சினி பாப்கார்ன் - நகைச்சுவை நாயகர்களை தட்டி வைத்த 2014

ஜே.பி.ஆர்

சனி, 3 ஜனவரி 2015 (13:10 IST)
ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ்
 
கரகாட்டக்காரன் படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊருவந்து பாடலை கப்பல் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். கப்பல் படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டதால், அனுமதியில்லாமல் பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் ஷங்கர் உள்ளிட்ட கப்பல் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
ஒரு பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா இப்படி செய்யலாமா? அவர் நல்ல இசையமைப்பாளர். நல்ல மனிதரில்லை என இந்த நோட்டீஸை வைத்து சிலர் இளையராஜாவுக்கு மஞ்ச கடுதாசி போடுகின்றனர்.
இளையராஜா என்றில்லை. எந்தவொரு நபரின் கிரியேட்டிவிட்டியை அனுமதியில்லாம் பயன்படுத்துவது தவறு. அப்படி பயன்படுத்தினால் அதை தட்டிக் கேட்க வேண்டிய உரிமையும், கடமையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உண்டு. அதைத்தான் இளையராஜா செய்துள்ளார்.
 
அப்படியானால் கப்பல் படம் சம்பந்தப்பட்டவர்கள் மீதுதானே தவறு?
 
அதுவும் இல்லை. குறிப்பிட்ட பாடலின் உரிமை அகி மியூஸிக் நிறுவனத்திடம் உள்ளது. அதனை முறைப்படி வாங்கித்தான் கப்பல் படத்தில் பயன்படுத்தினார்களாம்.
 
பிறகு ஏன் இளையராஜா நோட்டீஸ் அனுப்ப வேண்டும்?
 
அகி மியூஸிக்கிற்கும், இளையராஜாவுக்கும் கொஞ்ச காலமாகவே பனிப்போர் நடந்து வருகிறது. தன்னுடைய பாடல்களை, இசையை அகி மியூஸிக் உள்ளிட்ட  நிறுவனங்கள் விற்பனை செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளார் இளையராஜா. அப்படியிருக்க, ஊருவிட்டு ஊருவந்து பாடலை அகி மியூஸிக் எப்படி விற்கலாம் என்பது இளையராஜா தரப்பினரின் வாதம்.
 
அந்தத் தடைக்கு முன்பே பாடலை வாங்கிவிட்டோம் என கப்பல் தரப்பு முணுமுணுக்கிறது.
 
புத்தாண்டு ஒருமார்க்கமாகதான் தொடங்கியுள்ளது.

நகைச்சுவை நாயகர்களை தட்டி வைத்த 2014
 
ஒரு ஹீரோவால் நகைச்சுவை நடிகர்களின் பாத்திரத்தை ஏற்க முடியாது. அதேபோல் நகைச்சுவை நடிகர்களால் ஹீரோவின் பாத்திரத்தை நிரப்ப முடியாது. அந்தவகையில் ஒரு படத்துக்கு இருவருமே முக்கியமானவர்கள்.
 
இந்த உண்மையை ஒத்துக் கொள்ளாமல் நகைச்சுவை நடிகர்கள் அவ்வப்போது பாத்திரமறியாது பிச்சையிடுவதுண்டு. சென்ற வருடம் அப்படி தடுமாறியவர்கள் நான்கு பேர்.
நகைச்சுவை வேடம் கிடைப்பதே ஒரு பாக்கியம் என்றிருக்க வேண்டிய விடிவி கணேஷ் சென்ற வருடம், இங்க என்ன சொல்லுது படத்தில் ஹீரோவானார். கண்ணா லட்டு தின்ன ஆசையா மாதிரி சிம்புவை கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து காசை அள்ளலாம் என்று நினைத்தனர். மறுபடி மறுபடி ஏமாற தமிழர்கள் தயார். எருமையை காட்டி யானை என்றால் நம்புவார்கள். ஈயை காட்டினால்...? படம் பணால். இனி ஹீரோ என்றாலே கரகர குரலோன் கண்ணீர் வடிப்பார்.
 
ஒருமுறை வெற்றி பெற்றதால் அதையே தொடர்ந்து செய்ய முனைகிறார் வடிவேலு. இம்சை அரசன் மாதிரி நடிக்க மட்டும் செய்தால் பரவாயில்லை. இயக்குனர் வேலையில் மூக்கை நுழைத்து, நானும் ஹீரோதான் என்று படம் நெடுக அறிவுரை மழை பெய்தால்? கடலை தாண்டும் என்று நினைத்த தெனாலிராமன் தெப்பம் கண்மாயைகூட கடக்கவில்லை.
 
விஜய் டிவியில் காம்பியராக இருந்த சிவ கார்த்திகேயன் ஹீரோவாகும் போது, அதே டிவியில் காமெடி நாயகனாக இருந்த நான் ஹீரோவாகக் கூடாதா? விதி யாரைவிட்டது? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானமும் ஹீரோவானார். தனது ஊறுகாய் ஜோக்கை வைத்து ஒப்பேற்றலாம் என்று நினைத்தவருக்கு முதல் படத்திலேயே அடி. சாதத்துக்கு சைடிஷ்ஷாக ஊறுகாயை வைக்கலாம். அதையே மெயின் டிஷ்ஷாக்கினால்...?
 
கடைசியாக விவேக். அவர் ஹீரோவாக தொடங்கிய எந்தப் படமும் எல்லைக் கோட்டை எட்டியது இல்லை. நான்தான் பாலா ரிலீசானதே ஒரு சாதனைதான். சார், நீங்கதான் ஹீரோ என்று இனி யாராவது விவேக்கின் வீட்டுக் கதவை தட்டினால், அவர்தான் விவேக்கின் முதல் எதிரி. 
 
நகைச்சுவை என்பது அரிய கலை. நகைச்சுவை செய்யத் தெரிந்தவனே ஹீரோ. அந்தவகையில் மேலே சொல்லப்பட்ட நால்வருமே நகைச்சுவை நாயகர்கள்தான். இதைவிட மேலானதில்லை ஹீரோ வேஷம்.
 
இந்த வருடத்திலாவது பாத்திரமறிந்து பிச்சையிடுவார்கள் என நம்புவோம்.

பிகேயை லிங்கா தாண்டிடுச்சு
 
இந்தியாவில் வெளியான படங்களில் லிங்காதான் டாப் கலெக்ஷன். யுஎஸ்ஸில் பிகேயை தாண்டிய வசூல் என்றெல்லாம் ஏறுக்கு மாறாக அடித்து விடுகிறார்கள்.
லிங்கா நல்ல வசூல் என்றால் நம்பிவிட்டு போகப்போகிறார்கள். அதைவிட்டு ஆல் இந்தியா டாப் என்றால்...? இதனை சில ஊடகங்களே முன்னின்று செய்வதுதான் விளங்கவில்லை. 
பிகே 15 தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 42 கோடிகள் வசூலித்துள்ளது. மற்ற வெளிநாடுகளிலும் சேர்த்து 129 கோடிகள். இதில் அரைவாசியை லிங்கா தொடவில்லை என்பதுதான் நிதர்சனம். தமிழ்ப் படங்களில் லிங்காதான் டாப் என்றால் அதில் நியாயமிருக்கிறது. அதைவிட்டு அநியாயத்துக்கும் லிங்காதான் இந்தியாவின் டாப் ஸ்கோரர் என்று டமாரமடிப்பது... யாரை திருப்திப்படுத்த?

வெப்துனியாவைப் படிக்கவும்