ஆரம்பிச்சுட்டாங்கய்யா! இந்தியாவின் பிராட்மேன் சச்சின்தானாம்

ஞாயிறு, 21 ஏப்ரல் 2013 (16:23 IST)
FILE
சச்சின் டெண்டுல்கர் புகழ்பாடுபவர்களிடமிருந்து எப்போதுதான் நமக்கு விடுதலையோ? இப்போது வந்துட்டாருய்யா மேத்யூ ஹெய்டன், இந்தியாவின் பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர்தான் என்று தலைமேல் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறியுள்ளார்.

"வரும் காலங்களில் அவரைப் பற்றி புத்தகங்களும் திரைப்படங்களும் வெளிவரும் (அய்யய்யோ!) ஏனெனில் இந்திய கிரிக்கெட்டை அவர் புதிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் இந்தியா வெற்றி பெற அவர் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் அவர்தான், நாட்டின் பிராட்மேன் அவர்தான்" என்று கூறியுள்ளார் மேத்யூ ஹெய்டன்.

டெண்டுல்கர் 40 வயதை எட்டுகிறார். இது குறித்து அவுட்லுக் சிறப்பிதழை ஒன்றை கொண்டு வருகிறதாம். அதில் சச்சின் புகழ் பாடுபவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏராளமாம்.

"அனைத்து காலங்களிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்ற பட்டியலை என்னைத் தயாரிக்கச் சொன்னால் அது எந்தக் காலமாக இருந்தாலும் சச்சினுக்குத்தான் முதலிடம்.இது அவரது கிரிக்கெட் பற்றியது மட்டுமல்ல, சச்சின் வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, அவர் சூட்சுமமான அதிபெருமைகளின் உரு-உடல் வடிவம். நம்பிக்கை என்ற ஒன்று அவரது ரூபத்தில் ரூபம் பெற்றுள்ளது. அவர் கிரிக்கெட்டையும் விட மேலானவர்" - இதுவும் ஹெய்டந்தான். போதுமடா சாமி!

இன்னும் கேட்போம், "சச்சின் தன்னிலே ஒரு இயக்கம். ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு ஆராயப்பட்டு, சிந்திக்கப்பட்டு வருகிறது பல ஆண்டுகளாக. கஷ்டகாலமும் இருக்கலாம் நல்ல காலங்களும் இருக்கலாம் ஆனால் அவர் ஆகச்சிறந்த பிளேயர் என்பதில் இருவேறு கருத்து இல்லை" என்று மேலும் கண்மணி பொன்மணி சேர்த்து இழைத்துள்ளார் ஹெய்டன்.

இந்தாப் பிடி இன்னும் கொஞ்சம்: 'சச்சின் ஒரு நாடு, அவர் ஒரு நம்பிக்கை, அவர் ஒரு கலாச்சாரம், இந்திய கிரிக்கெட் அணியின் சுமையை அவர் நீண்ட ஆண்டுகளாக சுமந்து வருகிறார். இது 1.4 பில்லியன் ரசிகர்களின் திரண்டெழுந்த எதிர்பார்ப்புகளின் சுமை.

சச்சின் மீது நான் ஏராளமான மதிப்பு வைத்திருக்கிறேன், இது நட்பு என்பதை விட எனக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்படி இப்படி பாமாலை பாடியுள்ளார் மேத்யூ ஹெய்டன். இன்னும் கொஞ்சம் விட்டால் நாமாவளி பஜனை, திவ்யநாம சங்கீர்த்தனம் எல்லாம் ஏற்பாடு செய்வார்கள் போலிருக்கிறது.

ஒரு தனிமனிதனை அவர் எவ்வளவு வரப்பிரசாதியாக இருந்தாலும் இந்த அளவுக்கு நாயக வழிபாடு செய்வது இன்னமும் மனித குலம் தங்களது கூட்டு நனவிலி மனத்தின் கூறுகளை பிரக்ஞை மனோநிலைக்கு கொண்டு வந்து சிந்திக்கும் ஆற்றலைப் பெறவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

ஒரு கிரிக்கெட் வீரரின் வரையறை என்னவோ அந்த அளவுக்குத்தான் அவரது திறமைகள் மதிப்பிடவேண்டும். அதுவும் மற்ற வீரர்கள், புள்ளிவிவரங்கள் அவருக்கேயுரிய தனித்தன்மை ஆகிய அளவுகோல்கள் கொண்டே மதிப்பிடப்படவேண்டும். குருட்டுத் தனமான வழிபாட்டு மனோபாவம் பெரும்பாவம்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்