அதிக வெற்றிகள்: கங்கூலியைக் கடந்து தோனி சாதனை!

செவ்வாய், 5 மார்ச் 2013 (15:30 IST)
FILE
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டன் குறிப்பாக டெஸ்ட் கேப்டன் என்ற பெருமைக்கு சௌரவ் கங்கூலிதான் இருந்து வந்தார். தற்போது டெஸ்ட்களில் அதிக வெற்றிகளைப் பெற்று தோனி அவரது சாதனையைக் கடந்துள்ளார்.

கங்கூலியால் அறிமுகப்படுத்தப்பட்டவரே தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசீலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றதும், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை டிரா செய்ததும் தோனியின் கூடுதல் பலம். ஆனால் சௌரவ் கங்கூலி ஆஸ்ட்ரேலியாவில் பலமான ஸ்டீவ் வாஹ் அணிக்கு எதிராக டிரா செய்துள்ளார், இங்கிலாந்தில் தொடரை சமன் செய்துள்ளார்.

ஆனால் தோனி ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக அயல்நாடுகளில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் குறிப்பாக.

இன்றைய வெற்றியுடன் சேர்த்து 45 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப்பெர்று கங்கூலியின் சாதனையைக் கடந்தார் தோனி. கங்கூலி 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளை மட்டுமே பெர்ற்றிருந்தார்.

அயல்நாட்டு வெற்றி என்று எடுத்துக் கொண்டால் அது கங்கூலி பக்கம்தான் உள்ளது. தோனிக்கு அந்த 8- 0 உதை பெரும் இழுக்கை ஏற்படுத்தியது.

அணுகுமுறை ரீதியாக கங்கூலி வேறு, தோனி வேறு. இவர் கேப்டன் கூல், கங்கூலியோ ஆக்ரோஷமானவர். தனது பொறுப்பில் அதிக கர்வம் கொள்பவர். ஒவ்வொரு வெற்றியிலும் பெருமிதம் கொள்பவர் தோல்வியில் கோபமடைபவர். ஆனால் தோனி கேப்டன் கூல் வெற்றி தோல்விகள் வீரனுக்கு ஜகஜம் என்று வடிவேலு கூறுவதுபோல் என்று கூறலாம் அல்லது தமிழ் கூறும் நல்லுலகில் வழங்கி வரும் 'சான்றாண்மை' எய்தப்பெற்றவர் என்று கூறலாம்.

ராகுல் திராவிட் 25 டெஸ்ட் போட்டிகளில் 8-இல் வென்றுள்ளார். அஜாருதீன் 47-இல் 14 வெற்றி,பட்டௌடி 40-இல் ஒன்பது வெற்றி.

தோனி இந்த சாதனை பற்றி கூட தன்னடக்கமாகத்தான் கூறுகிறார்:

இது மிகவும் உயர்வு நவிற்சியாகும், ஊதிப் பெருக்கப்படும் விவகாரமாகும். இப்போது எங்கள் ஓய்வறையைப் பார்த்தால் புரியும், யார் எவ்வளவு போட்டியை வென்றுள்ளார்கள் என்பதெல்லாம் எங்கள் மனதில் இல்லை. முக்கியம் என்னவெனில் டெஸ்ட் போட்டிகளில் வெல்லவேண்டும் என்பதே. எண்ணிக்கை ஒரு பொருட்டேயல்ல. இந்த இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடினோம் அவ்வளவே" என்கிறார் கேப்டன் கூல்.

கங்கூலி 2001 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா தொடருக்கு எதிராக தொடங்கி வைத்த கடினமான மனோ நிலை, தன்னம்பிக்கை ஆகியவை அப்படியே தோனியிடம் கைமாற்றப்பட்டது. ஒருநாள் கிரிக்கெடில் தோனி இருதரப்பு தொடரில் அதிகம் வென்றுள்ளார். உலகக் கோப்பையை வென்றுள்ளார், 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார். ஐ.பி.எல் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் என்று தோனி கங்கூலியை விட அதிகம் இப்பகுதியில் ஸ்கோர் செய்கிறார்.

அந்த வழியில்தான் தோனியின் வெற்றியும் அடங்கியுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டியில் தோனி இரட்டை சதம் அடித்தது நிச்சயம் டெஸ்ட் போட்டிகளைப் பற்றிய அவரது எண்ணப்போக்கை மாற்றியிருக்கக்கூடும்.

எப்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கடினமான தருணத்தில் ஸ்டீவ் வாஹ் இரட்டைச் சதம் எடுத்தது அவரது பேட்டிங், கேப்டன்சி வாழ்விலும் ஏன் ஆஸ்ட்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்விலும் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதோ அதுபோன்று தோணியின் இந்த இரட்டைச் சத சாதனையும், அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற சிறந்த கேப்டன் என்ற பெருமையும் வெளிநாடுகளிலும் அவரால் வெற்றி பெற முடியும் என்பதை உருவாக்கினால் அது இந்திய கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானதாக அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்