ஆஞ்சநேயரின் அவதாரங்கள் பற்றிய சில அரிய தகவல்கள் !!

சனி, 7 மே 2022 (18:22 IST)
நவ வியாக்ரண பண்டிதன் என்று அழைக்கப்படும் ஹனும அவதாரங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.


பஞ்சமுக ஆஞ்சநேயர்: ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக முக்கியமாக அமைந்திருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரமாக இருக்கிறது.

நிருத்த ஆஞ்சநேயர்: ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது ராமனுக்கு உதவிய அனுமன் போரிடுவது போல பாவனையோடும், உக்கிரமாகவும் காட்சி கொடுக்கின்றார். இத்தகைய தோற்றத்தில் ஹனுமனை வணங்குபவர்களுக்கு எத்தகைய இடர்கள் இருப்பினும் நொடியில் நீங்கும் என்கிற ஐதீகம் உண்டு.

கல்யாண ஆஞ்சநேயர்: சஞ்சீவி மலையை கையில் ஏந்திக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்த பொழுது, அவருடைய வியர்வைத்துளி சமுத்திரத்தில் விழுந்து அதை ஒரு மீன் வடிவில் இருந்த தேவகன்னி விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேவ கன்னிகைக்கு அழகிய மகன் ஒருவன் பிறந்தான். அவன் பெயர் மகரத்வஜன். சுவர்ச்சலா என்கிற அந்த தேவ கன்னிகையை பின்னர் ஹனுமன் மணந்ததாக கதை உண்டு. கருத்தொருமித்த தம்பதிகளாக இருந்த இவர்களை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

பால ஆஞ்சநேயர்: பாலகனாக இருக்கும் ஆஞ்சநேயர் உடைய வடிவமே பால ஆஞ்சநேயர் வடிவம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வளவு சுட்டி தனமாக இருந்தாரோ அதே போல அஞ்சனையின் மகனாக இருக்கும் இவரும் ரொம்பவே சுட்டி தனத்தோடு செல்லமாக வளர்ந்து வந்தவர் ஆவார்.

வீர ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயருக்கு, ஜாம்பவான் என்பவர் அவரது பிறப்பு பற்றிய விஷயத்தை கூறி ஞாபகப்படுத்தினார். அதன்பின் அவர் எடுத்த விஸ்வரூப தோற்றமே வீர ஆஞ்சநேயர் ஆகும். வீரம் மிகுந்த இந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு எவரையும் எதிர்கொள்ளும் துணிச்சல் தன்னாலே வந்துசேரும்.

பக்த ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயரை வணங்கி வரும் பக்தர்களாகிய நாம், ராம நாமத்தை உச்சரித்து வழிபடுவது வழக்கம். ராமனுடைய நாமம் ஒலி, ஒளி வடிவத்தில் எங்கு தென்பட்டாலும், கேட்டாலும் ராமரே வந்திருப்பதாக நினைத்து ஆஞ்சநேயர் வணங்குவார்.

யோக ஆஞ்சநேயர்: ராமநாமம் பூலோக வாசிகளால் உச்சரிக்க படுவதை ஹனுமன் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் இன்புற்று, தன்னை யோக நிஷ்டையில் அமர்த்திக் கொண்டு தியானத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இதுவே யோக ஆஞ்சநேயர்.

சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர்: ராவணனைக் கொன்ற ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. இதனைப் போக்க சிவபூஜை செய்ய வேண்டும். இதனால் சிவலிங்கத்தை காசிக்கு சென்று கொண்டு வர உத்தரவிட்டார் ராமர். ஆனால் உரிய நேரத்தில் அனுமனால் லிங்கத்தை கொண்டு வர முடியவில்லை, எனவே சீதை கடல் மண்ணை கொண்டு லிங்கம் செய்து பூஜையை முடித்து விட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ஆஞ்சநேயரின் துயர் தீர்க்க, அவர் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து மீண்டும் பூஜை செய்தார் ராமர். ராமர் பிரதிஷ்டை செய்து ஆஞ்சநேயர் வணங்கும் இந்த அபூர்வ கோலத்தை சிவ பிரதிஷ்டை ஆஞ்சநேயர் என்று கூறுவதுண்டு.

சஞ்சீவி ஆஞ்சநேயர்: ராமருக்கும், ராவணனுக்கும் இடையேயான போரில் நஞ்சு தடவிய அம்பை எய்ததால் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்துவிட்டார். அவரின் உயிர் காக்க விபீஷணர், ஆஞ்சநேயரை சஞ்சீவி மலைக்கு சென்று மூலிகையைப் பறித்து வருமாறு கூறினார். அதனால் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார் ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையுடன் பறந்து வரும் இந்த தோற்றமே சஞ்சீவி ஆஞ்சநேயர் தோற்றம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்