கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள்.
"ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.
ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன்.
நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனிபகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்ய வேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதையாகிய பிரஜாபதி இருப்பார்.