ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யபட்டுள்ளது. இதில் யுவ்ராஜ் சிங் நீக்கப்படுவார் என்று முன்னதாகவே செய்திகள் அடிபடத் துவ்ங்கி விட்டன. அவர் தேர்வு செய்யப்படாதது அவரது கிரிக்கெட் ஃபார்ம் தொடர்பானதா அல்லது அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையா என்பது பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
பத்திரிக்கைகள் தொடர்ந்து அவர் ஒரு நடிகையுடனும், பெண்ணுடனும் நடனம் ஆடியப் புகைப்படத்தை வெளியிட்டு வந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற கேளிக்கை கிரிக்கெட்டின் இரவு நேர விருந்துகளில் கலந்து கொண்டதுதான் அவரது மோசமான கிரிக்கெட்டிற்குக் காரணம் என்று பரவலான கருத்து எழுந்தது.
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியதற்குக் காரணமாக இந்திய அணித் தலைவர் தோனியும் ஐ.பி.எல். கிரிக்கெட் இரவு நேர விருந்தை சுட்டிக்காட்டினார்.
எனவே ஐ.பி.எல். கிரிக்கெட் வள்ர்த்து விட்டுள்ள பண்பாட்டின் முதல் களபலியானார் யுவ்ராஜ் சிங்.
இப்போது நமது கேள்வி என்னவெனில் ஐ.பி.எல். இரவு நேர விருந்தில் யுவ்ராஜ் மட்டும்தான் பங்கேற்றாரா? வேறு எந்த வீரரும் பங்கு பெறவில்லையா? அப்படி பங்கு பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை. அதாவது இப்போது தேர்வு செய்யப்பட்ட அணியிலேயே உள்ள வீரர்களில் சிலர் ஐ.பி.எல். இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லையா?
எனவே கிரிக்கெட் அடிப்படையில் யுவ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அது யுவ்ராஜிற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பத்திரிக்கைகள் அவரது புகைப்படத்தை ஒரு சில பெண்களுடன் வெளியிட்டுவிட்டது. இதற்கு மேலும் அவரை அணியில் தேர்வு செய்தால் பத்திரிக்கையின் கோபத்திற்கு நாம் ஆளாகவேண்டும் என்று ஸ்ரீகாந்த் தலைமை அணித் தேர்வுக் குழு யுவ்ராஜை ஆசியக் கோப்பை கிரிக்கெட்டிலிருந்து நீக்கியிருந்தால் அது இரண்டு விதங்களில் தவறு.
ஒன்று, இது ஒழுங்கு நடவடிக்கை என்பதாகவே யுவ்ராஜிற்கு தெரியப்படுத்துவதாக இருந்தால் அவரது தற்போதைய கிரிக்கெட் ஃபார்மை ஏற்றுக்கொள்வதாக ஆகிறது.
கிரிக்கெட் ஃபார்ம் குறித்த நீக்கம் என்று அவருக்கு தெரியப்படுத்தியிருந்தால் அவரது கவனச் சிதறடிப்பு வெளிவட்டாரப் பழக்கங்களை ஏற்றுக்கொள்வதாக ஆகிறது.
எனவே யுவ்ராஜ் சிங் நீக்கம் பற்றிய உண்மையான காரணங்களை உடனடியாக இந்திய அணித் தேர்வுக் குழு வெளியிட வேண்டும்.
எது எப்படியிருந்தாலும் யுவ்ராஜ் சிங்கிற்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.
கடந்த ஆண்டு சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் வரையில் நன்றாகத்தான் ஆடி வந்தார் யுவ்ராஜ் சிங், அதன் பிறகு 3 தொடர்களில் காயம் காரணமாக விலகினார். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்து விட்டதாக அறிவித்து கொண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்கு அவசரம் அவசரமாக வந்தார்.
ஆனால் ஐ.பி.எல்-க்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் ஒரு வாரத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக அவசரம் காட்டி வந்தார்.
அதன் பிறகு வந்த யுவ்ராஜ் உடல் பருமானாகிப் போனார். ஃபீல்டிங் போயிருந்தது, சாம்பியன் கோப்பைக்கு பிறகு அவர் விளையாடிய 11 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 24 ஆக மட்டுமே இருந்தது.
தற்போது சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கைக்கு இணங்க அவருக்கு ஓய்வு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ. யுவ்ராஜ் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
அணித் தேர்வில் உடற்கோப்பும், ஃபீல்டிங்குமே பிரதான கவனம் செலுத்தப்பட்டதாக ஸ்ரீகாந்த் தெரிவித்ததோடு, எந்த ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றியும் தான் குறிப்பிட விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஏன் தெரிவிக்கக்கூடாது? என்று தெரியவில்லை. இது ஒரு இருட்டடிப்பு வேலை என்பது ஒரு புறமிருந்தாலும் மறுபுறம் யுவ்ராஜ் குறித்த அதிருப்தியை மறைமுகமாகத் தெரிவிப்பதாயும் உள்ளது.
பேட்டிங் திறனைப் பொறுத்தவரை விராட் கோலி, ரெய்னா, ரோஹித் ஷர்மாவைக் காட்டிலும் யுவ்ராஜின் திறமை அதிகமானதுதே. இவர் ஒரு வெற்றி வீரர். ஆல்-ரவுண்டர் என்ற அந்தஸ்தை சிறிது சிறிதாகப் பெற்று வந்தார். ஆனால் அவரது போக்கு சற்றே கிரிக்கெட்டை விட்டு நகர்ந்துள்ளதால் அவரை மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்புவதற்காக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவிற்கு நவம்பர் மாதம் பயணம் மேற்கொள்கிறது. அதற்குள் யுவ்ராஜ் தனது ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் சிக்கல்தான். உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்ய முடியாமல் போனால் அது இந்திய கிரிக்கெட்டிற்கு ஏற்பட்ட இழப்புத்தான், யுவ்ராஜிற்கும் அது ஒரு சொந்த இழப்புதான்.
எனவே இதனை ஒரு பாடமாக ஏற்று அவர் மீண்டும் தனது கவனத்தை கிரிக்கெட் ஆட்டத்தில் செலுத்தி அணியில் விரைவில் இடம்பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.
சச்சின் டெண்டுல்கர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதை ஒரு குறிக்கோளாக வைத்திருந்தார். அதாவது அணி உரிமையாளர் தன் மீது முதலீடு செய்த தொகைக்கு நாணயமாக நடந்து கொள்ளவேண்டும் என்று அவர் நினைப்பதில் எந்த வித தவறும் இல்லை.
ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் தனது தேசக் கிரிக்கெட்டை பாதிக்கிறது என்றால் அதிலிருந்து ஓரிரு போட்டிகள் விலகினால் தவறில்லை. ஆனால் ஆசியக் கோப்பை போன்ற ஒரு முக்கியத் தொடரில் விலகக் கோரியிருப்பது அவர் போன்ற மிகப்பெரிய பிம்பம் உடைய வீரர்களுக்கு நல்லதா என்பதை யோசிக்கவேண்டும்.
கிருஷ்ணமாச்சாரி தலைமை அணித் தேர்வுக் குழு மீண்டும் மீண்டும் ரவீந்தர் ஜடேஜா போன்ற வீரர்களை ஆதரிப்பது ஏன் என்று புரியவில்லை. தொடர்ந்து இர்ஃபான் பத்தான், ராபின் உத்தப்பா ஒழிக்கப்படுவதன் நோக்கம் என்னவென்பதும் புரியவில்லை.
முரளி விஜயின் தரம் என்னவென்பது தற்போது தெரிந்து விட்டது. ஜிம்பாப்வேயிற்கு தேர்வு செய்த அணியிலாவது ராபின் உத்தப்பாவிற்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும்.
சொத்தைப் பந்து வீச்சாளர்களை அனுப்பியதற்குப் பதிலாக ஸ்ரீசாந்த், இஷாந்த் போன்ற பந்து வீச்சாளர்களுடன் இர்ஃபான் பத்தானையும் அனுப்பியிருக்க வேண்டும்.
பயனற்ற ஒரு அணியை ஜிம்பாப்வேயிற்கு அனுப்பியதனால் ஆய பயன் என்ன? ஒன்றும் இல்லை. அஷ்வினைத் தேர்வு செய்திருப்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவர் இடம்பெறவேண்டும் என்பது போன்றுதான் தெரிகிறதே தவிர வேறு காரணம் தெரியவில்லை. ஒரே போட்டியில் அவர் விளையாடியதை வைத்து எப்படி இந்த வாய்ப்பை வழங்க முடியும்?
அதே போல் ஆஷிஷ் நெஹ்ரா, அவர் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வர முடியாத வீச்சாளர் அவருக்கு ஏன் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்கப்படவேண்டும்?
முனாஃப் படேலையோ அல்லது இஷாந்த் ஷர்மாவையோ தேர்வு செய்திருக்கவேண்டும். இலங்கை ஆட்டக்களங்களில் இஷாந்தும், ஜாகீர் கானும் ஒரு முறை இந்திய ஒரு நாள் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணித் தேர்வில் காயமடைந்த வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளதும், யுவ்ராஜ் சிங் நீக்க்ப்பட்டதும் தவிர வேறு எதுவும் சிறப்பம்சம் உள்ளதாகத் தெரியவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட்டிற்கு எந்த விதப் பயனும் இல்லை அது வெறும் கேளிக்கை, பணம், விளம்பரம், பெண்கள் என்ற சுழற்சியில் சிக்கிவிட்டது என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
யுவ்ராஜ் சிங் தற்போது அதன் முதல் களபலியாகியுள்ளார். பி.சி.சி.ஐ. விழித்துக் கொள்ளாது, ஐ.சி.சி. விழித்துக் கொள்ளவேண்டும், ஏனெனில் அனைத்து நாட்டு வீரர்களும் பங்கேற்கும் ஒரு விளையாட்டில், வீரர்கள் கவனம் சிதறும் விருந்துகள் நடைபெற்று வருவதால் இன்று யுவ்ராஜிற்கு நிகழ்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் தொடர் மூலம் நாட்டிற்கு திறமையான கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள் என்பது பொய்யாகியுள்ளது. மாறாக ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் கவனம் சிதறி இன்று முதன் முறையாக திறமையின் அடிப்படையில் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்குக் காரணம் ஐ.பி.எல். யுவ்ராஜ் மட்டுமல்ல மற்ற வீரர்களும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் இது.