பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள்.
மிருகபலமும், தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே.
தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும்.
இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார். தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.