நம்மைவிடப் புலனறிவு குறைந்தவை பறவைகள். அவை அதிகாலையில் நீராடித் தன்னின அரசனான கருடபகவானைப் பார்க்கக் கோயிலுக்குச் சிறகடித்துப்போகிற சத்தம் கேட்கிறது. மனிதர்களின் துயில் கலைக்கச் சங்கும் ஊதப்படுகிறது. எனவே எல்லோரும் எழுந்திருங்கள். நச்சுப்பாலைத் தர நினைத்த பூதகியின் ரத்தத்தையே உறிஞ்சிக்குடித்துக் கொன்றார்.
நல்லவர்களுக்குத் துயரம்தர விரும்புபவர்களும், தருபவர்களும் அழிவார்கள் என்பதை உணர்த்துகிறார் கண்ணபிரான். தன்னைக் கொல்லப் பெரிய வண்டிச்சக்கர வடிவில் வந்த அசுரனைத் தன் மலர்க்காலால் எட்டி உதைத்து உடைத்தவர். உள்ளத் தூய்மையுள்ளோர், பாம்பின் மீது படுத்தாலும் நித்திரை வரும்.
அவர் சர்ப்பங்களின் ராஜனான ஆதிசேசன் மீது சயனம் கொள்கிறவர். கருடனும், சர்ப்பமும் ஜென்ம எதிரிகள். பெருமாள் இருவரையும் பக்தர்களாகக் கொண்டதுதான் சிறப்பு. அவரை "ஹரி ஓம்' என்று முனிவர்களும், யோகிகளும் உச்சரித்து உயர்கின்றனர். அதைப்போல் நாமும் செய்வோம்.