கங்கூலியை நீக்கிய நேரம் தவறானது!

திங்கள், 21 ஜனவரி 2008 (16:36 IST)
webdunia photoFILE
பெர்த் டெஸ்டில் பெற்ற அபாரமான வெற்றியை கொண்டாடி இன்னமும் முடியவில்லை. இன்னமும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ளது. அடிலெய்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் உற்சாகத்துடனும், அதற்கான உழைப்புடனும் இருந்து வரும் வேளையில் ஒரு நாள் தொடருக்கான அணியைத் தேர்வு செய்து அதிலிருந்து கங்கூலியை நீக்கி இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு இன்னுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொல்கத்தாவில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுவருவதும், சற்று கூடுதலாகப் போய் ரயில் மறியலிலும் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ரசிகர்களின் இந்த எதிர்வினை குறித்து நாம் கருத்து கூற ஒன்றுமில்லை. ஆனால் கங்கூலியை நீக்கும் முடிவு தவறான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி ஒரு திறமையான இளம் வீரர்களைக் கொண்டது என்பதை நாம் மறுக்க முடியாது. 2011 உலகக் கோப்பைக்கான ஒரு பலமான அணியை கடினமான ஆஸ்ட்ரேலிய சூழலில் விளையாட வைத்து பழக்கவேண்டும் என்ற வாதமும் மறுக்க முடியாதது. அனைத்திற்கும் மேலாக ரன்களை வேகமாக ஓடி எடுப்பதும், சிங்கிள்களை கச்சிதமாக கணித்து எடுப்பதும் ஃபீல்டிங்கில் கேட்ச்களை கோட்டை விடாமலும், 2 ரன்களை ஒரு ரன்னாக குறைக்கும் ஃபீலிடிங் திறமையும் தேவை என்பதெல்லாம் மிகச்சரியானதே.

ஆனால் அதற்கு கங்கூலியை அணியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் நியாயமானதே. 16 வீரர்கள் கொண்ட அணியில் அவருக்கு ஒரு இடம் கொடுத்திருக்க வேண்டும் என்பதே சரி. போட்டித் தினத்தன்று ஆட்டக்களத்தின் தன்மைக்கு ஏற்ப 11 வீரர்களை தேர்வு செய்வது அணித் தலைமையின் முடிவு.

ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பும் வாதம் இதில் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியது. தினேஷ் கார்த்திக் தற்போது டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை. ஒரு நாள் போட்டியிலும், சுரேஷ் ரெய்னா, கவுதம் காம்பீர், சேவாக், உத்தப்பா ஆகியோர் இருக்கையில் கார்த்திக் வெறும் பார்வையாளராகவே முடியும் வாய்ப்புகள்தான் அதிகம். எனவே அவருக்கு பதிலாக கங்கூலியை அணியில் தேர்வு செய்திருந்தால், ஒரு பலமான வீரர் இருக்கிறார் என்ற தெம்பில் தைரியமாக களமிறங்கலாம்.

ஆனால் அணியில் மற்ற வீரர்களைக்காட்டிலும் கங்கூலி ஃபீல்டிங்கில் அவ்வளவு திறமையானவர் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவரைப்போன்ற அனுபவமிக்க ஒரு ஆளுமை இளம் வீரர்களுடன் பெவிலியனிலும், பயிற்சியிலும் இருப்பது பலவிதத்தில் இளம் வீரர்களுக்குக் உற்சாகத்தை அளிக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

கங்கூலி அணியிலிருந்து நீக்கப்பட்டது அவரது பேட்டிங்கிற்காக அல்ல எனும் போது, 16 வீரர்களில் அவருக்கு ஒரு இடம் கொடுத்திருக்கலாம் என்பதே நமது கருத்து.

மேலும் இந்த முத்தரப்பு தொடரில் 3வது அணியாக களமிறங்கும் இலங்கை அணிக்கு எதிராக சச்சின், கங்கூலி துவக்க இணை சவாலான ரன் எண்ணிக்கையை பல போட்டிகளில் இலங்கைக்கு எதிராக எடுக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.

எனவே ஒரு அணிக்கு மொத்தம் 8 போட்டிகள் உள்ள இந்த தொடரில் ஒரு 2- 3 முக்கியமான போட்டிகளிலாவது அவரை பயன்படுத்தியிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக வேகப்பந்து வீச்சிற்கும் ஸ்விங் பந்து வீச்சிற்கும் சாதகமாக உள்ள ஆஸ்ட்ரேலிய ஆட்டக்களத்தில் கங்கூலியின் பந்து வீச்சு வெற்றிக்கு நம்மை அழைத்துச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.

ஃபீல்டிங்கில் கங்கூலி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 25 ரன்களை கோட்டை விடுவாரா? அதனால் என்ன? பேட்டிங்கில் ஒரு 40 - 45 ரன்கள், பந்து வீச்சில் சிக்கனமாக ஒரு 7 ஓவர்களை வீசி ஓரிரண்டு விக்கெட்டுகளை எடுத்தால் போதுமே. இதையெல்லாம் தோனியும் யோசிக்கவில்லை, தேர்வுக்குழுவும் யோசிக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

அனைத்திற்கும் மேலாக அடிலெய்டில், பெர்த்தை விட ஆக்ரோஷமாக விளையாடி ஆஸ்ட்ரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்து, தொடரை சமன் செய்வதுதான் தற்போது இந்திய அணியின் குறிக்கோள், இதுபோன்ற சமயத்தில் ஓய்வறையில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் முடிவை தேர்வுக் குழு செய்திருப்பது, கும்ளேயின் கவனத்தை சிதறடிப்பதாக அமையும். எனவே தேர்வுக் குழுவின் முடிவு சரியாக இருக்கலாம். ஆனால் அந்த முடிவை எடுத்த நேரம் மிகமிகத் தவறானது என்பதே நம் கருத்து.

வெப்துனியாவைப் படிக்கவும்