சூதாட்டப்புகார்களின் பின்னணியில் இந்திய அயல் உளவு அமைப்பா? பாகிஸ்தான் ஊடகங்கள் சந்தேகம்!
வெள்ளி, 3 செப்டம்பர் 2010 (13:26 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது எழுந்துள்ள கடுமையான சூதாட்டப்புகார்களை அரங்கேற்றியது இந்திய அயல் உளவு அமைப்பான RAWதான் என்று பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
லார்ட்ஸ் விவகாரம் RAW-வின் இன்னொரு சூழ்ச்சியா என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது பாகிஸ்தானின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை.
இந்த செய்திக் கட்டுரையில் ஐ.சி.சி. தலைமைப்பொறுப்பேற்றுள்ள ஷரத் பவார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது தடை செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.
தற்போது இந்த சூதாட்ட நாடகத்தை அரங்கேற்றி பரபரப்பு ஏற்படுத்திய சூதாட்டக்காரர் மஜார் மஜீத் RAW வின் கையாள் என்று மேலும் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது அந்தக் கட்டுரை.
RAW அதிகாரிகள் முதன் முதலாக மஜீத்தை இந்திய கிரிக்கெட்டிற்கு அறிமுகம் செய்துள்ளனர். அதன் பிறகு 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சூதாட்டக்காரர் மஜீத் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்தார் என்றும் தற்போது இந்த சூதாட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய ஆங்கிலப் பத்திரிக்கையின் நிருபருக்கு RAW 50,000 பவுண்டுகளை அளித்து இந்த சூதாட்ட நாடகத்தை நடத்துமாறு கோரியதாகவும் அந்தக் கட்டுரை குண்டைத் தூக்கி போட்டுள்ளது.
மேலும் கைதான மஜார் மஜீத்திற்கு பிணை விடுதலை வாங்கித் தந்தது லண்டனிலுள்ள இந்தியத் தூதர்தான் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது அந்தக் கட்டுரை.
சல்மான் பட், சூதாட்டக்காரர் மஜீத்துடனும், நிருபர் ஒருவருடனும் நிற்பது போன்ற வீடியோ வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்டது என்றும், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸிடம் சூதாட்டக்காரர் பவுண்டுகள் அடங்கிய ஜாக்கெட்டை கொடுப்பதாக வெளிவந்த படங்களும் பொய்யே என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
சூதாட்டக்காரர் மஜீத்தை மும்பை, டெல்லி, ஜொஹான்னஸ்பர்க், கேப்டவுன், துபாய் ஆகிய நகரங்களின் சூதாட்டக்காரர்களுக்கு அறிமுகம் செய்ததே இந்திஅ அயல் உளவு அமைப்பான RAWதான் என்றும் குண்டுமழை பொழிந்துள்ளது அந்தப் பத்திரிக்கைக் கட்டுரை.
இது மட்டுமல்லாது மஜீத்தை இந்திய நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கும் RAW அறிமுகம் செய்து வைத்துள்ளது என்றும் வேட்டு மேல் வேட்டு வைத்துள்ளது பாகிஸ்தானின் டெய்லி மெய்ல்.
இதற்கிடையே பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஹஸன் இந்த ஸ்பாட் ஃபிக்சிங் புகார்களில் சிக்கியுள்ள ஆமீர், ஆசிப், சல்மான் பட் ஆகியோர் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியான வீடியோ எந்த நாளில் எந்த நேரத்தில் எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஒன்று அந்த வீடியோக்கள் போட்டிக்கு முன்பு அல்லது பின்பு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் பி.பி.சி. நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரும் வேண்டுமென்றே மாட்டவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஹசன் தெரிவித்துள்ளார்.
ஹசனின் இந்த சந்தேகங்களினால் ஆடிப்போயுள்ள இந்த சூதாட்டப் புகாரை வெளியிட்ட பிரிட்டன் ஊடகம் மேலும் ஆதாரங்களை வெளியிடுவோம் என்று கூறியுள்ளதோடு, ஹசனின் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியது என்று கூறியுள்ளது.
இந்தச் செய்திகளெல்லாம் உண்மையோ பொய்யோ. ஆனால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் இது போன்ற உளவு அமைப்புகள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்குமேயானால் நாளை நாடுகளுக்கு இடையே போர் மூள விளையாட்டே ஒரு காரணமாகும் அபாயம் உள்ளது என்பதுதான் நம் கவலை.
RAW என்ற உளவு அமைப்பு (ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்) 1968ஆம் ஆண்டு இந்தியா இரண்டு போர்களை சந்தித்த பிறகு உருவாக்கப்பட்ட உளவு அமைப்பு. 1962 ஆம் ஆண்டின் இந்திய-சீன போர் பிறகு 1965ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் ஆகியவற்றிற்குப் பிறகு பாதுகாப்பு நிலையை பலப்படுத்திக் கொள்ளும் முகமாக, நமது அண்டை நாடுகள் மேற்கொள்ளும் இராணுவ மேம்பாடுகள் நமது நாட்டிற்கு அச்சுறுத்தலாகும் வாய்ப்பு ஏற்படுமா என்பதை ஆய்வு செய்து அரசிற்கு தெரிவிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். அதாவது முழுக்க முழுக்க இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை முன்னறிந்து கூற உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ரா’
ஆனால் இன்று இந்த அயல் உளவு அமைப்பு பற்றி வரும் செய்திகள் அபாயகரமானதாகவும் நாடுகளுக்கிடையே பதட்டத்தை அதிகரிப்பதாகவும் உள்ளதோடு, இந்தச் செய்திகள் இரு நாடுகளிலும் உள்ள சாமானிய மக்களிடையேயும் ஒரு விதமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தி மக்களுக்கிடையேயும் ஒருவிதமான வெறுப்பை ஏற்படுத்தி விடும் அபாயத்தையும் கொண்டுள்ளது.
மொத்தத்தில் கிரிக்கெட் அல்லது எந்த ஒரு விளையாட்டோ அரசியல் தலைகளிடம் சிக்கினால் அது என்னவாகும் என்பதற்கு இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு.