சப்தமாதர்களில் ஒரு தேவதையாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. நிகரற்ற அருளும் இணையற்ற ஆற்றலும் கொண்ட வாராஹியைப் பற்றியும், அவளின் பல்வேறு வடிவங்களை பற்றியும் மந்திர சாஸ்திர நூல்கள் பலவாறு பாராட்டிப் பேசுகின்றன.
சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி மஹாத்மியம் சிலாகித்துச் சொல்கிறது. இவர்களில், இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் நீங்கும். அதாவது எதிரிகள் பயம் இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவாள் என்பது ஐதீகம்.
பஞ்சமி பஞ்சபூதேஸி என லலிதா ஸஹஸ்ரநாமம் இவள் பெருமை பேசுகிறது. பஞ்சமி பைரவி பாசாங்குசை என்று அபிராமி அந்தாதியில் அபிராமி பட்டரும் இந்த வாராஹியை போற்றுகின்றார். காட்டுப்பன்றியின் முகம், அழகிய பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சியளிப்பவள் இவள். எட்டு கைகளை இத்தேவி கொண்டிருக்கிறாள்.
தோல் எடுக்காத மிளகு சேர்த்த உளுந்து வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, நவதானிய வடை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் படைக்கலாம்.மாதுளம்பழம் மிகச் சிறப்பு.