அழுகுணி வெற்றியும் - ஆரோக்கிய வெற்றியும்!

சனி, 19 ஜனவரி 2008 (20:47 IST)
பெர்த் டெஸ்டில் இந்தியா இன்று பெற்ற வெற்றி ஒரு வரலாற்றை முடித்து வைத்தது மட்டுமல்ல. புதிய வரலாற்றையும் துவக்கி வைத்துள்ளது!

webdunia photoFILE
ஆம்! ஆஸ்ட்ரேலியாவை அதன் பலமான பெர்த்தில் இந்தியா வீழ்த்த முடிகிறது என்றால், மற்ற அணிகள் எந்த மைதானத்தில் வேண்டுமானாலும் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியும் என்பதை இந்தியா இன்று அனில் கும்ளே தலைமையில் நிரூபித்துள்ளது.

சிட்னியில் ஆஸ்ட்ரேலியா பெற்றது “அழுகுணி” வெற்றி என்பதையும், தங்களுடைய வெற்றி ஆரோக்கியமானது என்பதையும் இந்தியா இந்த வெற்றி மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

2005 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் வீழ்ந்த ஆஸ்ட்ரேலியா அதற்குப் பிறகு ஒரு டெஸ்டில் கூட தோல்வியடையவில்லை. மேலும் பெர்த் மைதானத்தில் சுமார் 10 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியா தோற்றதில்லை என்ற சாதனையையும் இந்தியா முறியடித்துள்ளது.

மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், சவுரவ் கங்கூலி தலைமையில் 2003ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்ட்ரேலியா அடைந்த தோல்விக்கு பிறகு, இன்று பெர்த்தில்தான் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

லக்ஷ்மணும், ஆஸ்ட்ரேலியாவும்!

ஆஸ்ட்ரேலியா என்றால் லக்ஷ்மணுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது போலும். ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே டான் பிராட்மேனின் 1948ம் ஆண்டு தோல்வியுறாத அணியை அடுத்து, ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய அணிதான் சிறந்தது என்ற பேச்சுகளுக்கு இடையே 2001ம் ஆண்டு அந்த அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டது.

webdunia photoFILE
மும்பையில் முதல் டெஸ்டை எளிதாக வென்ற அந்த அணி, கொல்கட்டாவில் இந்தியாவை ஃபாலோ ஆன் ஆடப் பணித்தது. ஆனால் அப்போது துவங்கினார் லக்ஷ்மண் அடித்தார் ஒரு காவியமான 281 ரன்களை, ஆஸ்ட்ரேலிய தொடர் வெற்றிக் கனவு தகர்ந்தது. இந்திய அபார வெற்றி பெற்றது.

பிறகு அதே தொடரில் சென்னை டெஸ்டில் 2வது இன்னிங்சில் லக்ஷ்மண் எடுத்த 67 ரன்கள் ஆஸ்ட்ரேலிய அணியிடமிருந்து டெஸ்ட் வெற்றியைப் பறித்ததோடு, தொடரையும் வென்று இந்தியா வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது.

2003- 04 தொடரில் சவுரவ் கங்கூலி தலைமையில் புத்துணர்வு பெற்ற இந்திய அணி ஆஸ்ட்ரேலிய சென்றது. அப்போது பிரிஸ்பேனில் 75 ரன்களை அடித்த லக்ஷ்மண் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியாவின் ரன் எண்ணிக்கையை காட்டிலும் இந்தியாவை முன்னிலை பெற வைத்தார்.

அதன் பிறகு அந்த புகழ்பெற்ற அடிலெய்ட் டெஸ்ட். மீண்டும் திராவிட், லக்ஷ்மண் இணை ஆஸ்ட்ரேலியாவின் வெற்றிக் கனவுகளை தகர்த்தது. லக்ஷ்மண் 148 ரன்களை விளாசினார். இந்தியா வெற்றி பெற்றது.

அதன் பிறகு சிட்னியில் இவர் அடித்த 172 ரன்களும், சச்சினுடன் இணைந்து பெற்ற 353 ரன்களும் ஆஸ்ட்ரேலிய மண்ணில் தொடர் வெற்றியை சாதிக்க வைத்திருக்கும், ஆனால் அது (மூச்சை பிடித்துக்கொண்டு ஸ்டீவ் வாஹ் ஆடிய ஆட்டத்தால்) நிறைவேறவில்லை.

நடப்பு டெஸ்ட் தொடரில் சிட்னியில் அபாரமாக ஆடி சதம் எடுத்து உற்சாகம் அளித்தார் லக்ஷ்மண். அந்த டெஸ்டை ஆஸ்ட்ரேலியா அருவருப்பான முறையில் வென்றது. இல்லையெனில் இந்தியா வென்று தற்போது 2- 1 என்று முன்னிலைப் பெற்றிருக்கும்.

தற்போது பெர்த் வெற்றியிலும் லக்ஷ்மணின் பங்கு அசாத்தியமானது. 2வது இன்னிங்சில் சரிந்திருக்க வேண்டிய இந்தியாவை 79 ரன்கள் மூலம் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக ஆஸ்ட்ரேலிய மண்ணில் 1000 ரன்களையும் அவர் கடந்து விட்டார் என்றால், ஆஸ்ட்ரேலியாவின் சிம்ம சொப்பனம் லக்ஷ்மண் என்று கூறினால் அது மிகையாகாது.

சிட்னியில் ஆஸ்ட்ரேலியா பெற்ற வெற்றியையும், பெர்த்தில் இந்தியா பெற்ற வெற்றியையும் ஒப்பு நோக்கினால், சிட்னியில் நடுவர்கள் செய்த தவறுகள், ஹர்பஜன் விவகாரம், அணிகளுக்கிடையே கசப்பான உணர்வுகள் ஆகியவற்றின் முறை தவறிய சாதகங்களால் ஆஸ்ட்ரேலிய அணி பெற்ற வெற்றி அது. இத்தனை அவலங்களையும் தாண்டி அனில் கும்ளேயின் தலைமையில் இந்திய அணி உண்மையான கிரிக்கெட் உணர்வுடன் களமிறங்கி ஒரு அபார வெற்றியைப் பெற்று தங்களது அப்பழுக்கற்றது என்பதை கிரிக்கெட் உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

webdunia photoFILE
ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தோல்வியையே சந்தித்து பழ்க்கமில்லாத அணி இந்த தோல்வியை மென்று விழுங்குவது கடினமே.

இதிலிருந்து அவர்கள் மீறி பலமான மனோ நிலையில் களமிறங்குவதற்கு நாளாகும். அதற்குள் அடிலெய்ட் டெஸ்ட் வருகிறது. “பாண்டிங் தலைக்கு குறிவைக்கிறார் கும்ள” என்றெல்லாம் ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் இதற்குள் எழுதத் துவங்கியுள்ளன.

ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சு பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று இந்தியா நிரூபித்ததோடு, பலமான பேட்டிங் வரிசையும் உள்ளே புகுந்து நாசம் செய்து உலகிற்கு நிரூபித்துள்ளது.

ஸ்விங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்திடம் கோட்டை விட்டது; தற்போது அதே ஸ்விங் பந்து வீச்சில் இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது ஆஸ்ட்ரேலியா. ஷான் டெய்ட், பிரட் லீ போன்று 150 கி.மீ. வேகம், 160 கி.மீ. வேகம் என்பதெல்லாம் வெற்றாகிப் போனது. இஷாந்த் ஷர்மா, பத்தான், ஆர்.பி.சிங், ஜாகீர் கான் போன்று பந்துகளை ஸ்விங் செய்தால் ஆஸ்ட்ரேலியாவை எந்த மைதானத்திலும் எந்த அணியும் வீழ்த்த முடியும்.

இன்றைய ஆஸ்ட்ரேலிய தோல்வி உலக கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமான தினம் என்றால் அது மிகையாகாது.