சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோம வாரம் திங்கட்கிழமை, தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள்.
நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும். நன்மையெல்லாம் பெருகும்.
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.