2016 தமிழ் சினிமாவில் அசத்திய அறிமுக நடிகைகள்!!

சனி, 31 டிசம்பர் 2016 (15:07 IST)
வருடந்தோறும் பல டஜன் நடிகைகள் தமிழில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் இன்டஸ்ட்ரியில் பிடித்து நிற்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். சென்ற வருடம் வெள்ளமென வந்த அறிமுகங்களில் அட போட வைத்தவர்கள் யார்...?


 
 
ரித்திகா சிங்:
 
இறுதிச்சுற்றில் அறிமுகமான இந்த முன்னாள் பாக்சிங் சாம்பியன் அழகிலும், திறமையிலும் கிறங்கடித்தார். உடனடியாக இறுதிச்சுற்றின் தெலுங்கு ரீமேக், விஜய் சேதுபதியுடன் மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை என அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாயின. சமீபத்திய தகவல், அரவிந்த்சாமியுடன் ரித்திகா சிங் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வருடத்தின் அசத்தலான அறிமுகம் இவரே.
 
மடோனா செபஸ்டியன்:
 
பிரேமம் படத்தில் இறுதியாக வந்து கவனம் ஈர்த்தவர். காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம். எல்லா மலையாள நடிகைகளையும் போல சுட்பமான உணர்வுகளை அனாயாசமாக முகத்தில் கொண்டு வருகிறார் மடோனா. காதலும் கடந்து போகும் படத்தை இவரது நடிப்பு தாங்கியது என்றே சொல்லலாம். விஜய் சேதுபதியுடன் கே.வி.ஆனந்தின் கவண் படத்தில் நடித்து வருகிறார்.
 
மஞ்சிமா மோகன்:
 
நடித்தது ஒரு படம்தான்... ஆனால், ரஹ்மான் இசையில் அமைந்த பாடல்களும், கௌதமின் இயக்கமும், சிம்புவின் ஜோடி என்னும் தகுதியும் மஞ்சிமாவை இளைஞர்கள் மறக்க முடியாத நடிகையாக்கியது. விக்ரம் பிரபு படம் உள்பட இரு படங்களில் நடித்து வருகிறார்.
 
அருந்ததி நாயர்:
 
சைத்தான் படத்தில் அருந்ததி நாயர் அறிமுகமானார். அந்தப் படத்தில் அதிகம் நடித்ததும், அதிகம் பேசியதும் அருந்ததியின் விழிகள்தான். முதல் படத்திலேயே வெயிட்டான ரோலை அனாயாசமாக செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். வாய்ப்புகள் அருந்ததிக்கு வரிசைகட்டி வருகின்றன.
 
அனுபமா பரமேஸ்வரன்:
 
பிரேமம் படத்தில் அனுபமாவின் சுருள்முடி அழகிற்கு இளைஞர் உலகம் அடிமையானது. அவரை கொடி படத்தில் அள்ளிக் கொண்டு வந்தார் தனுஷ். சின்ன வேடம்தான், படியவாரிய தலைமுடிதான்... ஆனாலும், கிடைத்த கேப்பில் திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் அனுபமா. இந்த வருடம் அனுபமாவை மேலும் பல படங்களில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு அமையும்.
 
இவர்கள் தவிர கிடாரி படத்தில் நடித்த நிகிலா விமல், பலே வெள்ளையத்தேவாவில் அறிமுகமான மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, வீர சிவாஜியில் நாயகியாக அறிமுகமான ஷாம்லி என்று பலர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்களில் யார் நின்று நிலைப்பார்கள் என்பது காலத்தின் கையில்.

வெப்துனியாவைப் படிக்கவும்