உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்.
வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.
இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ளவேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும்.
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.