ஃபார்ம் அவுட் பற்றி சற்றும் கவலைப்படாத கம்பீரின் அலட்சியப் போக்கு!

செவ்வாய், 11 டிசம்பர் 2012 (15:13 IST)
FILE
டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது. பேட்டிங்கில் கடுமையாக சொத்ப்பை வருவதோடு முக்கிய வீரர்களை (சேவாக், புஜாரா) ரன் அவுட் செய்து இந்திய அணிக்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் கம்பீர் தனது பார்ம் பற்றி கவலைப்படாமல் அலட்சியப்போக்கில் இருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.

தொடர்ந்து 5 சதங்கள் அடித்து பிராட்மேனை நெருங்கியவர், நேபியரில் நியூசீலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் 643 பந்துகள் விளையாடினார். இரண்டாவது இன்னிங்ஸில் உலகில் எந்த ஒரு வீரரும் அவ்வளவு நேரம் விளையாடிய்ரிப்பது சந்தேகம்தான். 436 பந்துகளை சந்தித்தார் அந்த இன்னிங்ஸில் 100 பந்துகளை ஆடாமல் விட்டுள்ளார். இப்படியெல்லாம் செய்து இந்திய தோல்வியைத் தவிர்த்த கம்பீர் இன்ற்று அணிக்கு ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளார் என்றால் அதன் காரணம் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் அது கொடுக்கும் பணத்திமிரும் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கிக்கொண்டு 60 மற்றும் 93 ரன்கள் எடுத்து தனது இரும்பு மனத்தை உலகிற்குக் காட்டியவர் இந்த கம்பீர். அந்த கம்பீரை இப்போது காணவில்லை. ஏதோ ஒன்று அவரை கடுமையாக மாற்றி விட்டது.

பெரிய வீரர்கள் ஃபார்ம் இல்லாதபோது கடுமையாக பயிற்சி செய்து ஆலோசனைகளைப் பெற்று முற்றிலும் புதிதாக மீண்டெழுவார்கள். சச்சின் டெண்டுல்கர் இன்றும் கூட 5 அல்லது 6 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்வது வழக்கம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு அவர் விமர்சனங்களைக்கூட அலட்சியம் செய்து வருகிறார்.

இப்போது அவரது மோசமான பேட்டிங் பற்றி பேச்சை எடுத்தால் கூட அவரது உணர்வுகள் கொதிப்படைகின்றன.

இங்கிலாந்திலும் ஆஸ்ட்ரேலியாவிலும் படு கேவலமாக ஆடிய கம்பீர் எங்கள் ஊருக்கு வாருங்கள் படையல் வைக்கிறேன் என்ற சிறுபிள்ளைத் தனமான வார்த்தை உத்வேகத்தைக் காட்டினார். ஆனால் உள்நாட்டிலும் கூட அவர் சதம் எடுக்கவில்லை.

அணித் தேர்வாளர்களும் 3 ஆண்டுகளாக சதம் எடுக்காத ஒரு வீரரை கேள்விகேட்பதில்லை. அவர் சாமர்த்தியமாக தனது சராசரி கீழே விழாமல் ஆடி வெளியேறிவருகிறார். எங்கிருந்தோ ஒரு சுயபாதுகாப்பு உணர்வும், அணியின் வெற்றிக்கு ஆடாத தன்மையும் அவரிடம் குடிபுகுந்துள்ளது.

நடப்பு தொடரில் மும்பையில் பிரக்யான் ஓஜா கிரீசில் இருக்கும்போது இவர் ஆக்ரோஷமாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கவேண்டும் ஆனால் அவரோ தான் நாட் அவுட்டாக வரவேண்டும், துவக்கத்தில் இறங்கி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்த கவாஸ்கர் போன்று தானும் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் கவாஸ்கரின் அந்த ஆட்டத்துடன் இவரது ஆட்டத்தை யாராவது ஒப்பிட முடியுமா? பாகிஸ்தானில் மோசமான நடுவர்களுக்கு எதிராக, இம்ரான், சர்பராஸ் நவாஸ் ஆகியோரின் தாக்குதல் பந்து வீச்சிற்கு எதிரகா அது நிகழ்ந்தது.

உள்நாட்டில் கிழிக்கிறேன் வாருங்கள் என்று வாய்பேசிய கம்பீர் 15 டெஸ்ட் போட்டிகளில் 7ஐ அயல் நாட்டிலும் 8-ஐ இந்தியாவிலும் விளையாடியுள்ளார் சராசரி வெறும் 27 ரன்களே.

FILE
ஆனால் இந்திய தேர்வுக்குழுவினால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு கடைசியில் அணியை விட்டு தூக்கப்பட்ட வாசிம் ஜாஃபர் நீக்கப்படுவதற்கு முன்னால் 15 டெஸ்ட் போட்டிகளில் இவரை விட அதிக சராசரி வைத்திருந்ததுதான் கசப்பான உண்மை அதில் 3 சதங்களும் அடங்கும். ஒரு சதம் கேப்டவுனில், கொல்கட்டாவில் இரட்டைச் சதம் இதைத் தவிர 5 அரை சதங்கள். ஜாபருக்கு அப்போது வயது 30தான். கம்பீரின் இப்போதைய வயதை விட ஒரு வயது குறைவு ஜாபருக்கு. ஜாபரை ஒழித்தது உண்மையில் ஒரு நேரமையற்ற, அறமற்ற செயல் என்பது தெளிவு.

இங்கிலாந்துக்கு இந்திய அணி சென்றபோது வாசிம் ஜாபர், தினேஷ் கார்த்திக்கைத்தான் தேர்வு செய்திருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் அதற்கு முந்தைய தொடரில், அதாவது திராவிட் கேப்டன்சியில் அங்கு சென்று தொடரை 1-0 என்று கைப்பற்றிய தொடரில் துவக்க வீரர்களாக இருவரும் 54 ரன்கள் சராசரி வைத்திருந்தனர். ஆனால் நட்சத்திர வீரர்கள் பின்னால் செல்லும் இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டிற்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பந்து வீச்சில் பிரவீண் குமார் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து நிறைய ஓவர்களை வீசி வருகிறார். இங்கிலாந்தில் குக் விக்கெட்டை ஓரிரு முறை வீழ்த்தியுள்ளார். ஆனால் அவர் தேவையில்லை! அதேபோல் டிண்டாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால்தான் என்ன கெட்டுப்போய்விடும்?

கம்பீரை உடனடியாக தூக்கிவிட்டு அஜின்கியா ரஹானேயை அணியில் எடுக்கவேண்டும். தோனியை நீக்கி விட்டு தினேஷ் கார்த்திக்கை கொண்டு வரவேண்டும். இவர்களும் இளைஞர்கள்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்