கார்த்திகை சோமாவார நாட்களில் சிவ ஆலய வழிபாடு !!

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள் கிழமையில் இது  கடைப்பிடிக்கப்படுகிறது.

க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான்  அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு 'சந்திரசேகரர்' என்ற பெயரையும் ஏற்றார். 
 
சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள்.  அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
 
சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு  பெறுகின்றன. 
 
இந்த நாட்களில் சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி,  யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.
 
கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்