ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் நாளை பிரிஸ்பேனில் தொடக்கம்
புதன், 24 நவம்பர் 2010 (17:18 IST)
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 5.30மணிக்குத் துவங்குகிறது.
ஆஸ்ட்ரேலியாவுக்கும், ரிக்கி பாண்டிங்கிற்கும் வாழ்வா சாவா தொடராகும் இது. மாறாக இங்கிலாந்து அணியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தன்னம்பிக்கையும், அணி உணர்வும் கூடியுள்ளது.
ரிக்கி பாண்டிங் தலைமையில் 3 டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக ஆஸ்ட்ரேலியா தோற்ற நிலையில் நாளை களமிறங்குகிறது. ஆனால் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்ட்ரேலியா 1988ஆம் ஆண்டிற்கு பிறகு தோற்றதேயில்லை.
இந்த ரிக்கார்டை நாளை இங்கிலாந்து மாற்றியமைக்கக் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். பயிற்சி ஆட்டத்தில் இரண்டு வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியா ஏ-யுடன் சிறப்பாக விளையாடியது.
கிரேம் ஸ்வான் இந்தத் தொடரில் ஒரு முக்கியமான பந்து வீச்சாளராக உயர்வு பெறுவார் என்று கருதப்படுகிறது. பின்வரிசையில் இவரது பேட்டிங்கும் பரிமளிக்கும் என்று தெரிகிறது.
ஏனெனில் ஆஸ்ட்ரேலியா கடந்த சில போட்டிகளாக கடைசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் மிகுந்த சிரமம் பாராட்டி வருகிறது.
ஆஸ்ட்ரேலிய பேட்டிங் ரிக்கி பாண்டிங்கின் மிகப்பெரிய இன்னிங்ஸ்களை அடிப்படையாக கொண்டுள்ளது. மற்ற படி ஷேன் வாட்சன், சைமன் கேடிச் ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் சுமாராகவே ஆடி வருகின்றனர். மேலும் மைக் ஹஸ்ஸி இன்னும் தன் பேட்டிங்கில் அதிரடி முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
வாட்சன் சேவாக் போல் மட்டையைச் சுழற்றி துவக்கத்திலேயே பந்து வீச்சாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதன் மூலம் சில உடைப்புகளைச் செய்ய முடியும்.
முதலில் கிரகாம் ஸ்வானின் பந்து வீச்சை அடித்து நொறுக்கவேண்டும். ஏனெனில் அவர் செட்டில் ஆகிவிட்டால் ஆஸ்ட்ரேலியாவின் நடுக்கள வீரர்களை (பாண்டிங் உட்பட) பதம் பார்ப்பார். எனவே ஸ்வானை இலக்காக எடுத்து தாக்க வேண்டும்.
இங்கிலாந்தின் பேட்டிங் பலமானதுதான், ஆனால் சமீபத்தில் பாகிஸ்தானின் ஆசிப், அமீர், மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஆகியோர் ஆடிப் போகச்செய்தனர். ஆஸ்ட்ரேலியா முதலில் ஸ்ட்ராஸ், டிராட், பீட்டர்சன் ஆகியோரை இலக்காக்குவது அவசியம் பிறகு காலிங்வுட் ஏனெனில் காலிங்வுட் லஷ்மண் போன்ற ஒரு வீரர் அணி நெருக்கடியில் இருக்கும்போது விளையாடக் கூடியவர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், இளம் வீரர் ஸ்டீவ் ஃபின் ஆகியோருடன் ஸ்வானையும் சேர்த்து பலமாக உள்ளது.
ஆஸ்ட்ரெலிய பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. ஆனால் மிட்செல் ஜான்சனின் பந்து வீச்சு கவலையளிப்பதாக ஆஸ்ட்ரேலியாவுக்கு உள்ளது. மேலும் ஹில்ஃபென்ஹாஸ், பீட்டர் சிடில் ஆகியோரில் ஹில்ஃபென்ஹாஸ் சிறப்பாக உள்ளார். ஆனால் சிடில் நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டிக்கு வந்துள்ளார். எனவே அவரது பந்து வீச்சு பற்றி நாம் ஒன்றும் கூற முடியாது.
பிரிஸ்பேனில் ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெற முடியாமல் செய்தால் நிச்சயம் அதற்குப் பிறகான போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா நிச்சயம் வெற்றிக்காக தத்தளிக்க நேரிடும்.
2004ஆம் ஆண்டு சௌரவ் கங்கூலி தலைமையில் இந்தியா சென்ற போது பிரிஸ்பேன் போட்டியில் இந்தியா டிரா செய்தது. இதனால் அதற்கு அடுத்த போட்டியில் அடிலெய்டில் ஆஸ்ட்ரேலியா தோல்வி தழுவ நேரிட்டது. இதனால் ஸ்டீவ் வாஹ் கடும் நெருக்கடிக்குள்ளானார்.
எனவே இங்கிலாந்து பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்ட்ரேலியாவை வெற்றி பெற விடாமல் தடுத்தாலே ஆஷஸ் தொடரை அங்கு 1986-87க்கு பிறகு கைப்பற்றுவதில் ஒரு முன்னெடுப்பைச் செய்வதாய் அமையும்.