எட்டு விதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள். அவர்கள் ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர், மட்டுமின்றி ஆதிசைவர்கள் அறுபத்தி நான்கு விதமான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளார்கள் என புராணங்கள் கூறுகின்றன.
பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகா ஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப் போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர். எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும் போதும் பைரவ பூஜை செய்வார்கள்.
சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.