ராம நவமியன்று கடைப்பிடிக்கவேண்டிய விரதமுறைகள் என்ன...?

மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. 

பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
 
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் இராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.
 
இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது.
 
ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல்  வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.
 
ராம நவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம்  செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 
சாதம், பாயாசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று  உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்