சினி பாப்கார்ன் - ஏம்மா இவ்ளோ கேட்கிறீங்களேம்மா

ஜே.பி.ஆர்

சனி, 23 மே 2015 (14:28 IST)
நயன்தாரா கேட்ட 3 கோடி
 
சிரஞ்சீவி நடித்த 149 -வது படம் 2007 -இல் வெளியானது. 150 -வது படம் எப்போது வரும் என்று எட்டு வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஒருவழியாக இப்போது படத்தின் பெயரையும், இயக்குனரையும் அறிவித்திருக்கிறார். பெயர், ஆட்டோ ஜானி, இயக்கம் பூரி ஜெகன்நாத். 
 
150 -வது படம், எவ்வளவு சுமாராக இருந்தாலும் கல்லா கட்டும். அதனால் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார். லாபம் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கே வரவேண்டும். சொந்த குடும்பம் சிந்தாபாத்.
இந்தப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள். சமீபமாக தெலுங்குப் படங்களில் நடிக்கவில்லை எனினும் நயன்தாராவுக்கு ஆந்திராவில் மவுசு இருப்பதையே இது காட்டுகிறது. சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க அதிகமில்லை, 3 கோடி கேட்டிருக்கிறார் நயன். மொத்த திரையுலகும் இதுகேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறது. ஆனால், முழுக்கதையும் கேட்டால் நயன்தாராவின் தன்னம்பிக்கையை பாராட்டுவீர்கள்.
 
சேகர் கம்மூலா இயக்கத்தில் இந்தி கஹானியின் தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடித்தார் அல்லவா. அந்தப் படத்தின் புரமோஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை. படம் தோல்வியடைய, நயன்தாரா புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததை காரணம் காட்டி தெலுங்கு திரையுலகம் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. ஆந்திரா இல்லைன்னா தமிழ்நாடு என்று தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆந்திராவிலிருந்து யார் வந்தாலும் கதவடைப்புதான். 
 
இந்நிலையில்தான் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க அழைத்தார்கள். கால்ஷீட் வேண்டுமென்றால் 3 கோடி. இல்லை என்றால் நஷ்டம் எனக்கில்லை என்ற கணக்கில்தான் எவ்வளவு பெரிய தொகையை கேட்டிருக்கிறார். 
 
நடிகர்கள் ஆதிக்கம் மிகுந்த துறையில் நயன்தாரா போல் ஒருவராவது இருக்கிறாரே.

எப்பிடி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே
 
பாலசந்திரமேனனுக்கு கேரளாவில் மலையாள பாக்யராஜ் என்றே பெயர். பாக்யராஜ் இங்கு கொடி நாட்டிய காலத்தில் மலையாளத்தில் பாலசந்திரனின் படங்கள் தாறுமாறாக ஓடின. இருவரின் படங்களின் மணமும் குணமும் ஒன்றுபோல். 
இவர் நடித்த அம்மயாண சத்தியம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிப்பதாக இருந்து பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை ஏனோ பிசகியது. அம்மயாண சத்தியம் தமிழுக்கு வரவில்லை. அதை மனதில் வைத்து கமல் எடுத்ததுதான் அவ்வை சண்முகி என்ற பேச்சு கேரளாவில் உண்டு. காரணம், அம்மையாண சத்தியம் படத்தில், நாயகி ஆண் போல் வேடமிட்டு ஹீரோவின் பேச்சிலர் வீட்டில் வேலை செய்வார். 
 
பாக்யராஜைப் போல் பாலசந்திரமேனனின் புகழும் கேரளாவில் மங்கி தற்போது அணையும் நிலையில் உள்ளது. அவர் கடைசியாக இயக்கியது 2008 -இல். படத்தின் பெயர், டா இங்கோட்டு நோக்கியே. தமிழில் மொழிபெயர்த்தால், டேய் இங்கப் பாரு. ஆனால், யாரும் படம் ஓடிய தியேட்டர் பக்கமே செல்லவில்லை.
 
முட்டி மோதி தட்டுத் தடுமாறி இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். பாலசந்திரமேனனின் இன்றைய நிலையை அப்படியே படத்தின் பெயர் பிரதிபலிக்கிறது. ஞான் சம்விதானம் செய்யும். தமிழில், நான் இயக்குவேன். 
 
நீங்க இயக்குவீங்க, ஜனங்க பார்ப்பாங்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்