சென்ற வார படங்களின் வசூல் ஒரு கண்ணோட்டம்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:27 IST)
பணத்தட்டுப்பாட்டை மீறி சென்னையில் அச்சம் என்பது மடமையடா ஐந்தரை கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. அதேநேரம் சின்னப் படங்கள் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் கலெக்ஷனையும் பெறவில்லை. இந்தி, ஆங்கிலப் படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இன்னமும் உறுதியாக உள்ளன.


 
 
இந்திப் படமான ஃபோர்ஸ் 2 சென்ற வார இறுதியில் முக்கால் லட்சத்தை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை மாநகர வசூல், 28.34 லட்சங்கள். ஜான் ஆபிரஹாம் படத்துக்கு இந்த வசூல் தாராளம்.
 
ஆங்கிலப் படமான ஃபென்டாஸ்டிக் பீட்ஸ் அண்ட் வேர் டூ ஃபைண்ட் தெம் திரைப்படம் சென்னையில் இன்னும் நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது. இந்தப் படம் சென்ற வார இறுதியில் 14 லட்சங்களை வசூலித்தது. முதல் 10 தினங்களில் இதன் சென்னை வசூல் மட்டும், 79 லட்சங்கள்.
 
கதை இல்லாமல் அர்த்தமற்ற காமெடியுடன் களமிறங்கிய கடவுள் இருக்கான் குமாரு கடந்த வார இறுதியில் 27 லட்சங்களை வசூலித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல், 1.50 கோடி. இதற்கு மேல் இந்தப் படம் சில லட்சங்களை வசூலிக்கலாம். 1.75 கோடிக்குள் படம் முடங்கிப் போகும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
 
கௌதமின் அச்சம் என்பது மடமையடா ரஹ்மானின் இசையால் ரசிகர்களை வசமாக்கியது. கடந்தவார இறுதியில் 32.14 லட்சங்களை வசூலித்த படம், இதுவரை 5.52 கோடிகளை சென்னையில் தனதாக்கியுள்ளது. கௌதம் ஒழுங்காக ஸ்கிரிப்ட் எழுதி படத்தை எடுத்திருந்தால் ரெமோ வசூலை இந்தப் படம் அனாயாசமாக தாண்டியிருக்கும். கௌதம் தெரிந்தே செய்த தவறால் படத்தின் மதிப்பு கீழிறங்கியதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
 
சென்ற வாரம் வெளியான ஷாருக்கானின் டியர் சிந்தகி திரைப்படம் முதல் 
3 தினங்களில் சென்னையில் 50 லட்சங்களை வசூலித்துள்ளது. ஷாருக்கானின் படம் சென்னையில் ஒரு கோடியை தாண்டும் என்ற நம்பிக்கையை இந்த மெகா ஓபனிங் தருகிறது.
 
முதலிடத்தில் டிகேயின் கவலை வேண்டாம். டிகேயின் முதல் படம், யாமிருக்க பயமே ஹிட்டானதால் கவலை வேண்டாம் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. வியாழன் வெளியான இந்தப் படம் வெள்ளி, சனி, ஞாயிறில் சென்னையில் 93.30 லட்சங்களை வசூலித்தது. வியாழனையும் சேர்த்தால் 1.24 கோடி. ஜீவா படத்துக்கு இது நல்ல ஓபனிங்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்