ஆஸ்ட்ரேலியாவை கலங்க அடித்த ஆஃப் ஸ்பின்னர் ரசூல் யார்? ஒரு ஆல்ரவுண்டர் தயாராகிறார்!
புதன், 13 பிப்ரவரி 2013 (15:49 IST)
FILE
சென்னையில் குருநானக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வாரியத் தலைவர் அணிக்காக 7 விக்கெட்டுகளை 45 ரன்களுக்கு வீழ்த்திய பர்வேஸ் ரசூல் பற்றி அதிகம் இதுவரை தெரியவில்லை.
ரஞ்சி கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்த சீசனில் 594 ரன்கள் இரண்டு சதங்கள், 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
நேற்று 171/4 என்ற நிலையில் 2 விக்கெட்டுகளை எடுத்திருத ரசூல் அதன் பிறகு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்ட்ரேலியா 241 ரன்களுக்கு சுருண்டது. இன்று சற்று முன் பேட்டிங்கிலும் 54 பந்துகளில் 4 பவுண்டரி ஒருசிக்சருடன் 36 ரன்களையும் எடுத்துள்ளார் ரசூல்.
ரசூலின் ரஞ்சி டிராபி கோச் பிஷன் பேடி ஆவார். ரசூல் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்.
தூஸ்ராவை இவர் பயிற்சி செய்து வந்தபோது பிஷன் பேடி இவரிடம் கூறியது சுவையான ஒன்றாகும், தூஸ்ரா என்ற உருது வார்த்தைக்கு பொருள் 'இரண்டாவது ஒன்று" என்பதாகும்.
அவர் தூஸ்ரா என்றவுடன் பிஷன் பேடி முதல் ஒன்றை நீ சரியாக வீசிவிட்டால் இரண்டாவது ஒன்றுக்குத் தேவை என்ன இருக்கிறது என்று கேட்டாராம். இதனை ரசூல் சிரித்தப்படியே கூறியுள்ளார்.
பந்துகள் மிகவும் மெதுவாக திரும்பும் குருநானக் கல்லூரி வளாக மைதானத்தில் ரசூல் அருமையான கட்டுப்பாட்டுடன் வீசினார். நல்ல பிளைட் மற்றும் பவுன்ஸ்.
ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் எட் கோவன் ரசூலுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக பாராட்டியுள்ளார்.
அஷ்வின் தனது டிவுட்டரில் ரசூலுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளார்.
பேரி ரசூல் பற்றி கூறுகையில், "அவர் ஒரு முழுமையான ஸ்பின்னர், அவரது ஆக்ஷன் அபாரம். தோள்களை நன்றாகப் பயன்படுத்துகிறார். நல்ல வேகப்பந்து தினுசும் இவரிடம் உள்ளது. இவர் நேர்மறை ஆஃப்ஸ்பின்னர், நல்ல ஆல் ரவுண்ட் கிரிக்கெட் வீரர், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்" என்று கூறியுள்ளார் பேடி.
பேடி இவருக்கு கூறிய அறிவுரை: பேட்டிங்கில் பந்தை நன்றாக விளாசு, பந்து வீச்சில் நன்றாக திருப்பு இதுதான் உன் வேலை" என்றாராம்.
பந்தை நன்றாகத் தூக்கி வீசப்பயப்படாதே, அதுதான் பேட்ஸ்மெனை ஏமாற்றும், சிகர்கள் அடித்தால் கவலைப்படாதே என்று பேடி இவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிஜ் பெஹாரா என்ற ஊர் இவருக்கு சொந்த ஊர். இது அனந்த்னாக் மாவட்டத்தில் உள்ளது. அண்டர் - 14 விளையாடி ஜூனியர் ரேங்கிலிருந்து உருவாகி வந்துள்ளார் ரசூல்.
இவரது தந்தை, சகோதரர் ஆசிப் ஆகியோரும் கிரிக்கெட் வீரர்களே.
சர்வதேச அணிக்கு எதிராக பந்து வீச வாய்ப்பு கிடைத்த முதல் ஜம்மு காஷ்மீர் வீரர் இவர் என்பது குறிப்பிடத்த்க்கது.