்.

இந்தத் தவறுகள் ஏதோ திராவிடின் உத்திகளில் உள்ள கோளாறுகள் மட்டுமே என்பது போல் புரிந்து கொள்பவர்கள்தான் அவருக்கு மேலும் வாய்ப்புகளை அளிப்பார்கள். ஆனால் இது அவரது மனத்தடையின் விளைவாக எழுவது என்று புரிந்து கொள்பவர்கள் அவருக்கு தற்காலிக அல்லது நிரந்தர ஓய்வு அளிப்பார்கள்.

திராவிட் எந்தக் காலத்திலும் தான் அணிக்கான ஒரு வீரர் என்பதை நிரூபித்துள்ளார். கங்கூலி தலைமையில் 2003 உலகக் கோப்பை உள்ளிட்ட பல முக்கிய ஒரு நாள் போட்டிகள், தொடர்கள் ஆகியவற்றில் இந்திய அணியில் ஒரு கூடுதல் பப்ந்து வீச்சாளரையோ, ஆல் ரவுண்டரையோ அல்லது ஒரு கூடுதல் பேட்ஸ்மெனையோ சேர்க்கும் விதமாக அவர் விக்கெட் கீப்பிங் செய்ய தானே முன் வந்தார். விக்கெட் கீப்பிங்கும் உலகத் தரத்திற்கு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

துவக்க வீரராக களமிறங்கி யுவ்ராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பளிக்க ஒத்துழைப்பு தந்துள்ளார். லக்ஷ்மண் அபாரமாக ஆடி வந்த போது அவர்தான் 3ஆம் இடத்தில் களமிறங்க தகுதியான வீரர் என்று திராவிட் பின்னால் களமிறங்கியுள்ளார்.

இது போன்று பல ஒத்துழைப்புகளை வழங்கி அதனால் தன் ஆட்டமும் பாதிக்கப்படாத வண்ணம் செயல் பட்டு வந்த திராவிட் தனது தற்போதைய வீழ்ச்சியை சீர் தூக்கி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வருவது நல்லது.

அவர் ஓய்வு பெற முடிவெடுக்காவிட்டாலும் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க முடிவெடுத்தால் அது அவருக்கும், இந்திய கிரிக்கெட்டிற்கும் பயனுள்ளதாக அமையும்.