சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி? நாளை முதல் டெஸ்ட் போட்டி
புதன், 15 டிசம்பர் 2010 (13:04 IST)
webdunia photo
FILE
செஞ்சூரியன் மைதானத்தில் நாளை இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
டெஸ்ட் தரவரிசையில் முதலாம், இரண்டாம் இடம் வகிக்கும் அணிகள் என்று ஏற்கனவே இந்தத் தொடர் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலிடம் பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்று முதலிடத்திற்கு தகுதியான அணியே என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு சமீபமாக டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. அதே போல் இந்திய அணியும் டெஸ்ட் தொடரை அங்கு இழக்காமல் இருக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு வரலாறு எதிர்மறையாக இருந்தாலும், இந்த அணி அந்த வரலாறை முறியடிக்கும் திறமை உள்ளதுதான் என்பதில் சந்தேகமில்லை.
முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இழந்த இடத்தை மீட்பது குறித்த உத்வேகத்துடன் விளையாடும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணி
மீண்டும் இந்திய துவக்க வீரர்களான சேவாக், கம்பீர் ஆகியோரின் துவக்கத்தில்தான் ஆட்டம்
FILE
இந்தியாவின் பக்கம் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் துவக்கதில் விக்கெட் விழுந்தால் திராவிட் களமிறங்குவார் அவர் அடித்து ஆடுவதா, நின்று ஆடுவதா என்ற குழப்பத்தில் ஆட்டமிழக்க நேரிடலாம்.
webdunia photo
FILE
அதனால் லஷ்மணை 3ஆம் நிலையிலும், திராவிடை லஷ்மண் இடத்திலும் களமிறக்குவது சிறந்த உத்தி. நடுவில் சச்சின் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர் ஆலன் டோனல்ட், போலக், ஃபானி டீவிலியர்ஸ், மெரிக் பிரிங்கிள், மெக்மில்லன், கிரெக் மேத்யூஸ் போன்ற ஸ்விங்கும், பவுன்சும் கொண்ட பந்துகளை வீசும் ஜாம்பவான்களை அடித்து நொறுக்கியவர்தான். எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் அது உண்மையில் சச்சின் டெண்டுல்கர்தான் என்பதில் ஐயமில்லை. அவரும் அது போன்ற ஆட்டக்களங்களில் கட்டை போட மாட்டார். அது அவருக்கு நன்றாகவே தெரியும்.
பேட்டிங் வரிசை ஹர்பஜன்சிங்கின் சமீப தொடர் சதங்கள் மூலம் மேலும் பலமாகியுள்ளது. துவக்கத்தில் சேவாக், கம்பீர், நடுவில் சச்சின், லஷ்மண் தென் ஆப்பிரிக்காவின் இலக்காக இருக்கும். தென் ஆப்பிரிக்காவின் இந்த இலக்குகளினால் திராவிட் பக்கம் கவனம் இருக்காது. இதனை அவர் தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்ளலாம். அதே போல் செடேஷ்வர் புஜாராவை அணியில் தேர்வு செய்வது அவசியம் ரெய்னா முதலில் ஓரிரு டெஸ்ட் போட்டிகளை அங்கு அமர்ந்து பார்த்துப் பழகுவது சிறந்தது.
இந்திய அணிப் பந்து வீச்சு பவுன்ஸ் ஆட்டக்களங்கள் என்பதால் பலமாகவே உள்ளது. ஜாகீர்கான், இஷாந்த், ஸ்ரீசாந்த் அந்த ஆட்டக்களங்களில் எப்போதும் ஒரு அச்சுறுத்தல்தான். அதுவும் கிரேம் ஸ்மித்திற்கு எதிராக ஜாகீர்கான் நல்ல ரிக்கார்ட் வைத்துள்ளார்.
webdunia photo
FILE
சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் பிளைட் செய்யாமல் ஃப்ளாட்டாக வீசினால் அவர் ஹஷிம் அம்லா, ஜாக் காலிஸ் போன்ற பேட்ஸ்மென்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அவருக்கு அந்த ஆட்டக்களங்கள் நல்ல பவுன்ஸ் அளிக்கும். அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஷாட்பிட்ச் பந்துகள் ஒரு போதும் எந்த ஆட்டக்களங்களிலும் வேலைக்கு ஆகாது. ஹர்பஜன் சிங் சிறப்பாக வீசிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் சற்றே பலவீனமான மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இந்தியா சுலபமாக வீழ்த்த முடியும். இது எப்படியும் தென் ஆப்பிரிக்க அணிக்கு 100 அல்லது 150 ரன்களை இழக்கச் செய்துவிடும்.
webdunia photo
FILE
தென் ஆப்பிரிக்க அணி:
தென் ஆப்பிரிக்க அணி தன் சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஆஸ்ட்ரேலியாவிடம் தோல்வி தழுவியதைத் தவிர்த்து மற்ற அணிகள் அங்கு மண்ணைக் கவ்வியே சென்றுள்ளன. ஆனால் முந்தைய தொடரில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்ள முடியாமல் திணறியது தென் ஆப்பிரிக்கா, அதனால் வெற்றியின் பின்னணியில் இந்தத் தொடரை தென் ஆப்பிரிக்கா தொடங்கவில்லை.
பேட்டிங்கில் ஸ்மித்தின் ஃபார்ம் சந்தேகமாக உள்ளது. ஆல்விரோ பீட்டர்சன் ஒரு ரெகுலர் துவக்க வீரர் அல்ல. ஆனால் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் இதுபோன்ற வீரர்களே அதிகம் ரன்கள் எடுப்பார்கள் என்பது வரலாறு.
இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் ஜாக் காலிஸ், ஹஷிம் அம்லா ஆகியோரே, டுமினியை நீக்கி விட்டு பிரின்ஸை தேர்வு செய்திருப்பது இந்தியாவுக்கு நல்லது. பிரின்ஸ்,. டீவிலியர்ஸ், பவுச்சர் ஆகியோரது ஃபார்ம் சீரானது அல்ல. இங்குதான் ஹர்பஜன்சிங் புகுந்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு டேல் ஸ்ட்ய்ன், மோர்னி மோர்கெல் உள்ளன. ஒருவர் அதிவேகப்பந்து வீச்சாளர், மற்றொருவர் பந்துகள் கட்டாந்தரையிலும் கூட தோளுக்கு மேல் எழும்பக்கூடியது. இவரகள் போட்டியை வெல்லும் கூட்டணி. ஸ்பின்னர் பால் ஹேரிஸ் லெக் திசையில் 7 ஃபீல்டர்களை வைத்துக் கொண்டு பேட்ஸ்மெனின் பின்பக்கமாக பந்து வீசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் அச்சுறுத்தல் இல்லை. ஆனால் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் துவக்க வீரர்களை வீழ்த்திவிடும் போது சச்சின், திராவிட் போன்றோர் இவரது எதிர்மறை உத்திக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
கவனிக்கப்படவேண்டிய மற்றொரு வீச்சாளர் சொட்சொபே. இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். பந்துகளை எதிர்பாராத லெந்திலிருந்து எதிர்பாராத உயரத்திற்கு எழுப்பக்கூடியவர். இவர் பாகிஸ்தான் பேட்ஸ்மென் யூனிஸ்கானுக்கு வீசிய சில பந்துகள் உண்மையில் பயங்கரமானதுதான். இவரை ஒரு எச்சரிக்கையுடன் இந்திய பேட்ஸ்மென்கள் அணுகுவது சிறந்தது.
ஸ்லிப் ஃபீல்டிங்
பேட்டிங், பந்து வீச்சு என்பதெல்லாம் சரிசெய்யக்கூடிய ஒன்று. ஆனால் ஃபீல்டிங் மிகவும் முக்கியமானது. அதிலும் தென் ஆப்பிரிக்க ஆட்டக்களங்களில் ஸ்லிப், கல்லி திசையில் கேட்ச் என்பது சாதாரணமான விஷயம். இதில் இந்தியா எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதும் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கக்கூடியதுதான். காலிசுக்கோ, அம்லாவுக்கோ கேட்ச்களை கோட்டைவிட்டால் அது தோல்விக்கு இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
சேவாக், ரெய்னா, லஷ்மண் ஆகியோரை ஸ்லிப் திசையிலும் கம்பீரை கல்லி திசையிலும் நிறுத்துவது சிறந்தது. திராவிட், டெண்டுல்கர், இப்போதெல்லாம் ஸ்லிப் ஃபீல்டிங்கை தவிர்த்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா இந்த விதத்தில் நல்ல ஃபீல்டிங் அணி, பவுச்சர், ஸ்மித், டீவிலியர்ஸ், அம்லா, பீட்டர்சன் ஆகியோர் சிறந்த ஃபீல்டர்களே. ஆனால் அவர்களும் சமீபமாக கேட்ச்களை கோட்டை விடத் தொடங்கியுள்ளனர். இருந்தாலும் இந்தியாவைக் காட்டிலும் அந்த அணி நல்ல ஃபீல்டிங் அணி என்பதில் ஐயமில்லை.
வரலாறை வைத்து இந்திய அணியை எடை போடும் தவறை தென் ஆப்பிரிக்கா செய்யாமலும், தென் ஆப்பிரிக்க ஆட்டக்களங்கள் மேல் அதிக மரியாதை கொண்டு பின்வாங்கும் மனநிலையை இந்தியா அடையாமலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதனை மனதில் கொண்டுதான் கேரி கர்ஸ்டன் முன் கூட்டியே தன் சொந்த அகாடமியில் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
யாருக்காக இல்லாவிட்டாலும் கேரி கர்ஸ்டன் என்ற கடப்பாடு உடைய, இந்த இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்து விடக்கூடாது என்பதில் தீவிர முனைப்பு காட்டி வரும் ஒரு பயிற்சியாளருக்காக இந்தியா டெஸ்ட் தொடரில் தோல்வி தழுவாமல் வரவேண்டும். அதுவே கேரி கர்ஸ்டனுக்கு இந்திய வீரர்கள் செய்யும் கைமாறு.
பிட்ச்கள்:
பொதுவாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா என்றால் பவுன்ஸ் ஆட்டக்களம் என்று ஒரு காலத்தில் கூறப்படுவதுண்டு. இப்போதும் தொடருக்கு முன்னால் வேகப்பந்து ஆட்டக்களம் என்றெல்லாம் கூறுவார்கள் ஆனால் அது முதல் நாள் தவிர மற்ற நாட்களில் ஒன்றுமே ஆகாத செத்த ஆட்டக்களமாகவே இருந்து வருவதைப் பார்க்கிறோம்.
அணிக் கேப்டன்களின், பயிற்சியாளர்களின் அறிக்கைக்கு வெளியே பிட்ச் பற்றி என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது ஒருவரும் அறியமுடியாதது.
இப்போதெல்லாம் எந்த அணிக்கும் பங்கம் வராமல் ஒரு தொடரை முடிக்கும் போக்குகளே அதிகம் காணப்படுகிறது. அதிலும் மோசமாக விளையாடும் அணி தோல்வி தழுவும் நிலைதான் உள்ளது. சமீபத்தில் மட்டை ஆட்டக்களமான அடிலெய்டில் ஆஸ்ட்ரெலியா தோல்வி தழுவியது. அதன் மோசமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாகவே.
இந்தத் தொடர் அது போன்ற சடங்கார்த்தமான ஒரு தொடராக இல்லாமல் உண்மையில் சவாலான நிலைகளை உருவாக்குவதாக இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உண்மையில் ஒரு நல்ல தொடரை நடத்திய பெருமை தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணி (உத்தேசமாக): சேவாக், கம்பீர், திராவிட், சச்சின், லஷ்மண், ரெய்னா, தோனி, ஜாகீர்கான் (முழு உடல்தகுதி பெற்றிருந்தால்), இஷாந்த், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங்.