சினி பாப்கார்ன் - பாலியல் பிரச்சனையில் திரையுலகம்

வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:36 IST)
பாவனா பாலியல் வன்முறை பிரச்சனையில் தென்னிந்திய திரையுலகம் ஒன்று கூடியிருக்கிறது. பாலியல் வன்முறைக்கு எதிராக ரசிகர் மன்றங்கள் போராட வேண்டும் என்று நடிகர் சங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது. நடிகன் சொன்னதும் செய்கிற ரசிகர்கள் காலாவதியாகிவரும் நிலையில், நந்தினி போன்ற பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போது கண்டு கொள்ளாத நடிகர்கள், இதற்கு மட்டும் ரசிகர்களை அழைப்பது ஏன்? மத்தவங்களுக்கு வந்தா தக்காளி  சட்னி, உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா என்று இணையத்தில் நடிகர்களை கலாய்க்கிறார்கள்.

 
பாவனாவின் அந்த இரண்டரை மணி நேரம் என்று தலைப்பு வைத்து வாசகர்களுக்கு தூண்டில் போடுகின்றன பத்திரிகைகள். கவிஞர் மாலதி மைத்ரி ஒட்டு மொத்த ஆண்களின் குறிகளையும் அறுக்க வேண்டும் என்று ஆவேசத்தோடு கிளம்பியுள்ளார். இதில் நல்ல அம்சம் என்று பார்த்தால், நடிகைகள் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச வந்திருப்பது.
 
இந்தி சினிமாவில் நடிக்கும் பெண்கள் பாலியல் தொல்லைகள் குறித்து ஏற்கனவே பேச ஆரம்பித்துவிட்டனர். ஆண்கள்கூட தங்களுக்கு பாலியல் தொல்லைகள் உண்டு என்று பேசியிருக்கிறார்கள். எனினும் நூற்றில் பத்து சதவீதம்தான் வெளிவருகிறது. மீதி அப்படியே அமுங்கிவிடுகின்றன. தவிர, ஆணும், பெண்ணும் முன்னே பின்னே இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்ற முற்போக்கு ஏரியாவுக்கு இந்தி திரையுலகம் வந்துவிட்டதால், அங்கு பாலியல் தொல்லை பெருமளவு குறைவு. விரும்பி வரும் போது யார் யாருக்கு தொல்லை தர வேண்டும்.
 
ஆனால், இதில் கவலைதரும் அம்சம், திரையுலகுக்குள் பெருகிவரும் ரவுடிகளின் ஆதிக்கம். இந்தி திரையுலகில் மும்பை தாதாக்களின் பணம் நுழைந்த பிறகு முன்னணி நடிகர்களே மிரட்டப்பட்டனர். பட வியாபாரம், நடிகர்கள் கால்ஷீட் உள்பட அனைத்திலும் தாதாக்களின் ஆதிக்கம் ஓங்கி ஒருகட்டத்தில் பாலிவுட் டே மாஃபியா ஏரியாவாக மாறியது.
 
மலையாள சினிமாவில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் புகுந்திருக்கிறார்கள். இவர்களின் வழிமுறைகள் ஆபத்தானவை. மிரட்டல்தான் இவர்கள் வைக்கும் முதல் அடியே. அதன் விளைவுகளில் ஒன்றுதான் பாவனா மீதான பாலியல் வன்முறை.
 
சினிமாவில் ஊடுருவும் இதுபோன்ற மாஃபியாக்களை யார் கட்டுப்படுத்துவது? அரசு இதில் என்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் திரைத்துறையில்உள்ளவர்கள்தான் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அவர்கள் பிரச்சனை  அவர்களுக்குத்தானே அதிகம் தெரியும்.
 
தமிழ் சினிமாவில் வேறு பல பிரச்சனைகள். இப்போதும் திருட்டி டிவிடிதான் அனைத்துக்கும் காரணம் என்று சர்வரோக  நிவாரணிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கு கட்டணம் உள்ளிட்ட எதிலும் தமிழக அரசின் கவனம் சென்றதாக தெரியவில்லை. கட்டணத்தை பல வருடங்களாக உயர்த்த அரசு அனுமதிக்கவில்லை என்று கூறியே அரசு நிர்ணயித்ததைவிட  அதிக தொகைக்கு டிக்கெட் விற்கிறார்கள். பிறகு எப்படி ஜனம் திரையரங்குக்கு வரும்?
 
நடிகைகளின் கவர்ச்சியை பார்க்கத்தான் ரசிகன் தியேட்டருக்கு வருகிறான். அதனால் நடிகைகளின் தொடை தெரியும்படிதான்  உடை தருவேன் என்று சமீபத்தில் இயக்குனர் சுராஜ் கூறி நடிகைகளிடம் மாத்து வாங்கினார். இதுபோன்ற மனநிலையை முதலில் இயக்குனர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 
பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர். இதில் ஒரு தரப்பு முயற்சியை  கைவிட்டாலும் எல்லாம் அதோ கதிதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்