நடிகர்களை கொலை செய்யும் ஃபேஸ்புக்

ஜே.பி.ஆர்.

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (19:10 IST)
இணையம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என தொழில்நுட்பம் வளர வளர தொல்லைகளும் அதிகரிக்கிறது. அவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பிரபலங்கள். அதிகமும் சினிமா பிரபலங்கள்.
 

 
நடிகைகள் எங்கு சென்றாலும், பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்திருப்பார்களோ என்ற அச்சத்துடனே இருக்க வேண்டியிருக்கிறது. அதைவிட மோசம், அடிக்கடி வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் நட்சத்திரங்களை படுகொலை செய்வது. 
 
கே.ஆர்.விஜயா இறந்துவிட்டதாக நேற்று வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதாமே என்று போன் செய்தால், கே.ஆர்.விஜயாவே எடுத்து, நான் நலமாக இருக்கிறேன் என்கிறார். இந்த சாவு வதந்திக்கு ஆளாகாத நட்சத்திரங்கள் இல்லை.
 
கொஞ்சநாள் முன்பு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இறந்துவிட்டதாக தகவல் பரவியது. பிறகு அவர், நான் நல்லாத்தான் இருக்கேன் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்ல வேண்டி வந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த கமல், இந்த மாதிரி வதந்திக்கெல்லாம் அசந்துராதீங்க. என்னையையும் யேசுதாஸ் அண்ணனையும் ஒரே நேரத்தில் இந்த மாதிரி கொலை செய்தார்கள் என்றார்.
 
சமீபத்தில் கேரளாவில் நடந்த விருது விழா ஒன்றில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். பிகே படத்தில் வருவதைப் போன்று ஒருவர், வேற்றுகிரகத்திலிருந்து வருவது போலவும், காமெடி நடிகர் பைஜு அவருக்கு இங்குள்ள நடிகர்களை அறிமுகப்படுத்துவது போலவும் நிகழ்ச்சி. 
 
நிகழ்ச்சியின் நடுவில், மேடையில் நடிகர் சலீம் குமாரைப் போன்று வேடமணிந்த ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி, நான் நல்லாயிருக்கேன் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். வேற்றுகிரகவாசிக்கு சந்தேகம். ஏன் இவர், நல்லாயிருக்கேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்? 
 
பைஜு அதற்கு விளக்கமளிப்பார்.
 
நல்லாயிருக்கேன் என்று அடிக்கடி சொல்கிறவர் வேறு யாருமில்லை, நடிகர் சலீம் குமார்தான். பாவம் அவரை சமீபத்தில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பலதடவை சாகடித்துவிட்டார்கள். அவர் உயிரோடிருப்பதை இப்படித்தான் அவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்பார்.
 
சிரிப்பு நிகழ்ச்சி என்றாலும், சீரியஸாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது. இந்திய நடிகர்களில் வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர், மலையாள நடிகர், சலீம் குமார்தான். அவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், முதலில் இணையத்தில் அவரை சாகடித்ததைப் பற்றிதான் கேட்பார்கள். அந்தளவுக்கு இந்த சாகடிப்பு வியாதி முற்றிவிட்டது.
 
போத்தீஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக கமலுக்கு 16 கோடிகள் தரப்பட்டது என்று இணையத்தில் கமல் சொல்லாமலே செய்தி வெளியானது. அதனை அவர் ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்கு தந்ததாகவும் இணையத்தில் செய்தி பரப்பப்பட்டது. பிறகு அதனை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் மறுத்தது. 
 
இந்த செய்திகள் எதுவும் சம்பந்தப்பட்ட கமலிடமிருந்து வந்தவை அல்ல. முகம் தெரியாத சிலரால் பரப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், கமல் நன்கொடை தந்தார் என்றதும் அவரை புகழ்ந்தவர்களே, அவர் தரவில்லை என்றதும், அதானே பார்த்தேன், கமலாவது எச்சில் கையால் காக்கா ஓட்டுவதாவது என்றனர்.
 
இந்த போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் கமலுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? 
 
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் தகவல்களை உண்மை என நம்பி ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. இணையத்துக்கு வெளியே ஒரு யதார்த்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பது அவ்வப்போதாவது இவர்கள் நினைவுக்கு வந்தால் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்