பல்வேறு கீழ்த்தரமான சர்ச்சைகள் உருவான, இந்திய -ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர்களுக்கு பெரும் தலைவலிகளை கொடுத்த, ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணம் பல்வேறு கசப்பான அனுபவங்களுக்கிடையே, முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியாவிற்கு வெற்றி என்ற இனிப்பான தருணத்துடன் நேற்று நிறைவடைந்தது.
கடந்த 10 ஆண்டுகளாகவே ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக களமிறங்கிய ஒவ்வொரு அணியும் ஒரு தயக்கத்துடனும், அந்த அணிக்கு நாம் இணையில்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடனும்தான் ஆடித் தோற்றுள்ளன. இதற்கு இந்திய அணியும் விதி விலக்காக இருந்ததில்லை.
ஆனால் இருபதிற்கு 20 போட்டித் தொடரில் இருந்தே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்களிடம் இந்த மனப்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனியும், மற்ற இந்திய அணி வீரர்களும் ஆஸ்ட்ரேலிய அணியை அதன் பலத்தில் இருந்து பார்காமல், அதன் பலவீனங்களை நன்றாக கணித்து அதற்கேற்வாறு ஆட்டமுறையைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்றைய படுதோல்வி முடிவுக்கு பிறகு ஆஸ்ட்ரேலிய அணி ஸ்டீவ் வாஹ் கூறுவது போல் மனத்தளவில் நிலை குலைந்து போயுள்ளது அல்லது இளம் இந்திய அணி அவர்களை நிலைகுலையச் செய்துள்ளனர் என்று கூறலாம்.
நேற்றைய ஆட்டத்தில் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆஸ்ட்ரேலிய வெற்றிக்கு நம்பிக்கை தரும் விதத்தில் விளாசியபோது மற்ற ஆஸி. வீரர்கள் உற்சாகமாக கைகளைத் தட்டி ஆரவாரம் செய்ய, பின்னணியில் தனது இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார் ரிக்கி பாண்டிங். அது ஆஸ்ட்ரேலிய வீரர்களின் உள்ளார்ந்த மனோ நிலையை பிரதிபலிப்பதாயிருந்தது. இந்த இறுதிப் போட்டிகளில் பெற்ற தோல்விகளால் வாடிய முகம் அல்ல அது. ஆஸ்ட்ரேலியாவின் எதிர்கால கிரிக்கெட்டின் கதி குறித்த கவலை தோய்ந்த முகம் அது என்றால் மிகையாகாது.
அணியில் எந்த தருணத்திலும் மனதை ஒரு நிலைப்படுத்தி நிதானமாக செயல்படும் ஆடம் கில்கிறிஸ்ட் நேற்று ஆட்டமிழந்து பெவிலியன் அருகே வந்தபோது கேமிரா மேனின் ஒயர்கள் காலில் சிக்கிக் கொள்ள காமிரமேனைப் பார்த்து கடுமையாக சில வசைகளைக் கூறிவிட்டு உள்ளே சென்றார். ஆம்! ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்களின் மனம் அமைதியை இழந்து விட்டது. தாங்களே உருவாக்கிக் கொண்ட சர்ச்சைகளும், ஆட்டத்தை அவர்களுக்கேயுரிய பாணியில் ஆட முடியாமல் போனதும், தொடர் தோல்விகளும் அந்த அணியை நிலைகுலையச் செய்துள்ளது.
அந்த அணியின் வயதான பெரியோர்கள் உதட்டோரம் வசைகளை பொழிந்தபடி இருந்தனர், இளம் இந்திய அணியினரோ அதனை வயதானவர்களின் புலம்பல் என்று ஆட்டத்தில் கவனம் செலுத்தி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளனர்.
இருபதுக்கு 20 உலகக் கோப்பை நடத்தப்பட்டது பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு நன்மை ஏற்படுத்தியுள்ளது. அதில் வெற்றிபெற ஆடிய உத்வேகமும், அணித் தலைவர் தோனியின் தன்னம்பிக்கை தரும் தலைமைப் பொறுப்பும் சில அபார திறமை பெற்ற இளம் வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது என்றால் மிகையாகாது.
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற இறுதி முத்தரப்பு ஒரு நாள் தொடரில் முதல் 2 இறுதி போட்டிகளிலும் உலக சாம்பியன் அணியான ஆஸ்ட்ரேலியா மீது தொடர் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
இந்திய அணியில் மூத்த வீரர்கள் (சச்சின் நீங்கலாக) நீக்கப்படுகின்றனர். இது போன்ற முடிவுகள் அபாயமானவை என்றும், சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது இது போன்ற பரிசோதனை முறைகளால் தோல்விகளை தழுவினோம் என்றும் முன்பு நாமே கூறியிருந்தோம், ஆனால் இந்திய ஒரு நாள் போட்டி அணித் தலைவர் தோனி, அணித் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்து பலனை நிரூபித்துக் காட்டினர்.
உதாரணமாக சேவாகை தொடர்ந்து தேர்வு செய்யாமல், உத்தப்பா மீது பொறுப்பை அதிகப் படுத்தியதைக் குறிப்பிடலாம். மேலும் பிரவீன் குமாரிடம் உள்ள திறமையை வெளிக்கொணர்ந்ததை கூறலாம். மிக முக்கியமாக இஷாந்த் ஷர்மா, ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு அபாரமான வீரர்கள் நமக்கு இந்த தொடர் மூலம் கிடைத்திருப்பது ஆகியவை அணி நிர்வாகமும் தலைமையும் இளைஞர்களின் பலத்தை நம்பி அவர்களை களத்தில் இறக்கியதனாலேயே என்பதை நாம் இப்போது உணர முடிகிறது.
இந்த திறமைகளை பயன்படுத்தாமல், மீண்டும் கங்கூலி, திராவிட், லக்ஷ்மண் என்று பழைய பேட்ஸ்மென்களை வைத்திருந்தோமானால், வெற்றி பெற முடியாது என்று கூறவில்லை, மாறாக சச்சின் உட்பட இந்த 4 வீரர்களும் அடுத்தடுத்து ஓய்வு பெறும்போது விளையாட ஆளில்லாமல் இந்திய அணி எதிர்காலத்தில் பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம். அதனால் இளம் வீரர்களை இப்போது முதலே டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் வண்ணம் சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பளித்தபடி இருப்பது சிறந்த முடிவுதான் என்பதை இப்போது நாம் ஒப்புக் கொள்ளலாம்.
மாறாக ஆஸ்ட்ரேலிய அணியில் இளம் வீரர்கள் 20- 22 வயதில் அவ்வளவு சுலபமாக அணியில் நுழைந்து விடமுடியாது. ஆஸ்ட்ரேலிய அணியில் 26 அல்லது 27 வயது வரை நுழைய முடியாது. இது நேற்று வரை அந்த அணிக்கு பலன்களை அளித்திருக்கலாம். ஆனால் இனிமேல் இது பலனளிக்காமல் போகலாம்.
ஏனெனில் இந்த டெஸ்ட், ஒரு நாள் தொடர் இரண்டிலுமே ஆஸ்ட்ரேலிய மூத்த, முன்னணி வீரர்களான ஹெய்டன், கில்கிறிஸ்ட், பாண்டிங், மைக் ஹஸ்ஸி, சைமன்ட்ஸ், சற்றே இளம் வீரரான மைக்கேல் கிளார்க் ஆகியோர் இந்திய அணியின் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, இர்ஃபான் பத்தான், பிரவீன் குமார் ஆகிய இளம் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள கடுமையாக திணறி கடைசியில் தோல்விகளையும் சந்திக்க துவங்கியுள்ளனர்.
ஆஸ்ட்ரேலிய அணி என்னவெல்லாம் செய்கிறதோ, அதனை அப்படியே "காப்பி" அடித்தால் நாமும் அந்த அணி போல் வந்து விடலாம் என்ற மாயையை இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் உடைத்தெரிந்துள்ளது.
மாறாக ஆஸ்ட்ரேலிய அணி நிர்வாகம் தனது அணித் தேர்வு முறைகளை இந்தியா போல் மாற்றிக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
மற்ற மூத்த வீரர்கள்போல் அல்லாமல் சச்சின் ஒரு தனிச்சிறப்பு மிக்கவர் என்பதை நிரூபித்துள்ளார். ஏனெனில், இவர் இளம் வீரர்களை தன்னுடன் விளையாட வைப்பவர், அவர்களது உத்திகளை மேற்பார்வை செய்து சரி செய்பவர். ஓய்வறையிலும் பயிற்சியிலும் அவரது சிதறாத கவனம் இளம் வீரர்களுக்கு ஒரு அனுபவப் பாடமாக உள்ளது. மேலும் இன்றைய தினத்தில் ஏதாவது ஒரு விதத்தில் சச்சினின் ஆட்டம் குறித்த விமர்சனங்களை சிலர் எழுதி வருகின்றனர். அவற்றை அணியில் உள்ள இளம் வீரர்களும் வாசிக்க நேரிடுகிறது. ஆனால் அந்த விமர்சகர்களின் வாயை அடைக்குமாறு ஒவ்வொரு முறையும் அவர் புதிது புதிதாக விளையாடிக் காட்டி பதிலடி கொடுப்பதையும் இளம் வீரர்கள் பார்க்கின்றனர்.
இதனால் மனோ பலம் குறையும் போதெல்லாம் அதிலிருந்து எப்படி ஆட்டத்தில் கவனம் செலுத்தி வெளி வருவது என்பதற்கு சச்சினைத் தவிர சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியாது. இது இந்திய அணியில் புதிதாக பிரகாசிக்கும் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக அமையும்.
மொத்தத்தில் ஆஸ்ட்ரேலியாவின் ஆதிக்கத்தை அதன் சொந்த மண்ணிலேயே உடைத்து அந்த அணியை இந்தியா நிலைகுலையச் செய்துள்ளது. இதனை மற்ற அணிகளும் பயன்படுத்தி அந்த அணியினரை வாயைத் திறக்காதவாறு செய்யவேண்டும்.
ஒவ்வொரு முறையும் அந்த அணி இந்த தொடரில் கிரிக்கெட் அல்லாத விவகாரங்கள் மூலம் இந்திய அணியினர் மீது அவதூறுகளை கிளப்பிவந்த போதெல்லாம், அதற்கு அடுத்தபடியாக இந்திய அணி அவர்களுக்கு தங்கள் வெற்றி மூலம் பதிலடி கொடுத்து வந்துள்ளது.
இனிமேலாவது, ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது நல்லது. மைதானத்திற்கு வெளியே ஆடப்படும் இந்த மனோ விளையாட்டுக்கள் எப்போதும் ஒரு அணிக்கு சாதகமாவே முடிவதில்லை.