மாதம் தோறும் திரியோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். சிவபெருமான் ஆறுகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என்பதால் இந்த சனி பிரதோஷம் மகா பிரதோஷம் ஆகிறது. இந்த பிரதோஷத்தில் ஈசனையும், சனீஸ்வரனையும் சேர்த்து வழிபடுவதால் இந்த பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
ஒரு சனிப்பிரதோஷ விரதமானது, ஆயிரம் சாதாரண பிரதோஷ விரதத்திற்கு சமம் என்பது தான் ஆன்மிக நம்பிக்கை. இந்தப் பிரதோஷ காலத்தில் நந்திக்கும் சிவனுக்கும் விளக்கேற்றி வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் சகல துன்பங்களும் நீங்கும். நந்திக்கும் சிவனுக்கும் திராட்சை மாலை வில்வ மாலை அணிவிப்பது இன்னும் சிறந்தது. மகா பிரதோஷத்தில் ஈசனை வழிபடும்போது இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சனி பிரதோஷத்தில் செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பயனை கொடுக்கும். விரதம் இருக்கும் முறை பிரதோஷ தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அந்த ஈசனின் நாமத்தை சிறிது நேரம் உச்சரித்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும்.
பிரதோஷ தினத்தன்று விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 6 மணி வரை உணவு ஏதும் அருந்தாமல் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. அவரவர் உடல்நிலையைப் பொருத்து விரதத்தை மேற்கொள்ளலாம்.
பிரதோஷ நேரமானது மாலை 4.30 மணிக்கு தொடங்குகின்றது. அந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் நடைபெறும் போது சிவனை நினைத்து “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கூறி ஆலயத்தில் சிவனை வழிபட வேண்டும்.
நந்தியின் இரண்டு கொம்பிற்கும் இடையே சிவபெருமான் எழுந்தருளி நடனமாடும் நேரம் தான் இந்த பிரதோஷ காலம். நாம் சிவபெருமானை, பிரதோஷ காலத்தில் நந்தியின் இரண்டு கொம்பிற்க்கும் இடையே பார்த்து தரிசிப்பது சிறப்பானது. இந்த பிரதோஷ கால விரதமானது நம் வாழ்விற்கு அனைத்து விதமான நலன்களையும் தேடித்தரும்.