எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா...?

ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள். 
யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச்  சொல்லியிருக்கிறார்கள், பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தூல பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. 

யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்கும்மாகிவிடுகிறது.
 
பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும்  என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.
 
குருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.
 
ஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது “ஓம்’ என்ற சொல். அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்’ என்ற ஒலியும், அதன்  நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. ‘அ’ பிரம்மனையும், ‘உ’ விஷ்ணுவையும், ‘ம’ ருத்ரனையும், ‘ம்’ சக்தியையும், அதன் நாதம்  சிவ பரம்பொருளையும் குறிக்கும்.
 
இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக்  குறிப்பது “ஓம்’. கலைஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக  உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
 
எனவே தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது’ என்று பொருள். ஆம்… கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர்  இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்