தொடர்ந்து இந்தியாவிற்கு வந்து விளையாடும் அயல்நாட்டு அணிகள் குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸீலாந்து ஆகிய அணிகள் 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்தால் இந்தியாவை மிரட்டலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வருகின்றனர்.
ஆனால் இங்கு ஷேன் வார்ன், முரளிதரன் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களெல்லாம் ஒன்றுமில்லாமல் விளாசப்பட மைக்கேல் கிளார்க், தென் ஆப்பிரிக்காவின் நிக்கி போயே, முன்னதாக நியூஸீலாந்து ஆஃப் ஸ்பின்னர் பிரேஸ்வெல் ஆகியோர்களுக்கே விக்கெட்டுகள் கிடைத்துள்ளது.
ஆனால் இவர்களும் இந்த வெற்றிகளை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் விஷயம்.
மார்க் டெய்லர் இந்தியாவுக்கு ஆஸ்ட்ரேலிய அணியை அழைத்து வந்தபோது ஷேன் வார்ன் இருந்தாலும் கெவன் ராபர்ட்சன் என்ற ஆஃப் ஸ்பின்னரையும் அழைத்து வந்தார்.
ஆனால் என்ன ஆயிற்று, சென்னை டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்ட்ரேலியா 71 ரன்கள்
FILE
முன்னிலை பெற்றிருந்தும் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் ஷேன்வார்னையும் ராபர்ட்சனையும் புரட்டி எடுக்க 4 மணி நேரத்தில் சச்சின் 155 ரன்களை விளாசி ஆஸ்ட்ரேலியாவிடமிருந்து வெற்றியைப் பிடுங்கினார்.
2001ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் "ஆட்கொள்ள வேண்டிய கடைசி பிரதேசம்" என்று கூறிக்கொண்டு இங்கு வந்து மும்பை டெஸ்ட் போட்டியில் வென்றார்.
கொல்கட்டா டெஸ்ட் பற்றி நாம் மீண்டும் கூறத் தேவையில்லை. லஷ்மணும் திராவிடும் பிழிந்து எடுத்தனர். மீண்டும் ஷேன் வார்ன் மாட்டினார்.
அந்தத் தொடரின் முடிவில் ஷேன் வார்னிடம் இயன் சாப்பல் அவரது பந்துவீச்சு பற்றிக் கேட்டார், அதற்கு ஷேன் வார்ன், "நான் அவ்வளவு மோசமாக வீசியதாகக் கருதவில்லை. வி.வி.எஸ்.லஷ்மண் போன்ற வீரர்கள் என் பந்து வீச்சை மிக நன்றாக விளையாடினார்கள் என்றே நான் கருதுகிறேன்." என்று கூறியுள்ளார்.
அதுவரை சச்சின் டெண்டுல்கர் நீங்கலாக, லஷ்மண் போன்ற ஒரு வீரரை எதிர்கொண்டதில்லை என்பதே வார்னுக்கு அன்று சவாலாக இருந்தது.
லெக்-ஸ்பின் பந்தை மேலேறி வந்து சுழலும் திசைக்கு எதிர்திசையில் மிட் ஆன் திசையில் பவுண்டரி அடித்து பிறகு அதே பந்தை மீண்டும் பின்னால் சென்று மிட்விக்கெட்டில் புல் ஷாட்டையும் ஆடிய ஒரு வீரரை ஷேன் வார்ன் சந்திக்கவில்லை.
சச்சின் டெண்டுல்கர் ஷேன் வார்னை கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ், ஆன் டிரைவ், புல்ஷாட், ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப், பெடல் ஸ்வீப் என்று சகல விதமான ஷாட்களையும் ஆடிக்காட்டி அசத்தினார்.
அதற்கு அடுத்த தொடரில் கில்கிறிஸ்ட் தலைமையில் ஆஸ்ட்ரேலியா இங்கு வந்தபோதும் வார்ன் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை அதற்குக் காரணம் சேவாக் அப்போது பெரிய ஃபார்மில் இருந்தார். இதே சென்னையில் அவரும் ஒரு 155 வெளுத்தார்.
சமீபமாக ஆஸ்ட்ரேலியாவின் ஜேசன் கிரேசா இங்கு வந்து 8 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் கைப்பற்றினார் ஆனால் கொடுத்த ரன்கள் வரலாறு காணாத 300க்கும் மேற்பட்ட ரன்கள். அதன் பிறகு அவரைத் தற்போது டாஸ்மேனியாவின் பள்ளி கிரிக்கெட் மைதானங்களில் மட்டுமே காண முடிகிறது. பிராட் ஹாட்ஜ் ஆசையாக வந்து ஆஸ்ட்ரேலிய மண்ணிலேயே மண்ணைக் கவ்வி அந்தத் தொடர் முடிந்தவுடன் ஓய்வே அறிவித்து விட்டார்.
நேதன் ஹாரிட்ஸ் கடைசியாக முடிந்த தொடரில் எதிர்பார்த்தது போலவே சோபிக்க முடியாமல் போனது. இந்தியாவுக்கு ஸ்பின்னர்களை நம்பி வந்தால் அது அவர்களை பலிகடாவாக்குவதில்தான் போய் முடியும் என்பதில் ஐயமில்லை.
webdunia photo
FILE
சேவாக் ஒரே நாளில் 284 ரன்கள் குவித்த அன்றைய தினம் முரளிதரன் தான் ஓய்வு பெறும் திட்டத்தை யோசித்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
இந்திய வீரர்கள் அதுவும் குறிப்பாக இப்போது விளையாடும் பேட்ஸ்மென்கள் சுழல் பந்தை எதிர்கொள்வதில் கில்லாடிகள். உடனே அஜந்தா மெண்டிஸ் என்று கூறலாம். அவர் ஒரு தொடரில்தான் புரியாத புதிராக இருந்தார். அதன் பிறகு அவர் இலங்கை அணிக்கு புரியாத புதிராக மாறி விட்டார். அவருக்கும் அடி மேல் அடி விழுந்தது. காரணம் இந்திய பேட்ஸ்மென்கள்.
இந்திய பேட்ஸ்மென்களை ஓரளவுக்குக் கட்டிப்போட்டது தென் ஆப்பிரிக்க அணி என்றால் மிகையாகாது, காரணம் அவர்களிடம் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் இருந்தனர். ஆனால் ஸ்மித் புத்திசாலித்தனமாக பால் ஹேரிஸ் என்ற சுழற்பந்து வீச்சாளரை விக்கெட் எடுக்கும் வீச்சாளராக பயன்படுத்தவில்லை. அவரை எதிர்மறை உத்தியைக் கடைபிடிக்கும் ஒரு வீச்சாளராகப் பயன்படுத்தியதால் பால் ஹேரிஸ் சேதாரமில்லாமல் தப்பித்தார்.
கடைசியில் கில்கிறிஸ்ட் தலைமை ஆஸ்ட்ரேலிய அணி என்ன செய்தது? மெக்ரா, கில்லஸ்பி, காஸ்பரோவிச் ஆகியோரை ஓடி வந்து ஸ்லோ ஆஃப் கட்டர்களை போடச் செய்து இந்திய பேட்ஸ்மென்களை சற்றே குழப்பி வெற்றி பெற்றனர்.
1970 ஆம் ஆண்டு மற்றும் 80ஆம் ஆண்டுகளில் இருந்த மேற்கிந்திய அணியின் அச்சந்தரும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இந்த ஸ்பின் ஆட்டக்களத்தில் வெற்றிப் பந்து வீச்சாளர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
மற்ற படி இங்கு அப்துல் காதிர், இக்பால் காசிம், சக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமட் என்று எத்தனை விதவிதமான பந்து வீச்சாளர்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. தொடரை வெல்ல முடியாது.
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் தரமான ஒரு சுழற்பந்து வீச்சாளர், சிறந்த ஃபீல்டிங் வியூகம், வீரர்களுக்கு ஏற்ற உத்திகள் என்று எதிரணி கேப்டன்கள் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.
கில்கிறிஸ்ட் தலமை ஆஸ்ட்ரேலிய அணி செய்த சூழ்ச்சி உத்தி எல்லா காலத்திலும் செல்லுபடியாகாது. எனவே பலதரப்பட்ட தரமான வேகப்பந்து, சுழற்பந்து வீரர்களை அணியில் அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இப்போதைய இந்திய பேட்ஸ்மென்களை மிரட்ட முடியும்.
சரி இங்கு வெற்றி பெற்ற ஸ்பின்னர்களே இல்லையா என்றால், இருக்கிறார்கள். ஆஸ்ட்ரேலியாவின் ஆஷ்லி மேலட், ரிச்சி பெனோ, மேற்கிந்திய அணியின் லான்ஸ் கிப்ஸ், இங்கிலாந்தின் டெரிக் அண்டர் வுட் ஆகியோரைக் குறிப்பிட முடியும்.
இதில் ரிச்சி பெனோ தனித்து நிற்பார் அவர் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 52 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். சராசரி 20 ரன்களுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பந்து வீச்சாளர்களின் வெற்றி அந்த அணிகளின் தரமான மற்ற வேகப்பந்து வீச்சினால் விளைந்ததே.
எனவே இந்தியா வரும் அணிகள் ஸ்பின்னர்கள் என்று சொத்தையான வீரர்களை அழைத்து வருவதற்குப் பதிலாக தரமான வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்து வருவதே சிறந்தது.