இந்திய - ஆஸ்ட்ரேலிய தொடர் எப்படி இருக்கும்?

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (20:50 IST)
webdunia photoFILE
இந்திய அணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்ட்ரேலிய தொடருக்கு ஆஸ்ட்ரேலியா சென்றுள்ளது. பேட்டிங்கில் அனுபவமிக்க இரு அணிகளும் பந்து வீச்சில் அவ்வளவு அனுபவம் இல்லாத வீரர்களையே கொண்டு ஆடப்போவதால் இந்தப் போட்டித் தொடர் மிக சுவராஸ்யமாகவும், சவாலாகவும் இருக்கும்.

ஏன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர் என்றால், இந்தியா தொடரை வெல்லும் உறுதியுடன் சென்றுள்ளது. இது நிறைவேறினால் அது வரலாறுதான். மேலும் இந்தியாவின் மூத்த வீரர்களாசச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண் மற்றும் முக்கியமாக கும்ப்ளே ஆகியோருக்கு இதுவே கடைசி ஆஸ்ட்ரேலிய தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இவர்கள் ஒரு குறிக்கோளுடன் ஆடுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

மேலும் ஆஸ்ட்ரேலிய அணி 1992- 93 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தோற்ற பிறகு தொடரை இழந்ததில்லை என்பதும் இந்த தொடரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடராக மாற்றியுள்ளது.

இந்திய அணியிலாவது ஜாகீர் கான், அனில் கும்ப்ளே ஆகியோர் ஆஸ்ட்ரேலிய மண்ணில் தேவையான அனுபவங்களை பெற்றுள்ளனர். ஆஸ்ட்ரேலிய அணியில் பிரட் லீ நீங்கலாக மற்ற பந்து வீச்சாளர்கள் அவ்வளவாக அனுபவம் இல்லாதவர்கள்.

ஆட்டக்களங்கள்

வேகமான ஆட்டக்களம், எழும்பும் ஆட்டக்களம் என்பதெல்லாம் ஒவ்வொரு முறையும் எந்த அணி ஆஸ்ட்ரேலியா சென்றாலும் பேசப்படும் வார்த்தைகள். ஆனால் 1970, 80 மற்றும் 90களின் ஆரம்பக் கட்டங்களில் இடப்பட்ட வேகப்பந்து சாதக ஆட்டக்களங்கள் தற்போது இல்லை என்றுதான் கூறவேண்டும். இதனை ஓரிரு முன்னாள் வீரர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் ஊடகங்கள் தெரிந்தும் அதனை மறைத்து இந்திய வீரர்களுக்கு எழும்பும் ஆட்டக்களங்கள் காத்திருக்கிறது என்று எழுதி வருகிறது.

webdunia photoFILE
மெல்பர்ன் ஆட்டக்களம் சமீப காலங்களாக இந்திய ஆட்டக்களங்கள் போல் நேரமாக நேரமாக பந்துகள் எழும்பாமலும் மெதுவாகவும் செல்லும் ஆட்டக்களமாக இருந்து வருகிறது. இதனை ஸ்டீவ் வாஹ் கூட ஒப்புக் கொண்டுள்ளார். அதனால்தான் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர் என்கிறார் அவர். சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் அணியில் இடம்பெறவேண்டும் என்கிறார்.

எப்போதுமே ஆஸ்ட்ரேலியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 3 விக்கெட்டுகளை விரைவில் சாய்க்கும் திறன் கொண்டவர்கள் என்பதால்தான் ஷேன் வார்ன், மாக்கில் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை திணறடிக்க முடிந்துள்ளது என்பதை நாம் ஒவ்வொரு ஆட்ட நிலவரமாக எடுத்துக்காட்டி நிரூபிக்க முடியும்.

வரும் 20ம் தேதி இந்திய வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள (ஒரே ஒரு) 3 நாள் பயிற்சி ஆட்டம் மெல்பர்னில் நடைபெறுகிறது. விக்டோரிய அணிக்கு எதிராக இந்தியா விளையாடுகிறது. இதில் விக்டோரிய அணியில் வழக்கமாக விளையாடும் சர்வதேச தரம் கொண்ட வீரர்கள் குறிப்பாக பந்து வீச்சாளர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆஸ்ட்ரேலிய அணியின் யுக்தி இது.

தொடருக்கு முன் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை நம் வீரர்கள் கண்ணில் காட்டி விட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். அதனால் விக்டோரியா அணியிலேயே 2ம் நிலையில் உள்ள வீச்சாளர்களை பயன்படுத்துவார்கள் என்பது உறுதி. எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சி, மேலும் அந்த சூழ்நிலைக்கு மன அளவில் தயாராவதற்கு ஒரு வாய்ப்பு அவ்வளவே. மற்றபடி இந்த போட்டிகளில் தீவிர சவால்கள் இருக்காது என்று நம்பலாம்.

ஆஸ்ட்ரேலியாவில் இந்தியா இது வரை...

webdunia photoWD
டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவில் தொடரை வென்றதேயில்லை. 32 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 4 போட்டிகளையே இந்தியா வென்றுள்ளது. 1977- 78ல் பிஷன் பேடி தலைமையில் மெல்பர்ன் மற்றும் சிட்னியில் பாப் சிம்சன் தலைமையிலான இரண்டாம் நிலை ஆஸ்ட்ரேலிய அணியை வென்றுள்ளது. பிறகு கவாஸ்கர் தலைமையில் 1981ல் மெல்பர்ன் மைதானத்தில் கபில் தேவின் அபார பந்து வீச்சால் வெற்றி பெற 142 ரன்கள் தேவை என்ற நிலையில் கிரெக் சாப்பல் தலைமை ஆஸ்ட்ரேலியாவை 83 ரன்களுக்கு வீழ்த்தி தொடரை சமன் செய்தது. பிறகு 2003- 04 தொடரில் சவ்ரவ் கங்குலி தலைமையில் ஸ்டீவ் வாஹ் அணியை அடிலெய்டில் வீழ்த்தியது. இந்த 4 போட்டிகளில்தான் வெற்றி.

1947- 48 முதல் இதுவரை ஆஸ்ட்ரேலிய அணியுடன் இந்தியா வெறும் 68 டெஸ்ட் போட்டிகளையே விளையாடியுள்ளது. சுமார் 59 ஆண்டுகளில் ஆண்டிற்கு ஒரு டெஸ்ட் என்ற சராசரியில் இந்தியா ஆஸ்ட்ரேலியாவுடன் விளையாடியுள்ளது என்றால், துணைக் கண்ட அணிகளின் மீது அவர்களுக்கு உள்ள தவறான மதிப்பீடையே இது காட்டுகிறது.

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் அதிகம் விளையாடியுள்ளது. இது போன்ற பின்னணியில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4 ல் வென்றுள்ளது, 3 ல் தோற்றுள்ளது, 3 போட்டிகளை டிரா செய்துள்ளது என்பது பெரிய விஷயம்தான்.

இந்திய மக்கள் உலகெங்கிலும் சென்று குடியேறத் துவங்கிய பிறகு, இந்திய அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் தற்போது தோனி ஆகிய வீரர்களின் வரவிற்கு பிறகு தொலைக்காட்சி உரிமைகள் வருவாய் இதெல்லாம் பெருகிய பிறகு ஆஸ்ட்ரேலிய அணி இந்திய அணியை மதிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆட்டக்களங்களை பொறுத்தவரை இம்முறை மெல்பர்ன், சிட்னி, பெர்த் மற்றும் அடிலெய்டில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மெல்பர்ன், சிட்னி மைதானங்கள் ஓரளவிற்கு இந்தியாவிற்கு சாதகமாக இருந்து வந்துள்ளது. மெல்பர்னில் 2 முறையும், சிட்னியில் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் சில முறை சிட்னியில் வெற்றிக்கு நெருக்கமாக வந்து வெற்றி பெற முடியாமல் போயுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடிலெய்டில் கடந்த முறை வெற்றி பெற்றுள்ளோம். நாம் அதிகம் விளையாடாத ஒரே ஆட்டக்களம் பெர்த் மட்டுமே. சமீபமாக பெர்த்தில் வெயில் அதிகம் கொளுத்த தொடங்கியுள்ளதால் அங்கு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில்லை என்ற முடிவுக்கு ஆஸ்ட்ரேலியா வாரியம் வந்துள்ளது. மேலும் மிகப்பெரிய அளவில் ரன்களைக் குவிக்கும் ஆட்டக்களமாக அது மாறியுள்ளது என்பதும் ஒரு முக்கியமான விஷயம்.

பெர்த் என்றால் இது வரை நாம் நினைத்திருந்த (உலகின் அதிவேக) ஆட்டக்களம் தற்போது அங்கு இல்லை என்பதும் முக்கியமானது. இருப்பினும் ஆஸ்ட்ரேலியாவில் வேகமான ஆட்டக்களம் பெர்த் ஆட்டக்களமே. அப்படியென்றால் மற்ற ஆட்டக்களங்கள் மெதுவாக விளையாடத் துவங்கிவிட்டன என்றுதானே பொருள்.

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஆட்டக்களங்கள் குறித்த முன் அனுமானத்திலிருந்து இந்திய வீரர்கள் வெளி வருவது அவசியம். பூவா தலையா வென்று தயங்காமல் முதலில் பேட்டிங் எடுக்கவேண்டும்.

உணவு இடைவேளை வரை விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். ஒரு விக்கெட்டைத்தான் அவர்களுக்கு அனுமதிக்கவேண்டும். அதன் பிறகு ஆட்டக்களம் பழகிவிட்டால், பேட்டிங்கிற்கு அருமையான ஆட்டக்களங்கள் அவை என்பது முக்கியமான விஷயம்.

குறைந்தது 125 முதல் 150 ஓவர்கள் விளையாடி 450 அல்லது 500 ரன்களை எடுத்து விட்டால், ஆஸ்ட்ரேலியாவிற்கு நெருக்கடி அதிகமாகும். அதாவது அவர்களை நாம் சுருட்டிவிடலாம் என்பதல்ல. அவர்கள் வேகமாக நம்மை விட அதிக ரன்களைக் குவித்து 5ம் நாளில் 2வது இன்னிங்சில் நமக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று முயற்சி செய்வார்கள், இதனை செய்யும்போது விக்கெட்டுகள் மளமளவென்று விழும் வாய்ப்புகள் எப்போதும் எதிரணியினருக்கு (இந்தியாவிற்கு) உள்ளது.

ஆஸ்ட்ரேலியாவிற்கு உள்ள பயமே டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகிவிடக் கூடாது என்பதுதான். அது போன்ற ஒரு அச்சுறுத்தலை நாம் கொடுப்பது அவசியம். அதற்காக டிராவை மனதில் கொண்டு அடித்து ஆடாமல் பொழுதை ஓட்டும் விவகாரம் ஆஸ்ட்ரேலியாவில் செல்லுபடியாகாது. ஆக்ரோஷமாக ஆடவேண்டும், அதிக ரன்களை குவிக்கவேண்டும், இதுவே போதும் அவர்கள் கோபமடைய! ஆத்திரக்காரர்களுக்கு புத்தி குறைவு என்ற பழமொழிக்கு ஏற்ப அவர்கள் தாறுமாறாக விளையாடுவார்கள். இது நமக்கு சாதகம். கடந்த முறை அடிலெய்டில் அப்படித்தான் நடந்தது. அவர்கள் 568 ரன்களை எடுத்தனர், இந்தியா 533 ரன்களை எடுத்தது, அதனால் டிரா ஆகிவிடும் என்ற அச்சத்தில் வேகமாக ரன்களை குவிக்க முயன்று 2வது இன்னிங்சில் 196 ரன்களுக்கு சுருண்டனர். இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்ட்ரேலியாவில் அந்த அணுகுமுறையில் இப்போதும் மாற்றம் இருக்காது. ஆனால் இயன் சாப்பல் எச்சரிக்கை செய்வது போல் மூத்த இந்திய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை தற்காத்து கொள்ளவும், அணியில் தங்கள் இடத்தை தற்காத்துக் கொள்ளவும் விளையாடினார்களேயானால், அது ஆஸ்ட்ரேலிய அணி நம்மை ஏறி மிதிப்பதற்கு நாமே முதுகை காட்டி நிற்பதற்கு சமம்.

அணுகுமுறை

உதாரணமாக நாம் ஜாஃபரை எடுத்துக் கொள்வோம், அவர் முதல் டெஸ்டில் இரு முறையும் சரியாக விளயாடாமல் ஆட்டமிழந்தார் எனில், 2வது டெஸ்டில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தேவையில்லாமல் கிரீசில் நின்று கொண்டிருப்பார். இந்த அணுகுமுறைதான் மிகவும் அபாயகரமானது. முதல் டெஸ்டில் சரியாக ஆடவில்லையா, அடுத்த டெஸ்டில் அவரை உட்கார வைப்பதுதான் சிறந்த அணுகுமுறை. சேவாக் போன்ற சிறப்புத் திறன் படைத்த வீரர்களுக்கு இது பொருந்தாது. ஜாஃபர், டிராவிட் போன்றோர் அது போன்ற நிலைக்கு ஆளாகக்கூடியவர்களே.

webdunia photoWD
சச்சின் டெண்டுல்கரும், ஆட்டக்களத்தில் ஏதோ பூதம் உள்ளது என்பது போல் உடம்பிலெல்லாம் வாங்கி களத்தில் பொழுதைக் கழிக்கும் போக்கை கைவிடுவது நல்லது. ஏனெனில் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக விக்கெட்டை தற்காத்து கொள்ளும் ஆட்டம் உறுதியாக முடியாது. அங்கு தாக்குதல் முறையே சிறந்த தற்காப்பு உத்தி என்பதையும், அவரது தாக்குதல் ஆட்டத்திற்குத் தான் ஆஸ்ட்ரேலிய வீரர்கள் பயப்படுவார்கள் என்பதையும் அவர் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்திய அணியை பொறுத்த வரை டிராவிட், சேவாக், சச்சின், கங்கூலி, லக்ஷ்மண் ஆகியோர் ஆஸ்ட்டேலியாவிற்கு எதிராக ஆஸ்ட்ரேலிய மண்ணில் தங்கள் திறமைகளை நிரூபித்தவர்கள், எனவே அவர்களுக்கு அங்கு தேவைப்படும் அணுகுமுறை நன்றாகவே தெரியும்.

இந்திய அணி எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

அனில் கும்ப்ளேவிற்கு உள்ள பெரிய சவால், யுவ்ராஜ் சிங்கை விளையாடும் அணியில் தேர்வு செய்வதே. ஆனால் அதற்காக அவரை துவக்க ஆட்டக்காரராக களமிறக்க நினைத்தால் அது தேவையில்லாத சர்ச்சையில் போய் முடியும். தோனிக்கு பதிலாக யுவ்ராஜை அணியில் சேர்த்தால், விக்கெட் கீப்பரும் துவக்க ஆட்டக்காரருமான தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ய வேண்டும். அப்போது சேவாக்கை தேர்வு செய்ய இயலாது. இதுவும் ஒரு மோசமான முடிவாகப்போய் விடும். ஏனெனில் இந்த தொடரில் சேவாக்தான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு. கும்ப்ளே தடுமாறவுள்ள ஒரே இடம் இந்த அணித் தேர்வு விவகாரம்தான்.

நமக்கு உள்ள பெரிய பிரச்சனை பந்து வீச்சுதான். ஆஸ்ட்ரேலிய அணியை மிகப்பெரிய அளவு ரன்களை மிக விரைவில் எடுப்பதை எப்படியாவது தடுத்தாக வேண்டும். முரளிதரனையே ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்ட ஆஸி பேட்ஸ்மென்களை ஹர்பஜனை வைத்து மிரட்ட முடியாது. எனவே பத்தான், ஜாகீர் கான், ஷர்மா அல்லது ஆர்.பி.சிங் மற்றும் கும்ப்ளே இவர்களை தேர்வு செய்வதுதான் சிறந்தது. களத்தடுப்பில் சிறப்பாக செயல்பட்டு, சிக்கனமாக பந்து வீசி ஆக்ரோஷமான ஆஸ்ட்ரேலிய வீரர்களை வெறுப்பேற்றுவதுதான் ஒரே வழி. மற்றபடி இந்த தொடரில் நமது பலம் நமது பேட்டிங் திறமைதான். நாம் எப்பொதும் நம் பலத்திற்கு விளையாடுவதுதான் சிறந்தது.

நடுவர்கள் விவகாரம் ஒரு முக்கியமான அங்கமாக இந்தத் தொடரில் விளங்கும். ஐ.சி.சி. நடுவர்களின் தரம் நாளுக்கு நாள் தாழ்ந்து கொண்டே வருகிறது. அவர்கள் ஏகப்பட்ட முன் அனுமானத்துடன் செயல்படுகிறார்கள். கில்கிறிஸ்ட் முறையீடு செய்தால் அது அவுட் ஆகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். சங்கக்காராவிற்கு 192 ரன்களில் கொடுத்த அபத்த தீர்ப்பு இதற்கு உதாரணம்.

ஒரே சிறந்த நடுவரான சைமன் டோஃபல் இந்த தொடரில் நடுவராக இருக்க முடியாது. பக்னர், பில்லி பெளடன், ரூடி குயர்ட்சன், அலீம் தார், பில்லி டாக்டரோவ் இவர்களில் யாராவது 4 பேர்தான் இந்த தொடருக்கு பணியாற்றுவார்கள். இவர்களின் தரங்கள் ஏற்கனவே கேள்விக்குள்ளாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆஸ்ட்ரேலிய சுற்றுப்பயணங்களில் நடுவர்களின் தவறுகளுக்கு எதிரணியின் முக்கிய வீரர்கள் இலக்காவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு துர்பாக்கிய நிலை. ஆஸ்ட்ரேலிய வெற்றிகளில் இத்தகைய தவறுகள் பெரும்பங்கு வகித்துள்ளது என்பதை அனைவரும் (ஆஸ்ட்ரேலியர்கள் தவிர) ஒப்புக் கொள்வார்கள்.

மைதான வசைகள், இந்திய வீரர்களின் எதிர்வினை, ஆஸ்ட்ரேலியாவின் தமாஷ் ஊடகங்கள், ஷான் டெய்ட், பிரட் லீ ஆகியோரின் 160 கிமீ வேகப்பந்துகள், ரிக்கி பாண்டிங், ஹெய்டன், கில்கிறிஸ்ட் ஆகியோரின் பேட்டிங், சேவாக், சச்சின், டிராவிட், கங்கூலி மற்றும் லக்ஷ்மண் ஆகியோரது ஆட்டங்கள், நடுவர்கள் தீர்ப்புகள் என்று இந்த தொடர் சுவாரஸ்ய நாடகத்தின் உச்சத்திற்கு செல்லும் என்பது மட்டும் உறுதி.


புள்ளி விவரங்கள்:

68 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா 32ல் வென்றுள்ளது. இந்தியா 15ல் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட் "டை". 20 போட்டிகள் டிரா.

ஆஸ்ட்ரேலியாவில் 32 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளது. இதில் 4 டெஸ்ட் போட்டிகளையே வென்றுள்ளது. 8 போட்டிகளை டிரா செய்துள்ளது. ஆஸ்ட்ரேலியா 20 போட்டிகளை வென்றுள்ளது.

இதிய அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த வீரர் ஆலன் பார்டர் இவர் 20 டெஸ்ட்களில் 52.23 என்ற சராசரியில் 1,567 ரன்களை எடுத்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் 21 டெஸ்ட்களில் 53.11 என்ற சராசரியில் 1,859 ரன்களை எடுத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்ட்ரேலிய வீரர் ரிச்சி பெனோ என்ற சுழற்பந்து வீச்சாளர். இவர் 8 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீச்சாளர் அனில் கும்ப்ளே. இவர் 14 போட்டிகளில் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

பயண விவரம் :

முதல் டெஸ்ட், மெல்பர்ன், டிச 26 - 30
2வது டெஸ்ட், சிட்னி, ஜனவரி 2- 6
3வது டெஸ்ட், பெர்த், ஜனவரி 16- 20
4வது டெஸ்ட், அடிலெய்ட், ஜனவரி 24- 28