சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்ட அன்னை மஹா வாராஹி !!
அன்னை மஹா வாராஹி சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள்.
சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும், தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள்.
ஸ்ரீ வாராஹி வழிபட சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை. ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.
ஸ்ரீ வாராஹி வாக்கு சித்தி அருள்வதில் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியை போலவே முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்க கூடாது. எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ”எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு” வேண்டி வழிபட வேண்டும்.
ஸ்ரீ வாராஹி எலும்பின் அதி தேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும்.செல்வம், அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மனவலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.
எல்லா ஜெபங்களுக்கும் கிழக்கு நோக்கியும், எதிர்ப்புகள் தீர தெற்கு நோக்கியும் அமர்ந்து ஜெபிக்கலாம். ஆலயங்களில் உள்ள ஸ்ரீ வாராஹி தேவிக்கு சிவப்பு நிற ஆடைகளை அணிவிக்க காரியத் தடைகள் நீங்கும்.
வெள்ளைப் பட்டு அணிவிக்க வாக்கு வன்மை, கல்வியில் மேன்மை உண்டாகும். மஞ்சள் பட்டு அணிவிக்கக் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும், திருமணத்தடை நீங்கும். பச்சைப் பட்டு அணிவிக்கச் செல்வப்பெருக்கு ஏற்படும். நீலவண்ணப் பட்டு அணிவிக்க எதிர்ப்புகளில் வெற்றி கிட்டும்.
விளக்கிற்கு தாமரைத்தண்டு திரி மிகச் சிறந்தது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் பஞ்சமி, அஷ்டமி ,சதுர்த்தசி திதியில் வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.