டார்ஜான்.... தமிழ்ப் படங்களின் வில்லன்

வெள்ளி, 1 ஜூலை 2016 (16:55 IST)
கடந்த மூன்று வாரங்களாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை ஆங்கிலப் படங்களே கைப்பற்றின.


 


இந்த வாரமும் ஆங்கிலப் படங்களின் கை ஓங்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று சமுத்திரகனியின் அப்பா, சத்யராஜ், சிபிராஜ் நடித்துள்ள ஜாக்சன் துரை, ஸ்ரீராம் நடித்துள்ள பைசா, ஷாமின் ஒரு மெல்லிய கோடு, வர்மாவின் வில்லாதி வில்லன் வீரப்பன் ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. 
 
வில்லாதி வில்லன் வீரப்பன் தெலுங்கு டப்பிங் படம். வீரப்பனின் கதை என்றாலும், இந்தப் படத்தை தமிழ்ப் படமாக யாரும் கருதவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. 
 
ஒரு மெல்லிய கோடு திரைப்படமும் வாங்க ஆளில்லாமல் பெட்டிக்குள் கிடந்து ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிதாக ஆர்வமில்லை. படம் நன்றாக இருக்கிறது என்ற மவுத் டாக் மட்டுமே இதனை காப்பாற்றும்.
 
பைசா திரைப்படம் குப்பை பொறுக்கிறவர்களின் கதை. தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கியிருக்கிறார். இந்தப் படமும் ரசிகர்களின் ஆர்வப் பட்டியலில் கிடையாது.
 
சமுத்திரகனியின் அப்பா சென்டிமெண்டில் முக்கியெடுத்த பதார்த்தம். ஓவர் இனிப்பு உடம்பு ஆகாது போலவே ஓவர் சென்டிமெண்டும். மிகக்குறைவான திரையரங்குகளிலேயே இப்படம் வெளியாகியிருக்கிறது.
 
ஜாக்சன்துரை பேய் படம் என்பதாலும், படத்தில் நடித்திருப்பவர்களின் கெட்டப் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருப்பதாலும் இந்தப் படத்துக்கு ஓரளவு ஓபனிங் கிடைக்க வாய்ப்புள்ளது.
 
மேலே உள்ள தமிழ்ப் படங்களுக்கு வில்லனாக இருப்பது, இன்று திரைக்கு வந்துள்ள ஆங்கிலப்படம் த லெஜென்ட் ஆஃப் டார்ஜான். 3டி, 2டி என்று ஒருவிதங்களில் இப்படம் திரையிடப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில். பல திரையரங்குகளில் தமிழ்ப் படம் ஒரு காட்சியும் டார்ஜான் நான்கு காட்சிகளும் ஓட்டப்படுகிறது. இந்த வாரம் தமிழ்ப் படங்களை பின்னுக்கு தள்ளி டார்ஜான் எளிதாக சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
 
இன்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் த பிஎஃப்ஜி படமும் வெளியாகியிருக்கிறது. மல்டி பிளக்ஸ்களில் இதற்கு கூட்டம் அம்மும். 
 
இந்த வாரம் டார்ஜானின் பலத்துக்கு முன்னால் தமிழ்ப் படங்கள் முட்டுகுத்தும் நிலை ஏற்படலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்