இந்திய அணி தோல்வி : கவாஸ்கர் கடும் விமர்சனம்!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (14:13 IST)
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், வீரர்கள் சிலரின் முன்னுரிமைகள் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதி வரும் சுனில் கவாஸ்கர், தனது பத்தியில் வீரர்களின் பயிற்சி உள்ளிட்ட முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கும் பண மழை ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக தங்களை ஏலம் எடுத்துள்ள நிறுவன விழாவில் பங்கேற்பதே வீரர்கள் சிலரின் முன்னுரிமையாக இருந்துள்ளது என்று கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். 2ஆவது டெஸ்டிற்கு ஒழுங்காக தங்களை தயார் செய்து கொன்டார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடுமையான வெயிலில் நடந்து முடிந்த சென்னை டெஸ்டிற்கு பிறகு 3 முழு ஓய்வு நாள் இருந்தது, இதில் 2 முழு ஓய்வு நாளிலும் சில வீரர்கள் காணாமல் போன மாயம் என்ன?

ஐ.பி.எல்.-இல் தங்களை ஏலம் எடுத்த நிறுவனத்தின் விழாவில் நடனம் ஆடுவதுதான் இவர்களின் முன்னுரிமையாக இருக்கிறது, வலைப்பயிற்சியில் தங்களது தவறுகளை திருத்திக் கொள்வதில் அல்ல.

டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ளே, வலைப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, சென்னை டெஸ்டில் விளையாடாத வீரர்கள் சிலர் ஏன் வலைப்பயிற்சி செய்ய முடியவில்லை? விரேந்திர சேவாக் 319 ரன்களை அடித்த பிறகு அவருக்கு ஒரு நாள் பயிற்சியிலிருந்து ஓய்வு தருவது நன்று அல்லது ஒரு பந்து வீச்சாளர் கடுமையாக உழைத்து வெயிலில் பந்து வீசியுள்ளார் என்றால் அவருக்கு ஓய்வு அளிப்பதும் நன்று.

ஆனால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாதவரும், விக்கெட் எடுப்பாரா மாட்டாரா என்று சந்தேகத்தை கிளப்பும் வண்ணம் பந்து வீசியவர்களும் பயிற்சியிலிருந்து ஒதுங்குவது அவர்களின் கடமை உணர்வு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

வலைப்பயிற்சியில் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள பாடுபடுவதை விடுத்து இவர்கள் நடன அடிகளை பயிற்சி செய்து வருகின்றனர். தாங்கள் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது கிரிக்கெட்டை வைத்துத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.

பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் கண்டிப்பாக இருக்கவேண்டும் அல்லது இந்த வீரர்கள் அவரை ஏறி மேய்ந்து விடுவார்கள” என்று அந்த பத்தியில் கடுமையாக சாடியுள்ளார் கவாஸ்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்