இந்தியா கர்வம் கொள்ளும் பிராண்டாம் ஐபிஎல்- சித்துவின் உளறல் பேச்சு!
சனி, 18 மே 2013 (11:03 IST)
FILE
ஐபிஎல். ஸ்பாட் பிக்சிங், சூதாட்டம் பற்றியெல்லாம் நியாயமாக எதுவும் கூறாமல் பிசிசிஐ அடிவருடியாக இருந்து வரும் நவ்ஜோத் சிங் சித்து இந்தியா கர்வம் கொள்ளும் ஒரு பிராண்ட் ஐபிஎல்.கிரிக்கெட் என்று பிசிசிஐ-யின் ஏஜெண்டாக உளறிக் கொட்டியுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்: "இந்தியா கர்வம் கொள்ளும் ஒரு பிராண்டான ஐபிஎல். கிரிக்கெட்டை ஒருசில ஊழல்வாதிகள் இழுத்து மூட நாம் அனுமதிக்கக்கூடாது. ஆட்டத்டைத் தூய்மை படுத்து ஆனால் கோககோலா, மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய ஐபிஎல் என்ற பிராண்டை சிறுமைப் படுத்த வேண்டாம்." இதுதான் நவ்ஜோத் சிங் சித்துவின் அக தரிசனம்!
இந்தியர்கள் கர்வம் கொள்ள ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன இருக்கிறது? அது நடத்தப்படும் லட்சணம்தான் சில ஆண்டுகளாக தெரிகிறதே?
மேலும் உலக தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களையெல்லாம் தங்களது உடமையாக்கி பில்லியன் டிரில்லியன் கணக்கில் சம்பாதித்து கொழுத்து வரும் மைக்ரோசாப்ட் போன்று ஐபிஎல் ஒரு பிராண்ட் என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் பணம் கொழுத்து அலைகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அன்னியச் செலாவணி சட்டத் திட்டங்களையெல்லாம் மோசடி செய்வதாக ஏற்கனவே ஐபிஎல் உரிமையாளர்கள் சிலர் மேல் கடந்த ஆண்டுதானே புகார் எழுந்தது?
இதைவிட வயிற்றெரிச்சல், கோககோலாவாம்! முதலில் ஐபிஎல்.-இன் தலைமை ஸ்பான்சர் பெப்சி, அதனுடைய பரம வைரி போட்டி நிறுவனமான கோக கோலாவை ஐபிஎல்.உடன் சித்து ஒப்பு நோக்கியதற்கு ஏதாவது அவதூறு வழக்கை அவர் சந்திக்காமல் இருக்கவேண்டும். சரி இதனை விடுவோம்.
பெப்சி ஆகட்டும் கோககோலாவாகட்டும்... இதனால் என்ன இந்தியர்களுக்கு பெருமை வந்து விடப்போகிறது. இந்தியாவின் நீராதாரங்களையெல்லாம் சுரண்டிக் கொழுத்து லாபங்களை அமெரிக்கா கொண்டு செல்லும் இந்த இரண்டு நிறுவனங்கள் குறித்து பெருமைப் பட இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ என்ன இருக்கிறது?
எவ்வளவோ அமைப்புகள் பெப்சி, கோககோலாவின் தன்மைகள் பற்றி கேள்விகள் எழுப்பி, விழிப்புணர்வு அறிக்கைகள் செய்து, இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்திய மக்கள் பெருமைப்படும் ஒரு பிராண்டிற்கு எதிராக ஏன் விழிப்புணர்வு இயக்கம் நடத்தவேண்டும்?
உலகக் கோப்பை வெற்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி நம்பர் 1 நிலையை எட்டுவது இதெல்லாம்தான் இந்திய மக்களுக்கு பெருமை. ஐபிஎல். கிரிக்கெட்டினால் என்ன பெருமை இருக்கிறது என்பதை சித்து விளக்கவேண்டும்.
வர்ணனையில் உட்கார்ந்து கொண்டு தனது கிளிஷே ரக ஆங்கிலத்தினால் அசட்டு ஜோக்குகள் அடித்துக் கொண்டு அவர் செய்யும் கோணங்கித் தனங்கள் பார்க்க சகிக்கவில்லை.
குறைந்தது ஐபிஎல். கிரிக்கெட்டில் பணம் வருகிறது இது போன்ற செய்கைகளில் ஈடுபடும் வீரர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று ஒரு கிளேஷே ரக எதிர்வினையாவது அவர் ஆற்றியிருக்கவேண்டும்.
முதலில் ஐபிஎல். கிரிக்கெட்டை ஒரு கிரிக்கெட் ரசிகர் ஏன் பெருமையாக கருதவேண்டும். அதில் புரியப்படும் சாதனைகள் எந்த வித அதிகாரபூர்வ சாதனைப் பட்டியலிலும் இடம்பெறப்போவதில்லை. மோசமான தரநிலையில் ஆடப்படும் கிரிக்கெட் ஐபிஎல்.
பீட்டர்சன், பிளிண்டாஃப், சச்சின், ஹர்பஜன் சிங்,முனாப் படேல்,இஷாந்த் சர்மா என்று பெரும் தலைகளின் பேட்டிங், பவுலிங் திறமைகளையும் காலி செய்யும் ஒரு போட்டித் தொடரே ஐபிஎல். கிரிக்கெட்.
இளம் வீரர்களை பணத்தாசை காட்டி இழுத்து அவர்களை பணத்தைத் தவிர எந்த விதத்திலும் கிரிக்கெட்டை யோசிக்கவிடாமல் அடித்து மழுங்கச் செய்யும் ஒரு கிரிக்கெட் போட்டித் தொடரே ஐபிஎல். இதற்கெல்லாம் பெருமைப் பட முடியுமா என்ன?
எந்த விதத்தில் ஐபிஎல். கிரிக்கெட்டைக் கண்டு பெருமை படுவது? சித்து பிளீஸ் சொல்லுங்க!